பதினோரு கண்ணிகளில் பல்வேறு கதைகள்!

"அழகர் கிள்ளை விடு தூது' என்னும் அழகிய நூலில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் சிறப்பைக் கீழ்க்காணுமாறு அழகுத் தமிழில் பாடி அகம் மிக மகிழ்கிறார்.
பதினோரு கண்ணிகளில் பல்வேறு கதைகள்!

"அழகர் கிள்ளை விடு தூது' என்னும் அழகிய நூலில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் அழகர் சிறப்பைக் கீழ்க்காணுமாறு அழகுத் தமிழில் பாடி அகம் மிக மகிழ்கிறார். திருமாலிரும்சோலை மலையில் எழுந்தருளியுள்ள அழகர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி கிளியைத் தூது விடுப்பதான தூது இலக்கியம் இது.

"அரிவுடிவு மாய்ப்பின் நரன்வடிவும் ஆகிப்

பெரியதொரு தூணில் பிறந்து - கரிய (1)

வரைத்தடம் தோள்அவுணன் வன்காயம் கூட்டி

அரைத்திடும் சேனை அருந்தி - உருத்திரனாய்ப் (2)

பண்ணும் தொழிலைப் பகைத்துநிலக் காப்பும்அணிந்து

உண்ணும் படிஎல்லாம் உண்டருளி - வெண்ணெயுடன் (3)

பூதனை தந்தபால் போதாம லேபசித்து

வேதனையும் பெற்று வெளிநின்று - பாதிவத்தைத் (4)

தள்ளுநடை இட்டுத் தவழ்ந்து விளையாடும்

பிள்ளைமை நீங்காத பெற்றியான் - ஒள்ளிழையார் (5)

கொல்லைப் பெண்ணைக் குதிரையாக்கும் திருப்புயத்தான்

கல்லைப்பெண் ஆக்கும் மலர்க்காலினான் - சொல்கவிக்கு (6)

பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா

ஆர முதுகடைந்த அங்கையான் - நாரியுடன் (7)

வன்கா னகம்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு

மென்கா னகம்கடந்த வீட்டினான் - என்காதல் (8)

வெள்ளத்து அமிழ்த்தினோன் வேலைக்கு மேல்மிதந்தோன்

உள்ளத்துள் னான்உலகுக்கு அப்பாலான் - தெள்ளிதின் (9)

வெட்ட வெறுவெளியி லேநின்றும் தோற்றாதான்

இட்ட இருந்தும் கிடையாதான் - தட்டாதுஎன் (10)

எண்ணிலே மாயன் எனும்பேரி னால்ஒளிப்போன்

கண்ணனெனும் பெயரால் காண்பிப்போன்' (11)

இப்பாடலின் பொருளாவது: "முன் பகுதியில் சிங்கத்தின் உருவமாகியும் பின் பகுதியில் மனித உருவமாகியும் ஒரு பெரிய தூணிலிருந்து தோன்றி, கருமையான மாலை போன்ற அகன்ற தோளினை உடைய அசுரன் இரணியனது வலிமை வாய்ந்த உடலைச் சேர்த்துப் பிடித்துக் கொன்றும்; அவனது சேனைகளையும் கொன்று குவித்தும் உருத்திரன் என்னும் பெயர் கொண்டவனாகி, அவன் செய்யும் அழித்தல் தொழிலைச் செய்தும்; ஊழிக்காலத்தில் உலகம் முழுவதையும் தன் வாயினுள் போட்டு உண்டு திருமாலாகி காத்தல் தொழிலைச் செய்தும்; ஆயர்பாடியிலே பசு வெண்ணையுடன் கம்சனால் தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி கொடுத்த பால் பேதாமல் அவள் உயிரையும் உண்டு, பின்னும் பசி கொண்டு துன்பத்துடன் பிரம தேவனையும் பெற்று படைக்கும் தொழிலைச் செய்தும்; வெளியில் எங்கும் நிறைந்து நிற்பவன்;

தன்னைக் கொல்வதற்காக வந்த நளகூபன், மணிக்கிரீவன் என்னும் இரண்டு அரக்கர்கள் மருத மரங்களாகி நிற்க, அம்மருத மரங்களைச் சாய்க்கும்படி தன்னுடைய இடுப்பிலே கயிற்றுடன் கட்டப்பட்ட உரலுடன் நடந்து தவழ்ந்து சென்று விளையாடுகின்ற பிள்ளைத் தன்மை நீங்காத இயல்புடையவன்;

ஒளி பொருந்திய ஆபரணங்களை அணிந்த பெண்கள் கொல்லைப் புறத்திலே வளர்ந்துள்ள பனை மரத்தினது ஓலைமட்டையிலுள்ள கருக்கிலிருந்து குதிரை போன்று செய்து மடலேறுவதற்குக் காரணமான அழகு வாய்ந்த சிறந்த புயங்களைக் கொண்டவன்; சாபத்தால் கருங்கல்லாய்க் கிடந்த அகலிகையை மீண்டும் பெண்ணாக்கிய மலர் போன்ற பாதங்களை உடையவனான இராமபிரானாக அவதாரம் கொண்டவன்; மிகுந்த சொற் சுவையுடைய கவிஞனான திருமழிசை ஆழ்வார் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தனது பாம்புப் படுக்கையைச் சுருட்டிச் சுமையாக முதுகில் சுமந்தவன்;

வானத்திலுள்ள தேவர்களுக்காக அரிதான அமுதம் கொடுக்கும் பொருட்டுப் பாற்கடலைக் கடைந்த அழகிய கைகளை உடையவன்; கற்புக்கரசியான சீதாப்பிராட்டியுடன் வலிமையான தண்ட காரணியம் என்னும் காட்டினைக் கடந்து சென்ற வருத்தம் அடைந்த இராமபிரானாக அவதாரம் எடுத்தவன்;

எனது காதலாகிய கடல் வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பவன்; பாற்கடலுக்கு மேலே பாம்புப் படுக்கையிலே மிதந்து கொண்டிருப்பவன்; ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் நீங்காமல் நிறைந்திருப்பவன்;

இந்த மண்ணுலகிற்கு அப்பால், மேல் உலகத்திலும் இருப்பவன்; தெளிவாக ஒன்றுமே இல்லாத வெற்றிடத்திலே நிறைந்திருந்தும் எவர் கண்ணுக்கும் புலப்படாதவன்; அருகிலே இருந்தும் கிடைத்தற்கு அரியவனாக, அடைய முடியாதவனாக இருப்பவன்; என் உள்ளத்தைவிட்டு நீங்காமல் "மாயன்' என்னும் தன் பெயருக்கு ஏற்றாற்போல என் கண்களிலிருந்து மறைந்திருப்பவன்; அழகர் என்னும் திருமால் ஆனவன் என்று அப்பெண் மேலும் பலவாறு கூறுவது போல புலவர் அழகரின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com