
காதல் வாழ்வு இன்பத்தைத் தரவல்லது. இன்பம் எல்லா உயிர்களையும் தன்பால் இழுக்கவல்லது. காதல் என்னும் உயிர்த் தத்துவத்தைத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில்,
"எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்'
என்றார். ""இன்பத்தை முதலாக வைத்துத் தொடங்குதலே பண்டைத் தமிழர் கொண்ட நெறி என்றும், அறத்திற்கு முதனிலை கொடுத்துப் பேசுவது பின்னையோர் வழக்கு'' என்பது தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் கருத்தாகும்.
"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்'
என்னும் தொல்காப்பிய (களவியல்-1) நூற்பாவில், இன்பத்தை முதற்கண் வைத்துத் தொடங்கியுள்ளதே அடிகளார்க்குப் பெரியதோர் பற்றுக்கோடாய் நின்று உதவுகிறது. இல்வாழ்க்கை என்று தொடங்கும்போது, திருவள்ளுவர் இன்பத்தையே முதன்மைப்படுத்துகிறார் என்பதற்கு,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது! (குறள் 45)
என்ற குறள் சான்றாக அமைந்துள்ளது. ""தொல்காப்பியருக்கு முற்பட்ட பண்டைத் தமிழகத்தில் அகம், புறம் என்னும் பகுப்பே இருந்தது. அவர் காலத்தில் அறம், பொருள், இன்பம் என மூன்று முதற்பொருள் கூறும் வழக்கோடு அகம், புறம் என்னும் பகுப்பும் காணப்பட்டது'' என்று மு. அண்ணாமலை குறிப்பிடுவார். ஆனால், தொல்காப்பியர் காலத்தில் நாற்பொருள் கூறும் வழக்கு இல்லை. வள்ளுவர் தொல்காப்பியரைப் பின்பற்றி மூன்று முதல் பொருள்கள் பற்றியே கூறினார். வீடுபேறு பற்றித் தனியாக ஒரு "பால்' அமைக்கவில்லை. பின்னைய இலக்கணங்கள் செய்யுட்கு நாற்பொருள் உரியன என்று கூறின.
தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்துள் ஒன்றான நாற்பொருள் கூறுதலை வலியுறுத்திற்று. இது காப்பியத்திற்கும் பெருங்காப்பியத்திற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாக கணித்து உணர முடியாத தண்டியலங்காரம் நாற்பொருளை நிறைவுறக் கூறுவது பெருங்காப்பியம் என்றும்; அறம் முதல் நான்கினும் குறைபாடுடையது சிறு காப்பியம் என்னும் இலக்கணம் கூறத் தெரியாமல் கூறிற்று.
திருக்குறளில் மூன்று முதற் பொருளைத் தொடர்ந்து நான்காவது பொருள் ஏன் கூறப்படவில்லை என்ற வினா பரிமேலகழகர் முதலியோர் உரையிலும், தொல்காப்பியர் ஏன் கூறவில்லை என்ற வினா நச்சினார்க்கினயர் உரையிலும் எழுந்து நிற்கக் காணலாம். அவர்கள் வாழ்ந்த காலத்தை நோக்கினால் இவ்வினா எழுந்தது இயல்பேயாகும். அவ்வுரையாசிரியர்கள், தொல்காப்பியரும் திருவள்ளுவரும் "வீடு' என்னும் மெய்ப்பொருளை வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், காரண வகையால் கூறிவிட்டதாகவே கூறித் தங்களைத் திருப்திபடுத்திக் கொண்டனர்.
தொல்காப்பியருக்கு முந்தைய பண்டைத் தமிழகத்தில் பொருட்பகுப்பு இரண்டாக இருந்தது; தொல்காப்பியர் காலத்தில் மூன்றாக ஆயிற்று; அவருக்குப் பின் மூன்று நான்காயிற்று. தமிழ் மக்கள் அனைத்தையும் அகம் என்றும், புறம் என்றும் பிரித்தனர். எல்லா நூல்களும் இவ்விரு பகுப்பிற்குள் அடங்கின. தொல்காப்பியர் காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மும்முதற் பொருள் கூறும் முறை வழக்கில் இருந்தது என்றாலும் அவர் பண்டைய பகுப்பு முறையாகிய அகம், புறம் என்பதனையே மேற்கொண்டார். எழுத்து, சொல், இலக்கணங்கள் நீங்கலாக மற்ற அனைத்தையும் "பொருள்' என்னும் பகுப்பில் அடக்குபவர். எனவே, அவர் காலத்தில் "பொருள்' என்னும் சொல்லுக்கிருந்த பொருள் விரிவு வள்ளுவர் காலத்தில் அந்தச் சொல்லுக்கு இல்லை எனலாம்.
தொல்காப்பியர் கருத்துப்படி பொருள் - அகம், புறம் என இரண்டாகும். அகம் உள்ளுணர்ச்சியாகிய இன்பத்தைப் பற்றிக் கூறுவது, மற்ற அனைத்தையும் உள்ளடக்குவது புறம். எனவே அகமாவது இன்பம், பொருளாவது புறம். உண்மையில் பொருள் இரண்டுதான். அறம் என்ற ஒன்று தனியாக இல்லை. அது செய்கையோடு கலந்து நிற்கிறது.
"அறம்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள்' (குறள் 754)
என்பது குறள். தொல்காப்பிய ஆசிரியர்கள் அகம், புறம் என்னும் இவ்விரண்டு பொருள்கட்குள் அறம் முதலாகிய நான்கு பொருள்களையும் அடக்கிக் காட்டுவதைக் காணலாம்.
"அகம், புறம்' என்ற பகுப்பும் "அறம், பொருள் இன்பம்' என்னும் இம்முதற் பொருள் வைப்பும் ஒன்றிற்கொன்று முரண்படுபவன அல்ல. இன்பம், பொருள் ஆகிய இரண்டோடும் இணைந்து வெளிப்படுத்துவதே அறம். அதனைப் பிரித்துக் காணக்கூடாது என்பது பண்டையத் தமிழர்களின் கருத்தாகும். அந்த இரண்டோடும் சேர்ந்தே தோன்றினாலும் அதனைச் சிறப்பிக்கும் வகையில் தலைமைப்படுத்தும் போக்கு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது. பிற்கால நூல்கள் நான்காவது பொருளாகிய "வீடு'பேற்றை உரைத்தன, முக்கியத்துவமும் கொடுத்தன.மூன்று முதற் பொருள்களையும் ஒருவன் தன் வாழ்நாளில் சரிவரச் செய்து முடிப்பானேயானால் வீடுபேறு தாமே வந்துவிடும் என்று சான்றோர் கூறினர். அப்படிப் பார்த்தால், நான்கு மூன்றிற்குள் அடங்கும். மூன்று முன் காட்டியவாறுபோல அகம், புறம் என்ற இரண்டிற்குள் அடங்கும். இன்பம் - பொருள் நிற்கும், இரண்டிற்கும் முடிவாகப் பெறத்தக்கது இன்பமே. பொருளும் அதனைப் பெறுவதற்குரிய கருவியாகும். எனவே, இரண்டையும் ஒன்றாகக் காண்கிறோம்.
அப்படிப் பார்த்தால், அகம், புறம் என்ற இரண்டினுள் அறம் முதலாகிய பொருளை அமைத்துக்கண்ட உரையாசிரியர்கள் திருவுள்ளம் பொருந்துவதே ஆகும். இன்ப நுகர்ச்சியிலும் பொது வாழ்விலும் பொருளீட்டுவதிலும் அறம் இரண்டறக் கலந்து நின்று பொலிவுறுகிறது. அன்பொடு புணர்ந்த ஐந்திணையாவது "நெறிநின்ற காமம்' ஆதலின் அறத்து வழிப்பட்ட இன்பமே நம் முன்னோர்களால் பாராட்டிக் கொள்ளப்பட்டது எனத் தெளியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.