

எழுது பொருள் வசதிகள் இல்லாத பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பனையோலைகளில்தான் எழுதி வந்தனர். எழுதுவதற்கு ஏற்றவாறு ஓலைகளைக் கத்தி கொண்டு சீவி ஒழுங்குபடுத்துவர். இது, "ஓலைவார்தல்' எனப்படும். இத்தகைய ஓலைகள் வெள்ளோலை என்றும், பட்டோலை என்றும் பெயர்பெற்றன.
÷"வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானை' என்பது ஒளவையின் பாடல். இங்கு வெள்ளோலை என்றது, எழுதப்படாத ஓலை. எழுதப்பெற்று முத்திரை பெறாத ஓலைகளுக்கும் வெள்ளோலை என்று பெயர் வழங்கியது. அவ்வாறே அரசனது ஆணையை அறிவிக்கும் சாதனம் பட்டோலை எனப்பட்டது. பெரியோர்கள் கூற, ஒருவர் எழுதுதலைப் பட்டோலை கொள்ளுதல் என்பது மரபு. பத்திரத்துக்கான மூலநகல் எழுதுதலையும் பட்டோலை எழுதுதல் என்று கூறும் வழக்கமும் இருந்தது. மேலும், இதற்கு வரிசைப்படுத்துதல் அல்லது அட்டவணைப் படுத்துதல் என்னும் பொருளும் உண்டு. "பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக்குட் படுமோ?'
(சிவரகசியம், கத்தரிப்பூ-31) என்னும் பாடலால் இதையறியலாம்.
÷இனி இவ் ஓலையடியாகப் பிறந்த சொல் வழக்காறுகள் சிலவற்றைப் பார்க்கலாம். ஓலைச் சுவடிகளைப் பயின்ற மாணாக்கர் அந்நாளில், ஓலைக்கணக்கர் எனப் பெற்றனர். "ஓலைக்கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்' என்பது நாலடியார்(397). ஓலையின் வழி செய்தி அனுப்புதலை, ஓலைபோக்குதல் என்று குறிக்கிறது கம்பராமாயணம்(731). கடிதச் செய்தியை ஓலைப் பாசுரம் (சீவக.2147, நச்சி. உரை) என்றும், கடிதத் தொடக்கத்தே இடம்பெறும் முகமன் கூறும் பகுதியை, ஓலைமுகப் பாசுரம் (சிலம்பு.13:87 உரை) என்றும் குறிப்பிட்டனர். புலவர்கள் பரிசில் வேண்டிப் புரவலர்பால் அனுப்பும் கடிதங்களுக்கு ஓலைத்தூக்கு (நன்னூல்-53) என்று பெயர். இதுவே பிற்காலத்துச் சீட்டுக்கவி என்ற பெயர் மாற்றம் பெற்றது.
÷சோழராட்சிக் காலத்தில் அரசனின் ஆணைகளை எழுதும் அலுவலரை, ஓலைநாயகம் என்று அழைத்தனர். அவ்வகையான அரசனின் ஆணைகளுக்கு ஓலைப்புறம் என்று பெயர் வழங்கியதைத் திருவாய்மொழி உரை (ஈடு.7-1-2) தெரிவிக்கிறது.
÷நினைவுக் குறிப்புகளை சிறிய ஓலை நறுக்குகளில் எழுதிவைத்தனர். அதற்கு ஓலைமுறி என்று பெயர். திருமணம் உறுதி செய்த பின்னர், அதனை ஓலையில் எழுதும் பழக்கமும் இருந்தது. அவ்வாறு எழுதிப் படித்துக் காட்டுதலை ஓலை வாசித்தல் என்றனர். ஒருவரின் இறப்புப் பற்றிய செய்தியைப் பெற்றுக் கொள்ளுதலை, ஓலை வாங்குதல் என்று குறிப்பிட்டனர்.
÷பெரியோர் அனுப்பும் நிருப(கடித)ங்களும் அரசு ஆணைகளும், திருமுக ஓலை எனப்பட்டன. எழுதிய ஓலைகளை மடக்குதல், நீட்டுதல் (கொடுத்தல்), சுருளாக அமைத்து முத்திரையிடல் - இவற்றின் அடியாக முறையே மடக்கோலை, நீட்டோலை, ஓலைச்சுருள் எனப் பல்வேறு பெயர்களும் வழங்கின.
÷இவ்வாறு, எல்லாம் ஓலைமயமாக இருந்த காலத்தில் நிலவிய அரிய சொற்பயன்பாடுகளை வைணவ உரைநூல்கள் பதிவு செய்துள்ளன. அவற்றுள் சில வருமாறு:
÷அறுவடைக்குப் பின்பு தானியத்தை அளந்து அதன் அளவையை ஓலை நறுக்கொன்றில் குறித்துத் தானியக் குவியலின் மீது இட்டு வைப்பது அந்நாளைய வழக்கம். அதற்கு வாயோலை என்று பெயர்.
÷ஒற்றி உரிமையை அல்லது கிரயஞ்செய்வதைக் குறிக்கும் ஆதார பத்திரத்துக்கும் வாயோலை (தமிழ்ப் பேரகராதி பக்.3606) எனும் பெயர் வழங்கியது.
ஏதேனும் ஓர் உடன்பாட்டுக்கு இசைந்து முறி எழுதிக் கொடுப்பதைக்
கையோலை செய்தல் என்றனர். ஆழ்வார், இறைவனின் முகம் நோக்காது கவிழ்ந்திருந்து, கையோலை செய்து கொடுக்கிறார் என்பது நம்பிள்ளையின் (திருவாய்மொழி 2-9-4) உரை.
÷அரசு வலிமையிழந்த காலத்தில் வஞ்சனைத்திட்டம் தீட்டிக் கமுக்க(ரகசிய)மாக ஓலைவழிச் செய்தி அனுப்பிக் கோட்டையைக் கைப்பற்றுவது பற்றி வைணவ உரைகள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு அனுப்பும் ரகசிய ஓலைக்குக் கீழோலை என்று பெயர்.
÷ஒரு கணக்கிலிருந்து நீக்கி வேறொரு கணக்கிற் சேர்க்கப்பட்டவரை, மாற்றோலைப்பட்டவர் (10-2) என்று நாச்சியார் திருமொழி குறிப்பிடுகிறது.
இப்படிப் பனையோலையின் அடியாக அறியத்தக்க செய்திகள் பலவும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டும் ஆவணங்களாய் அமைந்துள்ளன.
-முனைவர் ம.பெ. சீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.