வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு!

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை.
வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு!
Published on
Updated on
2 min read

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன.
சங்க காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் என்ற வைசியன் வேறுகுலப் பெண்ணை மணந்து கொள்கிறான். அதனால் அவனைச் சார்ந்தோர் வெறுக்கவே, மனைவியை விட்டு அயல்நாடு சென்று விடுகிறான். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த மகன் பெரியோனாகி, பல்லாண்டுகள் கழித்து, புகார் நகரம் புகுந்து, தன் தந்தையைக் கண்டுபிடித்துத் தாயோடு சேர்க்கிறான் என்பதே இக்காப்பியத்தின் கதைச் சுருக்கம். அடியார்க்கு நல்லார் உரைக் குறிப்பிலிருந்து இஃது ஒரு சமண நூல் என்று கூறுவர். இதில் குறள் கருத்துகள் பல காணப்படுகின்றன. இந்நூலின் ஓரிரு பாடல்களைச் சுவைப்போம்.

மனிதப் பிறவியின் சிறந்த நிலை
மனிதப் பிறவியைப் பெற்றவரே கற்பனவற்றைக் கசடறக் கற்று இறைவனது பொற்பாதம் வணங்கி, உயிரினும் சிறந்த ஒழுக்கநெறி நின்று உய்வராதலால் எப்பிறவியிலும் இப்பிறவியே சிறந்ததாம் என்பர். மனிதப் பிறவியின் பயனை மறந்து மனம்போல் திரிந்து வாழ்நாளை வீணாக்கிப் பலரும் நாவினைக் காக்காமல் திரிவதை வளையாபதிப் பாடல் நயம்பட அறிவுறுத்துகிறது.

"உயர்குடி நனிஉள் தோன்றல்; ஊனம்இல் யாக்கை ஆதல்;
மயர்வுஅறு கல்விகேள்வித் தன்மையால் வல்லவர்ஆதல்;
பெரிதுஉணர் அறிவேஆதல்; பேர்அறம் கோடல்; என்றாங்கு
அரிதுஇவை பெறுதல்ஏடா பெற்றவர் மக்கள் என்பர்' (பா.6)

செல்வமும் பெறுதல் அரிது
அரிதாய இம்மக்கட் பிறப்பில் பிறந்தாலும் அப்பிறப்பின்கண் இனிய பொருள்களை நுகர்தற்கு வேண்டிய செல்வந்தானும் மக்கட் பிறப்பு போன்று பெறுதற்கரியது. அத்தகு செல்வம் வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, கள்வர் முதலிய வழிகளாலும் கையினின்று மறைந்து ஒழிந்து போகும். எனவே, நிலையற்ற செல்வத்தால் குற்றமற்ற தானம் செய்துவிடுக என்று, செல்வத்தின் அருமையையும் தானத்தின் உயர்வையும் எடுத்துச் சொல்கிறது.

"மனிதனின் அரியதாகும் தோன்றுதல் தோன்றினாலும்
இனியவை நுகரஎய்தும் செல்வமும் அன்னதேயாம்'

இவ்வடிகள் மக்கள் யாக்கையின் அருமையையும் செல்வத்தின் சிறப்பையும் செப்புகிறது. செல்வம் நிலையாமை குறித்து,

"வெள்ளம்மறவி, விறல்வேந்தர், தீத்தாயம்
கள்வரென்று இவ்ஆறில்கை கரப்பத் தீர்ந்தகலும்'

என்ற பாடல் அடிகள் உணர்த்துவதை ஆராயின், ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய வளையாபதி மனிதப் பிறவியின் உயர்வையும், நிலையாமை உணர்வுகளையும் நயமிக்கப் பாடல்களால் கூறுவதோடு, பொய்யாமை என்ற நல்லறத்தை ஒல்லும் வகையில் செய்து வாழ வழி வகைகளை இயம்புகிறது. மேலும், எல்லா உயிர்கள் மாட்டும் அருளும் அன்பும் செலுத்தி, புலால் உண்ணுதலை ஒழித்து, காமம் முதலிய குற்றங்கள் நீங்கி வாழவழி சொல்கிறது.

நாட்டு வருணனை
செந்நெல் வளர்ந்து, கரும்பின் உயரத்திற்கு நிற்பதும், கரும்பு, பாக்கு மரங்கள் அளவு எழுந்து நிற்பதும், அந்தப் பாக்கு மரங்கள் பார்க்க விரும்பாமல், மேகத்திடைத் தன் முகத்தை மறைத்துக் கொள்வதாகக் கற்பனை நயம் செறிந்த ஒரு பாடல்
வருமாறு:

"செந்நெல் அம்கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல் அம்கரும்பு தான்கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே' (பா.70)

தமிழ் அன்னையின் வளையல்களாக இந்நூல் திகழ்கிறது என்பர் ஆன்றோர். கிடைத்த பாடல்கள் அறக் கருத்துகளையே பெரிதும் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com