

இறைவன், மனிதனுக்குத் தந்த வரம், மரம்! அயல்நாடு சென்ற குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணனிடம் அந்நாட்டு அதிகாரி ஒருவர் பேசும்போது, ""நாங்கள் மரங்களை மிகவும் நேசிப்போம்'' என்றாராம். அதற்கு இராதாகிருஷ்ணன், ""நாங்கள் மரங்களை நேசிப்பதோடில்லாமல் வணங்கவும் செய்வோம்'' என்று கூறினாராம். ஆம், நம் பாரதத் திருநாட்டில் "மரங்கள்' வணக்கத்திற்குரியவை. இவ்வாறு வணக்கம் செய்யும் மரபை காலங்காலமாகத் தமிழர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியங்களே சான்று!
தமிழர் பண்டு தொட்டு அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கடம்பமரம், வாகைமரம், வில்வமரம், கொன்றைமரம் முதலிய பல்வேறு மரங்களை வணங்கி வந்திருக்கின்றனர் - வணங்கியும் வருகின்றனர். அதே போல் கோயில்களில் உள்ள மரங்களையும் தலவிருட்சமாகக் கருதி வணங்குவர். முருகன் கடம்பன் எனவும், சிவன் கொன்றை மரத்தோன் எனவும் அழைக்கப்பெறுவர். திருமால் ஆலமர இலையிலிருந்து உதித்தார் என்றும் கூறுவர். நெய்தல் நில பரதவர் பனையை வழிபட்டனர். பலராமன் பனைக் கொடியோன் எனப்பெற்றான்.
சங்க இலக்கியங்களில் சில மரங்கள் கடவுள் மரங்களாகக் காட்டப்படுகின்றன. மிக நெடுங்காலமாகக் கடவுள் அடிமரத்தை உடைய பெண்ணை மரத்தில் உறைந்து வருவதாகவும் அம்மரத்தடியில் பொது மக்கள் கூடும் இடமே - மன்றம் எனவும் நற்றிணை (303) குறிப்பிடுகிறது. ஆலமரம், கடவுள் மரம் (அகநா.270) எனப்பட்டது. கடவுள் ஆலம் என்றே புறநானூறும் (199), நற்றிணையும் (343) மொழிகின்றன.
சிவபெருமான் ஆலமரத்தின் கீழ் தெற்கு முகமாக அமர்ந்துள்ளதால் "தென்முகக் கடவுள்' என அழைக்கப்பட்டார். இதை "ஆலமர் செல்வர்' எனக் கலித்தொகை(83) கூறுகிறது. கடம்ப மரத்துக் கடவுளை வழிபட்டால் அக்கடவுள் கொடியோரை விரட்டும்; விலக்கும் என்பது நம்பிக்கை. அத்தகு கடவுள் நிலை பெற்ற கடம்பமரம் மன்றத்தில் இருந்தது என்பதை,
"மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப' (87)
என வரும் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. வேங்கை மரத்தையும், வயல்களை ஒட்டி வளர்ந்திருக்கும் வேங்கைமரக் கடவுளையும் வணங்கினால், வயல்கள் விளையும்; அவை காக்கப்பெறும் என்பதை,
"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகார் கழனி' (216)
என நற்றிணைக் குறிப்பிடுகிறது. வேப்பமரம், காளியம்மனின் மரமாகக் கருதப்படுகிறது. காளி கோயில் அனைத்தும், வேப்ப மரத்தையே தலமரமாகப் பெற்றிருக்கும்.
பக்கத்து நாட்டின் மீது போரிடச் செல்வோர் வேப்பமரத்தை வணங்கிச் செல்வர். போரில் பங்கேற்ற மறவர்கள் சிலர் விழுப்புண் பெறுவர். அவ் விழுப்புண்ணோடு வீரரை இரவில் தனியே விட்டால் அவர்களைப் பேய் பற்றும்; புண்ணும் ஆறாது என்றும் மக்கள் நம்பினர். எனவே, வீரர்கள் உறையும் இடத்தில் பெண்டிர் நாகசம்பங்கி (இரவம்) இலையையும் வேப்பிலையையும் செருகி வைத்திருந்தனர் என்று புறநானூறு(28) கூறுகிறது.
தமிழகச் சிற்றூர்களில் அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளர்ந்த இடங்கள் வழிபாட்டிற்குரிய இடங்களாகத் திகழ்கின்றன. அரசமரம் மணமகனாகவும், வேப்பமரம் மணமகளாகவும் உருவகிக்கப்பட்டு, அவ்விரு மரங்களுக்கும் திருமணமும் நடத்திவைப்பர். இம்மரத்தடியில் நாக உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். நல்ல மணவாளனைப் பெற நினைக்கும் பெண்டிர், இம்மரங்களைச் சுற்றிவந்து வழிபடுவர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. வழிபடு மரத்தின் சுற்றுப்புறத்தை மகளிர் கூட்டிப் பெருக்கித் தூய்மையாக்குவர், மாலை சூட்டி அழகுபடுத்துவர் என்பதை,
"ஆல முற்றங் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்'
(181)
என்கிறது அகநானூறு. ஊர் நடுவே இருந்த ஒரு கடவுள் மரத்தின் கிளையொன்றில் ஆண் பறவையும் பெண் பறவையும் பல்வேறு இடங்களுக்குச் சென்று முட்களையும் இன்னபிறவற்றையும் கொணர்ந்து வந்து சேர்ந்து கூடுகட்டின. எனினும், அது கடவுள் மரம் என்பதால் பெண்பறவை தன் துணையுடன் சேர்வதைத் தவிர்த்தது என்று,
"கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை' (270)
என அகநானூற்றுப் பாடல் ஒன்று நயத்தக்க நாகரிகமாய் நவில்கிறது. ஒரு காலத்தில் மக்களால் வழிபட்ட வனங்களோ அல்லது மரங்களோ பிற்காலத்து ஊரின் பெயராகி, பின் கோயிலின் பெயராகியிருக்கும் எனக் கருதுவதற்கு இன்றைக்குப் பல ஊர்களே சான்றாகத் திகழ்கின்றன. காலங்காலமாகத் தமிழர்களின் வாழ்வில் இரண்டறந் கலந்துவிட்ட இத்தகைய வணக்கத்திற்குரிய மரங்களை வணங்கி, வளர்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.