
இன்றைக்கு நாம் பின்பற்றி வருகின்ற வாரநாள்கள் முறை தமிழகத்திலிருந்தே உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டும்.
கிரேக்கத்தில் ஒரு காலத்தில் எட்டுநாள் முறையே (Nundinal cycle) இருந்தது. ஆனால், இது வாரமுறை அன்று. ஒவ்வோர் எட்டாவது நாளன்றும் சந்தைகூடும். இந்த முறை சிறிது சிறிதாக மாற்றம் கண்டு கி.பி. 4ஆம் நூற்றாண்டில்தான் தற்போதைய வாரமுறை நடைமுறைக்கு வந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முதலான கிழமைப் பெயர்கள் அங்கு இல்லை.
சீனாவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஜின் வம்சம் தொடங்கியபோது வாரமுறை அறிமுகமானது. பாபிலோனியர்கள் கோள்களை வரிசைப் படுத்தியிருந்தாலும் இன்றுள்ள முறைப்படி அமைக்கவில்லை. பாபிலோனியர்களிடமிருந்து இந்தியா வாரமுறையைப் பெறவில்லை.
இந்தியாவைப் பொருத்தமட்டில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஆரியபட்டர் தமது ஆரியபட்டீயத்தில் வாரநாள்களைக் குறிக்கிறார். அதற்கு முன் தோன்றிய வடமொழி நூல்கள் எவற்றிலும் வாரநாள்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. வேதங்களிலோ, வேதாங்க சோதிடத்திலோ கோள்களின் பெயர்களைப் பற்றியோ அல்லது கிழமைப் பெயர்களைப் பற்றியோ எவ்விதக் குறிப்பும் இல்லை. பின்னர் எழுந்த வடமொழி இதிகாசங்களிலும் காணமுடியவில்லை.
ஏழு நாள்கள் முறையைப் பின்பற்றியவர்கள் தமிழர்களே. சங்க நூல்கள் "எழுநாள்' என்று பலவிடங்களில் சுட்டுகின்றன. மாங்குடிகிழார் மதுரையில் எழுநாள் விழா கொண்டாடப் பட்டதாகக் குறிப்பிடுகிறார். "கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி, ஆடு துவன்று விழவின்' (மதுரை.427-4428) என்னும் தொடருக்கு நச்சினார்க்கின்னியர், கால்கொள்ளத் தொடங்கிய ஏழாநாளந்தியிலே தீர்த்தமாடுதல் மரபு என்று எழுதுகிறார். பலநாள் என்று அவர் பொருள் கொள்ளவில்லை. ஏழுநாளிற் செய்யப்பெறுந் திருவிழா, "பவுநம்' எனப்படும் என்பதாக இந்தப் பகுதிக்கு உ.வே.சா. குறிப்புரை தருகிறார்.
தலைவன் ஒருநாள் என் வீட்டிற்கு வந்ததற்கு, அவனுடைய காதற் பரத்தையர் ஏழுநாள்கள் (ஒருவாரம்) அழுவர் என்கிறாள் ஐங்குறுநூற்றுத் (பா- 32) தலைவி ஒருத்தி. வால்மீன் தோன்றிய ஏழுநாளில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்ததாகக் கூடலூர் கிழார் புறப்பாட்டில் குறித்துள்ளார். மணிமேகலையிலும் ஏழுநாள் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆக, மேலை நாடுகளில் ஏழுநாள் வாரமுறை இல்லாத காலகட்டத்தில், இங்கே வழக்கில் இருந்ததென்றுணரலாம்.
கோள்களைப் பற்றிய தெளிந்த அறிவு கொண்ட சமூகமே வாரநாள்கள் என்ற கணக்கீட்டு முறையை உருவாக்கியிருக்க முடியும். மேலும், ஓரை என்னும் முறை எந்த நாட்டுக்குப் பொருந்தி வருமோ அங்கேதான் வாரம் தோன்றியிருக்க முடியும். ஓரை என்பது தூய தமிழ்ச்சொல். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு ஓரைகள். ஏழு நாள்களுக்கு நூற்று அறுபத்தெட்டு ஓரைகள்.
கண்ணுக்கு எளிதாய்ப் புலப்படுவதோடு கிழக்கிலிருந்து மேற்காகப் பயணித்துச் செல்லும் ஞாயிறு, திங்கள் மற்றும் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்று நம்பியதால், இந்த ஏழு வான் ஒளிகளையும் வாரத்தின் நாள்களாக அமைத்துக் கொண்டனர்.
வெவ்வேறு வேகத்தில் ஞாயிறு, திங்கள் மற்றும் ஐந்து கோள்களும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்ந்து செல்வதை அறிந்து கொண்ட நமது முன்னோர், அவற்றின் வேகத்திற்கு ஏற்ப, சனி, வியாழன், செவ்வாய், ஞாயிறு, வெள்ளி, புதன், திங்கள் என்பதாக வரிசைப்படுத்திக் கொண்டனர்.
சூரியோதயத்தின்போது சனி ஓரை என்றால் அதனைத் தொடர்ந்து வியாழன், செவ்வாய், ஞாயிறு, வெள்ளி, புதன், திங்கள் ஓரைகள் வரிசையாக வரும். பின்னர் மீண்டும் சனி ஓரையிலிருந்து தொடங்கி வரிசையாகச் செல்லும். அடுத்தநாள் சூரியோதயத்தின்போது (இருபத்தைந்தாவது ஓரை) எந்தக் கோளுக்கு உரிய ஓரை வருகிறதோ அந்தக் கோளின் பெயரால் அன்றைய நாள் பெயர் வழங்கப்படும். இப்படித்தான் கிழமைகள் உருவாயின.
கிரேக்கத்தைச் சேர்ந்த பிலோஸ்டிராட்டஸ் (Philostratus) என்பார் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போலோனியஸ் என்பாரைப் பற்றிக் குறிக்கிறார். அப்போலோனியஸ் ஒரு துறவி. அவர் இந்தியாவிற்கு வந்தார். இங்கே இயர்கஸ் (IARCHAS) என்பவரைச் சந்தித்தபோது அவருக்கு இயர்கஸ் ஏழு மோதிரங்களைப் பரிசாக அளித்தார். கோள்களின் நிறங்களுக்கு ஏற்ப மோதிரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் மிளிர்ந்தது. எந்தக் கோளின் ஆளுகைக்கு அந்த நாள் உட்பட்டிருக்கிறதோ அதற்குரிய மோதிரத்தை அணியவேண்டும் என்றும் இயர்கஸ் விளக்கினார் என்ற பதிவு இங்கு நோக்கத்தக்கது. ஆக, கி.பி. முதல் நூற்றாண்டளவில் இங்கே நாள் முறை இருந்திருக்கிறது என்று கிரேக்கர்களே பதிவு செய்துள்ளனர்.
கோள்களின் நிறங்களுக்கு ஏற்ப அவற்றுக்குப் பெயர் சூட்டியவர்கள் தமிழர்கள். தமிழர்கள் மேலை நாட்டினருடன் வாணிபம் செய்து வந்துள்ளதால் தமிழகத்திலிருந்தே பிறநாடுகளுக்கு வாரமுறை சென்றிருக்க வேண்டும்.
வார நாள்களின் பெயர்களைத் தமிழில் முதன் முதலில் பதிவு செய்தவர் திருமூலரே ஆவார். கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த மூலர், எந்தெந்த கிழமையில் எப்படி மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்று "வாரசூலை' என்ற தலைப்பில் விளக்குகிறார். செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய பெயர்கள் முதன் முதலில் திருமந்திரத்தில்தான் இடம் பெறுகின்றன. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும் கோள்களின் பெயர்களைக் கோளறு பதிகத்தில் பதிவு செய்துள்ளார். வெள்ளி வாரத்தன்று மதுரை எரிந்ததாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
வடமொழி நூல்களில் மிகப் பிற்காலத்தில்தான் கோள்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பதாலும், தமிழகம் தவிர பிற இடங்களில் ஏழுநாள் முறை இல்லாததாலும், கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மேலை நாடுகளில் ஏழுநாள் வாரமுறை உருவாவானது என்பதாலும், கி.பி. முதல் நூற்றாண்டில் கோள்களின் பெயரால் இங்கே நாள்முறை இருந்துள்ளதாலும், ஓரை முறை இந்தியாவிற்குப் பொருந்திவரக் கூடியது என்பதாலும் வாரமுறையை உருவாக்கிய பெருமை தமிழர்க்கே உரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.