வாணியைச் சரண் புகுவோம்!

தன்னைப் பிழிந்து தமிழ் செய்த பாரதியின் உன்னதக் காவியம் பாஞ்சாலி சபதம். "பிரமதுதி'யோடு தொடங்கும் அக்காப்பியத்தில் அடுத்து அவர் வணங்குவது சரஸ்வதியை.
வாணியைச் சரண் புகுவோம்!
Published on
Updated on
2 min read

தன்னைப் பிழிந்து தமிழ் செய்த பாரதியின் உன்னதக் காவியம் பாஞ்சாலி சபதம். "பிரமதுதி'யோடு தொடங்கும் அக்காப்பியத்தில் அடுத்து அவர் வணங்குவது சரஸ்வதியை. அவர் காட்டும் அருள்வாணி முற்றிலும் புதுமையானவள். மகாகவியின் கேசாதிபாத வருணனையில், அத்தேவியின் திருவுருவ அடையாளங்கள் பின்வருமாறு பொலிகின்றன.
""அவளின் திருவிழி - வேதம்; அதனை விளக்கத் தோன்றிய பற்பல உரை - கண் மை; சீதக்கதிர் மதியாம் நெற்றியின் மேல் விளங்கும் கூந்தல் - சிந்தனை; வாதம் தருக்கம் என்னும் இரண்டும் அவளது செவிகளுக்கு அழகு தரும் காதணிகள்; போதம்- நாசி; நலம் பொங்குபல் சாத்திரம் - அவள் திருவாய்; கற்பனை - வாணியின் தேன் இதழ்; காவியம்- கொங்கை; சிற்ப முதற் கலைகள்- அவள் திருக்கரங்கள்; அவள் பாதமோ, தமிழ்ப் புலவோர் எனும் மேலவர் தம் நாவு'' என்கிறார். இந்த இடம்தான் சிந்தனைக்குரியது.
பொதுவாக, தமிழ் அறிந்த புலவர்கள் தமிழ்ப் புலவர்கள் ஆகிவிடலாம். ஆனால், அதனினும் மேலவர் எனும் தகுதிபெறச் சிறப்பான அறிவுநிலை வேண்டும். அவையாவன:
1. சொற்படு நயம் அறிதல்; 2. இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிதல். இந்த அறிவு நிலை எய்தினால், வாணியருள் பெற்றிடலாம். இந்த இடத்தில், அவள், "தமிழ்வாணி' ஆகிவிடுகிறாள். ஒளிவளரும் அத்தமிழ்வாணி, கவிவாணர்களுக்கு அருளும் தொழில்களாக நான்கினைப் பட்டியல் இடுகிறார் பாரதி. 1.தெளிவுறவே அறிந்திடுதல், 2. தெளிவுதர மொழிந்திடுதல், 3. சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல், 4. கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல். இத்தகு தொழில் திறனோடு கவிதை எழுத அம்மகாகவி, வாணியைச் சரண் புகுகிறார். அவள் வாக்களிப்பாள் எனத் திடம் கொள்கிறார்.
அந்த வாக்கு எத்தகையது? ""வாக்கென்பது, மூலத்திலே, படைத்தல் என்று பொருள்படும்... சிருஷ்டியே வாக்கு. சிருஷ்டியே சக்தியானபடியாலேதான், புராணக்காரர் சரஸ்வதியைப் பிரம்மாவின் சக்தியென்றார். பைபிள் புஸ்தகத்திலே, ""ஆரம்பத்திலே வாக்கு இருந்தது. அந்த வாக்கு ஈசனோடிருந்தது. அந்த வாக்கே ஈசன் என்று சொல்லப்படுகிறது. சக்தி பரமபுருஷனோடிருப்பதையும், அவ்விரண்டும் ஒன்றென்பதையும் அந்த வாக்கியம் காட்டுகிறது'' என்று வேதரிஷிகளின் கவிதையில் விளக்குகிறார் பாரதி.
சொல் எனப் பொருள்படும் அதனைச் ""சாதாரணமாக நினைத்துவிடலாகாது. உண்மைச்சொல் úக்ஷம மந்திரமாகும். பொய்ச் சொல் அழித்துவிடும்'' என்கிறார். கவனியுங்கள். அழிந்துவிடும் அல்ல; அழித்துவிடும். எதனை? அவர் சொல்லவில்லை. மற்றொன்று விரித்தல் அவர் நோக்கமல்லவே! எனினும் ஆய்வு நிலையில் விரித்து அறிய அனுபவம் கை கொடுக்கும். முதலில் தன்னை அழித்துக்கொள்ளும் பொய், தான் பிறந்த நாவிற்குரியாரையும் அழித்துவிடும்; சுருக்கமாய்ச் சொன்னால், நாணயமற்றவர் ஆக்கிவிடும் அல்லவா?
எனவே, மந்திரமாகும் உண்மைச் சொல்லாகிய வாக்கினை அருள்கின்ற கலைமகளை எவ்வாறு வழிபடுதல் வேண்டும்? 1. தான் எப்போதும் எவ்விடத்தும் உண்மை சொல்லுதல். 2. பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் இவ்விரண்டுமேயாம். சொல்லுதல் எளிது; நடைமுறைப்படுத்துவது எத்தனை சிரமம்? அதனையும் நன்குணர்ந்த பாரதி சொல்கிறார்:
""தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய்விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது, நாராசவாணமாய்விட்டது.''
இதனால் விளைந்தது என்ன? ""சாதாரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலாகிவிட்டது. மனித அறிவு அவ்வளவு குழப்பம் அடைந்து நிற்கின்றது.'' இதனை மாற்ற என்ன வழி? அதைத்தான் முன்னரே சொல்லிவிட்டாரே, ""தெளிவுறவே அறிந்திடுதல்....'' அதற்காக, ஒளிவளரும் தமிழ் வாணியைச் சரண்
புகுவோம்.
சரண்புகுதல் எவ்வாறு? ""உண்மைச் சொல்லே, சரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக்கொடுப்பதற்கு முக்கிய வழி என்கிறோம். இதனுடன் நிந்தை, பழி, சாபம், அசுசி - இவற்றினால் வாக்கை மாசுபடுத்தாதிருக்க வேண்டும். அமங்கல வார்த்தைகளும், அவச்சொற்களும், பய வசனங்களும், தீமை தரும். பரிபூர்ணமான தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கே, தேவவாக்கென்று சொல்லப்படும்'' என்கிறார் பாரதி.
இது எல்லாருக்கும் பொருந்தும்; இலக்கிய வேள்வி புரியும் புலவர்களுக்கோ சிறப்பாகப் பொருந்தும். ஏனெனில், ""இலக்கியக்காரருக்கோவென்றால், இத்தெய்வம் குலதெய்வம்'' என்கிறார். குலதெய்வம் என்று தொழும் தெய்வங்களையெல்லாம், உணர்ந்து தொழக் காரணமாகிய பெருந்தெய்வம் இக்கலைமகள்.

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வம் என்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குஉயி ராகிய தெய்வம்
செய்வம் என்றுஒரு செய்கை எடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்!

எனவே இலக்கியக்காரர்கள், ""இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும்'' என்கிறார். அது எவ்வாறு? செய்ய வேண்டியவற்றையே சொல்லிவந்த பாரதி, செய்யக்கூடாதததையும் சொல்லிக் காட்டுகிறார்.
""எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் சரஸ்வதி கடாட்சத்தை இழந்துவிடுகிறான். யமகம், திரிபு முதலிய சித்திரக்கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டுபோகும் கயிறுபின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறான். அவசியமில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்தத் தெய்வத்தின்மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்தச் சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான். வெள்ளைக் கலை உடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரனும் பாட்டுக்காரனும் சரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிர் எனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும்'' என்கிறார்.
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் அல்லவா? வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவிவிடும் அல்லவா? அத்தகு மேன்மை எய்த, ""மனித ஜாதிக்குத் தேவவாக்குப் பிறந்திடுக'' என்றும் வாழ்த்துகிறார் பாரதி. எனவே, இந்தக் கவி வாக்கை, கலைமகள் வாக்கெனக்கொண்டு, அவர் காட்டிய வழியில் கலைமகளை வழிபடும் யாரும் மகாகவியாகலாம். கலைமகளுக்கு இன்னொரு பெயர் "பாரதி' தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com