மழை குறித்துப் பேசாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். நாட்டு வளத்தைப் பேசப்புகும் இலக்கியங்கள் யாவும் நீர்வளத்தை முன்னிறுத்தியே நாட்டு வளத்தைப் பாடுகின்றன. நீர்வளத்திற்கு ஆதாரம் மழை.
மாதம் மும்மாரி பெய்வதற்கும், மாதம் மும்மாரி பொய்ப்பதற்கும் உரிய காரணங்களை விவேக சிந்தாமணியில் உள்ள இரண்டு பாடல்கள் (25, 26) பட்டியலிட்டுக் காட்டுகின்றன.
""வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே''
என்பது அப்பாடல். அதாவது, வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்களுக்கு ஒரு மழையும், நீதி நெறியில் நிற்கின்ற
அரசர்களுக்கு ஒரு மழையும், பெண்களுள் கற்புடைய மகளிருக்கு ஒரு மழையுமாக மாதம் மூன்று முறை மழை
பொழியுமாம்!
இவ்வாறு மாதம் மூன்று முறை பொழிகின்ற மழை, ஆண்டுக்கு மூன்று முறை பொழியும் அளவிற்குக் குறைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை,
""அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை
புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர்மழை
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே''
எனும் பாடல் விளக்குகிறது. (வேதம் ஓதுதலாகிய நியதி தவறி) அரிசி விற்பது போன்ற தொழில்களில் ஈடுபடும் பிராமணர்களுக்கென்று ஒரு மழையும், நீதி தவறிய அரசர்களுக்கென்று ஒரு மழையும், கணவனைக் கொலை செய்த கற்பிலாக் காரிகையர்க்கென்று ஒரு மழையும் என்று ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே மழை பொழியுமாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.