சங்க இலக்கியத்தில் "ஐயவி'!

உணவுப் பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடுகினைப் பற்றிப் பழைமையான பண்பாடுகள் பலவும் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியத்தில் "ஐயவி'!

உணவுப் பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடுகினைப் பற்றிப் பழைமையான பண்பாடுகள் பலவும் குறிப்பிடுகின்றன. பைபிளில் கிறிஸ்து, "சிறிய கடுகு விதையிலிருந்து பெரிய செடி முளைப்பது போன்றது இறைவனின் சொர்க்க உலகம்' என உவமை காட்டுகிறார்.
ஜெர்மனியில் மனிதர்களிடத்தில் நல்ல செய்தியும் வதந்தியும் கடுகு சிதறுவது போலப் பரவுகிறது என்பர். இறந்த மகனது உயிரை மீண்டும் கேட்கும் ஏழைத் தாயின் கதையில், வாழ்க்கையில் நிலையாமையை உணர்த்த புத்தர் கடுகினைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். கடவுளின் தீர்ப்பு நாளில் கடுகு விதைகளை எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவதாகத் திருக்குரான் குறிப்பிடுகிறது.
ஆப்பிரிக்காவைத் தாயகமாகக்கொண்ட கடுகு வரலாற்றுக் காலத்திற்கு முன்பே பிற இடங்களுக்குப் பரவியது. ஆசியாவின் வெப்ப நாடுகளில் குளிர்காலப் பயிராகப் புகுத்தப்பட்டது. ஐரோப்பா, மத்திய ஆசியா, தென் ஆசியா, சீனா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் கடுகு மிகுதியாக விளைவிக்கப்படுகிறது என அறிவியல் களஞ்சியம் குறிப்பிடுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் கறுப்பு நிறமான கடுகினை 'ஆழ்ஹள்ள்ண்ஸ்ரீஹ ஒன்ய்ஸ்ரீஹ' எனவும் வெண் கடுகினை 'ஆழ்ஹள்ள்ண்ஸ்ரீஹ அப்க்ஷஹ' எனவும் சுட்டுவர்.
வெண் கடுகைப் பழந்தமிழ், "ஐயவி' எனச் சுட்டுகிறது. பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமான பழந்தமிழ் நூல்களில் "ஐயவி' பதினான்கு இடங்களில் பயின்று வருகிறது. சிலம்பிலும் மேகலையிலும் கூட மூன்று இடங்களில் "ஐயவி' எனும் வெண் கடுகு சுட்டப்படுகிறது. வெண் கடுகு எனப்படும் ஐயவி, மதிலில் உள்ள போர்க்கருவி என்பதனைச் சுட்டும் முறைமையும் பழந்தமிழில் உள்ளன.
"பூணா ஐயவி' (பதிற். 16:14), "ஐயவித் துலாம்' (சிலப். 15:20) என மயிற்பொறியைப் பழந்தமிழ் நூல்கள் வேறுபடுத்திப் பதிவு செய்கின்றன. "வெண் சிறு கடுகின் செடி நீண்ட தாளினை உடையது' என்ற அறிவியலாளர் குறிப்பினை அரண் செய்வதுபோல "நெடுகால் ஐயவி' (மதுரைக். 287) என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. வெண் கடுகு மலர்களின் வெண்மை நிறத்தை, "ஐயவி அன்ன சிறுவீ ஞாடில்' (குறுந். 50.1) எனக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.


"தொய்யாது வித்திய களர்படு து டவை
ஐயவி அமன்ற வெண்காற் செறுவின்
மையென .... விரிந்தன' (122-125)
என்ற மலைபடுகடாமின் குறிப்பின் வழி வெண் கடுகுச் செடிகளைக் கொட்டால் அடிவரைந்து கொத்தும் தோட்டங்களில் விதைக்கப்பட்டனவாய் நெருங்கி விளைகின்றன என்பது பெறப்படுகிறது. போரில் புண்பட்டு வீடு திரும்பும் வீரனைக் காக்கும் காப்புப் பொருளாக வெண் கடுகினைப் பழந்தமிழர் பயன்படுத்தியதைப் புறநானூறு (296: 1-3)சுட்டுகிறது.
இளஞ் சிறார்களைப் பேய் அணுகாதிருக்கும் பொருட்டு ஐயவியாகிய வெண் சிறு கடுகினைத் தலையில் அப்பும் பழக்கம் இருந்தமையை மணிமேகலை பல இடங்களில் குறிப்பிடுகிறது. "ஐயவி அப்பிய நெய்யணி முச்சி' (மணி. 31:341), "குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து' (மணி. 7:57-58) எனவும் மணிமேகலை காட்டுகிறது.
சந்திரா பீடனென்பவளது தலையில் வெண்சிறு கடுகு அப்பியிருந்ததைக் காதம்பரியின் குறிப்பின் வழி உ.வே.சா. குறிப்பிடுகிறார். வெண் கடுகினைக் காப்புப் பொருளாகத் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பதிணென் சித்தர்களின் மூலிகை மருத்துவ அகராதியில் வெண் கடுகு, "குஷ்டம், பக்கநோய், பாலாகிரசம், பூதம், பைசாசம் விஷகடிகளும் தீரப் பயன்படுத்தப்படும் (ப. 223) என்று குறிப்பிடப்படுகிறது. குழந்தைகளைப் பெற்ற இளமகளிர் ஐயவியாகிய வெண் கடுகினைப் பயன்படுத்தியமையை நற்றிணை குறிப்பிடுகிறது.

"ஐயவி நறுநெய் பூசி குளித்த தூய்மையான உடம்போடு பிள்ளை பெற்ற மகளிர் உறங்கினர்' (நற். 40:7-9)
எனக் குறிப்பிடுகிறது.

"அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிரேந்திய தூமத்துப்
புதல்வரைப் பயத்த புனிதறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளனாடு அரவமும்' (மணி. 7:73-76)

என வரும் மணிமேகலைக் குறிப்பு, புனிற்றிள மகளிரான பிள்ளைப்பேறு பெற்ற பெண்கள் ஐயவியை அரைத்துப் பூசிப் பயன்படுத்தியதை விவரிக்கிறது. 'ஆழ்ஹள்ள்ண்ஸ்ரீஹ அப்க்ஷஹ' எனப்படும் வெண்சிறுகடுகில் விட்டமின் பி, சி, இ, கே, கால்சியம், அயர்ன், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், சிங்க் முதலிய சத்துக்கள் உள்ளன எனவும், மணமிக்க இலையும் விதையும் கர்ப்பகால மருந்தாகப் பயன்படுகின்றன என்ற மருத்துவக் குறிப்பும் (நர்ன்ழ்ஸ்ரீங்: மநஈஅ சன்ற்ழ்ண்ங்ய்ற் ஈஹற்ஹக்ஷஹள்ங்) இங்கு இணைத்து எண்ணத்தக்கது. இந்த வெண் கடுகின் பயன்பாடு இந்தியாவில் பரவலாக இருந்தமையை யுவாங்சுவாங் தமது குறிப்பில் சுட்டுகிறார். மரபார்ந்த மருத்துவ முறையில் வெண் கடுகு பயனாவதனை பதார்த்தகுண சிந்தாமணி (1047) என்ற மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. வெண்கடுகாம் ஐயவியின் அறிவியல் முறையிலான மருத்துவப் பயன்பாட்டினைப் பழந்தமிழர் அறிந்திருந்தமை, அவர்தம் மருத்துவ அறிவினைப் புலப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com