இடைக்கழிநாடு: தமிழ் மக்களின் அடையாளம்!

சங்க நல்லிசைப் பெரும் புலவரான நத்தத்தனார் பிறந்த (நல்லூர்) இயற்கைப் பேரெழில் கொஞ்சும் நாடு இடைக்கழி நாடு.
இடைக்கழிநாடு: தமிழ் மக்களின் அடையாளம்!
Published on
Updated on
2 min read

சங்க நல்லிசைப் பெரும் புலவரான நத்தத்தனார் பிறந்த (நல்லூர்) இயற்கைப் பேரெழில் கொஞ்சும் நாடு இடைக்கழி நாடு. இந்நாட்டிலுள்ள இருபத்து நான்குக்கும் மேற்பட்ட கிராமங்களுள் நல்லூரும் ஒன்று. அதனால் இவர் "நல்லூர் நத்தத்தனார்' என்றே அழைக்கப்படுகிறார்.
நல்லூர் நத்தத்தனார் தம் நாட்டை அடுத்துள்ள ஓய்மான் நாட்டை ஆண்டு கொண்டிருந்த நல்லியக்கோடனைப் பாராட்டி பாணாற்றுப்படை ஒன்றைப் பாடியுள்ளார். அதுதான் பத்துப்பாட்டில் உள்ள "சிறுபாணாற்றுப்படை' எனும் ஆற்றுப்படை இலக்கியம். 269 வரிகளைக் கொண்டுள்ள இந்நூல், சீறியாழ் கொண்டு இசைக்கும் சிறுபாணன் ஒருவன், தன்னை ஒத்த வறிய பாணனை ஓய்மான் நாட்டை ஆண்டு கொண்டிருந்த நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவாக அமைந்துள்ளது.
சங்கப் புலவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இருந்தாலும், அவர்களின் ஊர் பெயர்கள் எல்லாம் இப்போது மறைந்துவிட்டன அல்லது மருவிப் போய்விட்டன. ஆனால், நத்தத்தனார் பிறந்த நல்லூர் - இடைக்கழிநாடு மட்டும் கடந்த 2000 ஆண்டுகளாகப் பல வகையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. "இடைக்கழிநாடு ஆராய்ச்சிக் கழக'த்தின் உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் சில சுவாரசியமான, அரிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், இருபெரும் உப்பங்கழிகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்நாட்டில் மா, பலா, பனை, முந்திரி, தென்னை ஆகியவை மிகுதியாக விளைகின்றன. ஒüவையாரும் திருவள்ளுவரும் இந்தப் பனை நாட்டில் வாழ்ந்த இடைக்காட்டுச் சித்தரை அழைத்துக்கொண்டு கீழை நெய்தல் நெடுவழியாக மதுரை தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன. "அன்பு செய், அறம் போற்று, ஆற்றுப்படுத்து' என்ற மானுடப் பொது நெறிகளை உலகிற்கு வழங்கிய பெருமைகளும் இடைக்கழி நாட்டிற்கு உண்டு.
இந்நாட்டில் அன்பிற்கு இணக்கணமாகத் திகழும் அன்றில் பறவைகள் ஏராளமாக வாழ்ந்திருக்கின்றன.
"காசிப்பாட்டை' என்ற சாலை, பண்டைய காலத்திலேயே தமிழ் நாட்டையும் வட இந்தியாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ் சாலையாக விளங்கி இருக்கிறது. அகத்தியர், இராமர், லட்சுமணர், சாது, சந்நியாசிகள், காசிக்குத் தீர்த்த யாத்திரை செல்பவர்கள் எனப் பலரும் இந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கிறார்கள். இதற்காக இந்தப் பாதையில் ஆலம்பரை நாணயப் பொறுப்பாளரான "பொட்டிபத்தன்' என்பவரால் கட்டப்பட்ட தர்ம சத்திரங்களில் தங்கி, காலணாவும், கால்படி அரிசியும் பெற்று இளைப்பாறிச் சென்றிருப்பதை இங்குள்ள வரலாற்றுத் தொன்மங்கள் வெளிப்படுத்துகின்றன. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய ஒரு கல்வெட்டுச் சான்றும் உள்ளது.
இந்நாட்டை சோழர்கள், சாளுக்கியர்கள், டெல்லி நவாப்புகள், பிரெஞ்சு கவர்னர் டூப்ளக்ஸ் எனப் பலரும் ஆண்டிருக்கிறார்கள். வங்கக் கடலோரம் அமைந்துள்ள இந்நாடு பழங்காலத்திலிருந்தே கீழை நாடுகளுக்குச் செல்லும் வணிக மார்க்கமாகவும், பாதுகாப்பு அரண் கொண்டதாகவும் விளங்கியிருக்கிறது.
17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோஸ்த் அலிகான் என்பவரால் கட்டப்பட்ட "ஆலம்பரைக் கோட்டை' இன்றளவும் (சிதைந்த நிலையில்) உள்ளது. அன்றைய நாளில், இங்குள்ள சிறிய துறைமுகம் வழியாக சணல், உப்பு, ஜரிகை முதலிய பொருள்கள் கீழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கோட்டையில், பிரெஞ்சு ஆளுநரான டூப்ளக்ஸýக்காக அச்சடிக்கப்பட்ட ஆலம்பரை வராகன் (நாணயம்) வரலாற்று சிறப்புமிக்கதாகும். புதுவையில் துபாஷியாக இருந்த அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பிலும் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
18ஆம் நூற்றாண்டில் தலைவிரித்தாடிய தாது வருட பஞ்சத்தின்போது, அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆளுநரான பக்கிங்காம் பிரபு, இடைக்கழி நாட்டிலிருந்து ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்திற்கு அப்பால் "பெத்தகஞ்சம்' வரையிலுமான கால்வாயை வெட்டச் செய்திருக்கிறார். நாளடைவில் இவர் பெயரிலேயே பக்கிங்காம் கால்வாய் எனப் பெயர்பெற்று இன்றளவும் இது சென்னையின் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது.
நல்லியக்கோடன் என்ற அரசன் ஆண்ட "கிடங்கில்' அரண்மனை இருந்த இடம் தற்போது குடியிருப்புகளாக மாறியுள்ளது. இவை மட்டுமல்ல, இந்த இடைக்கழி நாடு குறித்து இன்னும் பற்பல அரிய செய்திகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com