தமிழ்ச் "செம்மொழி' நாளைக் கொண்டாடுவோம்!

தமிழர்களாகிய நாம் சுதந்திர தினம், முதியோர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம் என முப்பதுக்கும் மேற்பட்ட தினங்களை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறோம்.
தமிழ்ச் "செம்மொழி' நாளைக் கொண்டாடுவோம்!
Updated on
2 min read

தமிழர்களாகிய நாம் சுதந்திர தினம், முதியோர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம் என முப்பதுக்கும் மேற்பட்ட தினங்களை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறோம். ஆனால், நம் தாய்மொழியான தமிழ், "செம்மொழி'யான நாளைக் கொண்டாடுகிறோமா?
""போராட்டம் இன்றித் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளிவு'' என்ற வ.சுப.மாணிக்கனாரின் வாக்கிற்கிணங்க, தமிழ் அறிஞர்கள் பலரின் முயற்சியினாலும், போராட்டத்தினாலும்தான் தமிழ், "செம்மொழி' தகுதியைப் பெற்றிருக்கிறது. அவ்வறிஞர்களுக்கு முதலில் நம் நன்றியைத் தெரிவிப்போம்.
ஒரு மொழி செம்மொழி தகுதி பெறுவதற்கான பதினோரு தகுதிகளையும் தமிழ் பெற்றிருந்தாலும், கூடுதலாகப் பல தகுதிகளையும் பெற்றிருக்கிறது. அவற்றுள் ஒன்று அடைமொழி. வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு நம் தமிழ் மொழிக்கு இருக்கும் அடைமொழிகள் எத்தனை பாருங்கள்!
""செந்தமிழ், வண்டமிழ், பழந்தமிழ், வியன்தமிழ், தீந்தமிழ், பண்ணார் தமிழ், பசுந்தமிழ், மன்னுதமிழ், ஞானத்தமிழ், வாய்மைத் தமிழ், நெடுந்தமிழ், மாத்தமிழ், மிக்கதமிழ், கோமளத்தமிழ், செழுந்தமிழ், ஒண்டமிழ், கன்னல் தமிழ், அமுதத்தமிழ், இளந்தமிழ், தேன்தமிழ், தெள்ளுதமிழ், நீடுதமிழ், மும்மைத்தமிழ், வாய்மைத் தமிழ், தங்கத்தமிழ், நறுந்தமிழ், பைந்தமிழ், பீடுதமிழ், ஒண்டமிழ், இன்தமிழ், தொன்தமிழ், கனிதமிழ், தென்தமிழ், சீர்தமிழ், முத்தமிழ், உயர்தமிழ், தென்னன் தமிழ், தனித்தமிழ், அன்னைத்தமிழ், கன்னித்தமிழ், சீர்மன்னு செந்தமிழ், முதுதமிழ், அருந்தமிழ், தாய்த்தமிழ், மறைதமிழ், தெய்வத்தமிழ், இருந்தமிழ், நந்தமிழ், சங்கத்தமிழ், சந்தத்தமிழ், தன்னேரிலாத் தமிழ், பழந்தமிழ், முந்துதமிழ், தீதில்லாத தமிழ், பழுத்த தமிழ், மூவாத்தமிழ், தெள்ளுதமிழ், விஞ்சுதமிழ், பெருஞ்சீர்மலி செந்தமிழ், செழுந்தமிழ், பிள்ளைத்தமிழ், திருநெறிய தமிழ், பண்ணிசைத் தமிழ், நற்கன்னல் தமிழ், முத்தித்தமிழ்! - இவ்வாறு அறுபதுக்கும் மேற்பட்ட அடைமொழிகள் உள்ளன! இத்தனைத் தமிழா? என்று பிரமிப்பாக இருக்கிறதல்லவா? இத்தகைய அடைமொழிகள் எல்லாம், நம் சங்க இலக்கியங்கப் புலவர்களும், பக்தி இலக்கிய அருளாளர்களும் தமிழ் அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்த திருப்பெயர்கள் - முன்னோர் மொழிந்த முதுதமிழ்!
அடைமொழிகள் மட்டுமா? பன்முகப் பரிமாணங்கள்தாம் எத்தனை? சங்கத்தமிழ், இலக்கியத்தமிழ், இலக்கணத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், மருத்துவத் தமிழ், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், நாட்டுப்புறத்தமிழ், கல்வெட்டுத்தமிழ், அரசியல் தமிழ், ஊடகத்தமிழ், இதழியல் தமிழ், திரைத்தமிழ், அயலகத்தமிழ், சைவத்தமிழ், வைணவத்தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ், பெளத்தத்தமிழ், சமணத்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என எத்தனையோ...!
எம்மொழிக்கும் இல்லாதத் தனிப்பெருஞ் சிறப்புகள் பல தமிழுக்கே உரியவை. அவற்றுள் முதன்மையானது "ழ'கரம் எனும் சிறப்பெழுத்து. மற்றொன்று அது "முக்தி இன்பம்' நல்குகிறது என்பது. முத்திக்கு வித்தானது தமிழ்(ழே) என்பதைத் தமிழ்விடு தூது (முத்திக்கனி) கூறுகிறது. தமிழின் சிறப்புகள் சொல்லுக்குள் அடங்காதவை!
உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான - தாய்த் தமிழான தமிழுக்கு, 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது. (அரசாணை எண்: IV-1401 4/7/2004 - NI - 11 dated 12.10.2004) செம்மொழி நாளும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்தப்பட்டது. ஆனால், அதன் பிறகு...?
எப்படியோ ஒரு வழியாகத் தமிழ், "செம்மொழி'யாகிவிட்டது என்று பெருமூச்சுவிட்டுப் பெருமைபட்டுக் கொள்ளும் நாம், அந்நாளை (அக்-12) நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் அந்நாளில் தமிழை வளப்படுத்தும், பிறமொழிக் கலப்பில்லாமல் மேன்மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுக்கும் (பயனுள்ள) செயல்களைச் செய்து வருகிறோமா? தமிழ்ச் செம்மொழியானதன் பின்னணியை, போராட்டத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோமா? என்றால், எஞ்சுவது கேள்விக்குறியே...!
தமிழை வளர்க்க - வளப்படுத்த தமிழ் அமைப்புகள் "பல' இருப்பினும், அவை பயனுள்ள "சில' செயல்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், கிடைத்தற்கரிய எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும் இன்றைக்கும் படிக்கப்படாமலும், படியெடுக்கப்படாமலும், நூல் வடிவம் பெறாமலும், சரிவர பாதுகாக்கப்படாமலும் அழிந்து கொண்டிருக்கின்றன என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறதே...!

(அக்.12. தமிழ்ச் செம்மொழி நாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com