
தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் (பிரபந்தங்கள்) ஒன்று "விலாசம்'. மாம்பழக் கவிராயர், சேலம் வேளுக்குறிச்சி வேலப்பக் கவுண்டர் முன்னிலையில் அக்கவுண்டரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றிய சிற்றிலக்கிய நூல் "சந்திர விலாசம்' என்பது. இந்நூல் நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் அறுபது பாடல்களுக்கு மேல் சிலேடையில் பாடப்பட்டனவாக உள்ளன. சிவனுக்கும் கொல்லிமலைக்கும், உமாதேவிக்கும் கொல்லிமலைக்கும், விநாயகருக்கும் கொல்லிமலைக்கும், சூரியனுக்கும் கொல்லிமலைக்கும் எனப் பல சிலேடைப் பாடல்களை இவர் பாடியுள்ளார். அவற்றுள் சூரியனுக்கும் கொல்லிமலைக்கும் சிலேடையாகப் பாடிய பாடலைக் காண்போம்:
""தேற லோடப் புள்ளலம்பச்
சிறப்புத் தருமுற் பலங்குவியத்
திரண்ட முளரி வாய்விடுப்பச்
செயுமா தவமெத் திசையுமிக
மாற லாகாக் கதிரவன்போல்
வளருங் கொல்லி மலைக்கதிபன்
வளமைப் புகழ்வே லப்பதுரை
மகிழவு தித்து வருநிலவே!
தூற லோயா தினமயலே
சுழற்று மெனை முந் தினமயலே
தூவுந் தென்றற் பொருந்தாதே
சோர்ந்தன் றிலுங்கண் பொருந்தாதே
நீற லேதோ முத்தினமே
நிமிட மெனக்கு முத்தினமே
நித்தஞ் சொலுவள் வடுத்தாயே
நீயுங் கொதிக்க வடுத்தாயே'' (பா. 20)
இப்பாடலின் முன் நான்கு அடிகளுக்கு "மிக்க இருள் நீங்க, பறவைகள் இரைச்சலிட, அழகுள்ள குவளை மலர்கள் வாட, கூட்டமான தாமரை அரும்புகள் இதழ்கள் விரிந்து மலர, செய்யப்படுகின்ற பெருந்தவ நிலைகள் எல்லாத் திக்குகளிலும் மிகுதியாக நடக்க' என்று சுட்டப்பெறும் பொருள் சூரியனுக்குப் பொருந்துகிறது.
இதே தொடர்களுக்குத் "தேன் கலந்த நீர் உள்ளே சிதற, மரங்களில் கனிந்த நல்ல பழங்கள் கீழ் உதிர்ந்து குவிந்து கிடப்ப, ஒன்றுபட்டு எரிகின்ற நெருப்புத்திரள் சுடர்விட்டெரிய, அதனால் உண்டாகும் வெப்பம், எல்லாப் பகுதிகளிலும் மிகுதியாகப் பெற' என்று சுட்டப்பெறும் பொருள் கொல்லிமலைக்குப் பொருந்துகிறது.
அடுத்தடுத்துள்ள தொடர்களுக்கான பொருள் வருமாறு: "மாறுபாடு அற்ற வெய்யவன்போல் வளர்ச்சியுறுகின்ற கொல்லிமலைக்குத் தலைவனான, சிறப்புமிக்க புகழுடைய வேலப்பனென்னும் தலைவன் முன் பற்றிய காதல் தன் செயலறாமல் இன்னும் என்னை அதன் பக்கங்களிலேயே சுழற்றி அடிக்கின்றது. தென்றல் காற்று மகரந்தப் பொடிகளைத் தூவும். அன்றிற் பறவை மறந்துங்கூடத் தூங்காமல் வருத்தும். முத்துமாலைகள் நீறாகப் பொடிந்து விழுதல் எதனாலேயோ! ஒரு நொடி எனக்கு மூன்று நாள்கள் போல் நீண்டு வருகிறது. என் தாய் நாள்தோறும் என்மீது குறை கூறுகிறார். நீயும்(நிலவே) என் உடலை கொதிக்கும்படி கதிர்களை
வீசுகின்றாயே!'
இந்நூல் பல காலம் உரையின்றி இருக்க, செ.ரெ. இராமசாமிபிள்ளை 1952-இல் உரையெழுதியுள்ளார். பார்வையற்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர், நிலவை விளித்து "சந்திர விலாசம்' பாடியிருப்பது வியப்புக்குரியதாகும்! இப்புலவர் தமது 48ஆவது வயதில் (1884) மறைந்துவிட்டார் எனினும், 1908-இல் இவருடைய படைப்புகள் அனைத்தும் "மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு' என்ற பெயரில் அச்சிடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.