நிழலில் நீளிடைத் தனிமரம்!

""இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க'' ஞாயிறு காயும் வெங்கானத்தில், நிழலே இல்லாது நீண்ட பாதையில் ஒரு தனிமைப் பயணம்.
நிழலில் நீளிடைத் தனிமரம்!

""இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க'' ஞாயிறு காயும் வெங்கானத்தில், நிழலே இல்லாது நீண்ட பாதையில் ஒரு தனிமைப் பயணம்.

நாலா திசைகளிலும் நிழல் தரப் பச்சையாய் ஏதேனும் பார்வைக்கு அகப்படாதா என்று தேடியலுத்துத் தோற்கும் விழிகள்; தன் நிழலைத் தானே விழுங்கிக் கொண்டிருக்கும் உச்சிப்பொழுது இனி, புறப்பட்ட இடத்திற்கே போகவும் முடியாது; சேர வேண்டிய இடத்தின் தூரமும் தெரியாது; முன்னும் பின்னும் யாரும் வரக்காணோம். வழிப்பயணம், வாழ்க்கைப் பயணம் போல் தோன்றியது, நடைப்பயணம் மேற்கொண்ட அக்கவிக்கு!

ஈரப்பசையின்றி உலர்ந்த நாவசைத்துப் பாடவா முடியும்? அருவி நீராடுவது போல், வியர்வை நீரோடிக்கொண்டிருக்கும் உடலில், ஒற்றையாடையாய் ஒட்டியிருக்கும் உயிர் பற்றியிழுத்துப் பாதுகாக்கத் துடிக்கும் நெஞ்சு; அனலாய் உறைந்த காற்றைச் சுவாசித்துக் கனலும் நாசி. வறுமை பிடர் பிடித்து உந்த வெறுமை மலையினும் பெரிதாய் மனதுள் கனக்க, தள்ளாடும் கால்கள்.

திக்குத் தெரியாத காட்டினில், கவியின் தனிமைப் பயணம். வயது முதிர்ந்த ஒருவரிடம், கிளம்பியபோது, கேட்டுக்கொண்ட பாதை இப்போது மூன்று கிளைகளாய் முன் விரிகிறது. செல்ல வேண்டியது, சேர நாட்டுக்கா? சோழ நாட்டுக்கா? பாண்டிய நாட்டுக்கா? சிந்தனையோடு கால்களும் சே(ô)ர்ந்து நின்றுவிட்டன. எரிகிறது ஞாயிறு; கனல்கிறது மணல்;

இப்போது தேவை, இருக்க நிழல்!

முப்பெருஞ் சாலைகளை, அப்புறம் பார்க்கலாம் என்று வேறு திசையில் விழியெறிந்த போது, அடடா, அதோ, ஒரு குளிர் தரு! அது தரும் நிழலில், முன்னோடி மனது இடம்பிடித்துக் கொள்ள, உடம்பை இழுத்துக்கொண்டு, ஓடாத குறையாய், அதன் நீழலை அடைந்து நிம்மதியாகிறார் அவர்.

குளிர் காற்று; ஈர நிழல்; பறவையினங்களின் கீதம்; எதையும் நுகரவிடாமல் பசி தின்னுகிற வேளையில், உணவின் நறுமணம்; வருந்திசை நோக்க, அங்கு இருந்தவர்கள் அழைத்து விருந்து படைக்க, வயிறார உண்கிறார், புலவர். செம்புற்றின் ஈயலை, இனிய மோருடன் சேர்த்துச் சமைத்த புளிங்கறியின் சுவை, உயிரில் கலந்த உண(ர்)வாகிப் போகிறது.

""எங்கிருந்து வருகிறீர்?'' என்று கேட்பதற்குப் பதிலாக, ""பறம்புமலைக்குத் தானே பயணம்?'' என்கிறார்கள். பதில் தருமுன்பே, பாரி புகழ் பாடுகிறார்கள். செவியொடு சிந்தையும் நிறைய, புலவரின் பாதை மாறுகிறது; பயணம் பறம்பு நோக்கி ஏகுகிறது.

சென்றார்; பாரியைக் கண்டார்! வழியில் நிழல் தந்த மரம் மனிதமான புனிதத்தை உணர்ந்தார்.

புல்லோ, இலையோ, மலரோ, எது கொண்டு வழிபடுகிறார்கள் என்று கருதாமல், அடியவர்க்கு அருளும் கடவுள் போல, பாரியின் கைவண்மை கண்டார்; கேண்மையில் கலந்தார். குறிஞ்சி பாடுதலையே குறிக்கோளாய்க் கொண்டார். ஆனாலும், மலைக்கு நிகராக, அந்த மரமும், உணவும் அவர்தம் மனத்தில் நிறைந்தன போலும்!

பாரி மாய்ந்த பின், பறம்பு மலையும் நாடும் என்னாகுமோ என்று கவல்கிற கவியுளத்தில், அந்த மரமும், பாரியும் ஒன்றித் தோன்ற, பாடல் பிறக்கிறது.

""கார்ப்பெயல் தலைஇய காண்பின் காலைக்

களிற்றுமுக வரியில் தெறுழ்வீ பூப்பச்

செம்புற்று ஈயல் இன்னளைப் புளித்து

மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ;

நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்

பணைகெழு வேந்தரை இறந்தும்

இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே'' (புறம்-119)

யானை முகத்துப் புள்ளிகள் போல, கார்காலத்தில் மலர்கள் பூத்துக் கிடந்த பறம்புமலைச் சாரலை நினைந்து மறுகுகிறது கவிமனம். நிழல் இல்லாத நீண்ட பெரு வழியில் நின்று அருளும் ஒரு தனிமரம், இந்தப் பாடலில் உவமையாய் வருகிறது; அதுவே, உண்மையாய் இருந்தால்... இந்தக் கற்பனைச் சித்திரத்தின் பின்விளைவாய், மெய்யாகவே செந்நாப் புலவராம் கபிலர் திருவாக்குச் செய்யுளாய்ப் பிறந்திருக்கலாம், அல்லவா?

இந்தத் தனிமரந்தான், பின்னர், வள்ளுவர் வாக்கில், "உள்ளூர்ப் பயன் மரமாய்', உயர்ந்து பழுத்திருக்க வேண்டும்; தொடர்ந்து, அப்பர் பெருமானின் அருள் வாக்கில், "ஈசன் எந்தை இணையடி நீழ'லாகவும் நீண்டிருக்க வேண்டும்.

இது தனித்திருக்கும் ஒரு குறுமரம் அன்று; உலக மொழிகளுக்கிடையில், உயர்தனிச் செம்மொழியாய்ச் சிறந்திருக்கும் தமிழ்மொழி போல், நிலைத்திருக்கும் பெருமரம்; புலவர் வாக்கில் இன்னும் தழைத்திருக்கும் அருள் மரம்! மரமும் மனிதமும் இறையடி நீழல் போல், புனிதமாய்ப் பொலிகிற அழகில், அமுதமாகிறது கபிலர்தம் தமிழ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com