திரு.வி.க. ஒரு திரிவேணி!

தி.ரு.வி.கலியாணசுந்தரனார், அவர்தம் வாழ்க்கையில் ஈடுபட்ட துறைகள் மூன்று. அவை: அரசியல்துறை, தொழிலாளர்துறை, பத்திரிகைத் துறை.
திரு.வி.க. ஒரு திரிவேணி!
Published on
Updated on
1 min read

தி.ரு.வி.கலியாணசுந்தரனார், அவர்தம் வாழ்க்கையில் ஈடுபட்ட துறைகள் மூன்று. அவை: அரசியல்துறை, தொழிலாளர்துறை, பத்திரிகைத் துறை. இம்மூன்று துறைகளிலும் வித்தகராய் விளங்கிய திரு.வி.க.வை ஒரு "திரிவேணி சங்கமம்' என்று குறிப்பிடலாம்.
அரசியல்துறை:இந்திய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டிருந்தபோது அரசியல் தலைவர்கள் பலர் சிறைப்பட்டனர். அப்போது, திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில், ""சிறையினின்றும் விடுதலையடைந்து வெளிவந்த திலகர் பெருமானும் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு அறப்போர் நடத்தியதை நாடு வரவேற்றது, அதனால், அரசியல் பித்து என்னுள் எழுந்தது'' என்று குறிப்பிடுகிறார்.
திரு.வி.க.வின் அரசியல் சொற்பொழிவுப் பேச்சுகள் எழுத்து வடிவத்தில் உள்ளவை பதினொன்று. அவற்றைக் கூர்ந்து நோக்கினால் அவருக்குத் தமிழகத்தின் பல்வேறு தொழில் நிறுவனங்களோடு தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது. பல ஊர்களில் நடைபெற்ற அரசியல் மாநாடுகளும், அதன் தீர்மானங்களும் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத் தக்கனவாகும்.
தொழிலாளர்துறை:இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில்தான் தொழிலாளர் இயக்கம் தோன்றியது. அதற்கு ஆணிவேராக விளங்கியவர்களுள் திரு.வி.க.வும் ஒருவர். அவர் எழுதிய வாழ்க்கைக் குறிப்பில் "தொழிலாளர் இயக்கம்' என்றே பதிவு செய்திருக்கிறார். தொழிலாளர் இயக்கத்தின் தொடக்ககால நிகழ்ச்சிகளில் 1921ஆம் ஆண்டு தோல்வி கண்ட "பி அண்டு சி' ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முக்கியமானதாகும். இதில் பல கருத்து வேறுபாடுகள் எழுந்து முடிவுக்கு வந்தன. 1947-இல் பக்கிங்காம் கர்நாடக ஆலையில் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது சமரசப் பேச்சில் முன்னாள் தலைவர் என்ற முறையில் திரு.வி.க.வும் அப்போதைய தலைவர்
அந்தோணிபிள்ளையும் கலந்துகொண்டு பேசிய பேச்சில் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக்
கொண்டு வந்தனர்.
திரு.வி.க. தொடங்கி நடத்திவந்த "தேசபக்தன்', "நவசக்தி' ஆகிய இரு பத்திரிகைகளில் "நவசக்தி' தொழிலாளர் நலனுக்கென்றே தொண்டாற்றியது. நவசக்தியால் தொழிலாளர் இயக்கம் வலுப்பெற்றது.
பத்திரிகைத்துறை:திரு.வி.க. பத்திரிகைத் துறையில் அருஞ் சாதனைகள் பல நிகழ்த்தியவர். தமிழாசிரியர் பணியை விடுத்து 1917-இல் சுப்புராயகாமத் வழிகாட்டலில் "தேசபக்தன்' பத்திரிகையைத் தொடங்கினார். சில காரணங்களால் அதை விடுத்து, 1920-இல் "நவசக்தி' பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். "தேசபக்தன் மகன்; நவசக்தி மகள்' என்றே அவற்றைப் போற்றி வளர்த்து வந்தார்.
செந்தமிழில் அரசியல் கருத்துகளைத் தமிழ்நாட்டில் பரப்புவதும், தமிழர்களுக்குத் தாய்மொழி வழியே விடுதலை உணர்வை ஊட்டுவதுமே "நவசக்தி'யின் தலையாய குறிக்கோளாக இருந்தது. அந்நாளில் பத்திரிகைகளில் தலையங்கம் என்பது முக்கியமானதாகும். தேசபக்தன் தலையங்கம் "தேசபக்தாமிர்தம்' எனும் பெயரில் ஆண்டிதழாக வெளிவந்தது.
நவசக்தியின் தலையங்கம், தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு என்ற நூலாகத் தொகுக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபோது, தமிழக மக்களை அரசியல் துறையில் ஆர்வமுடன் ஈடுபடுத்தியவர் திரு.வி.க. தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு ஆற்றலையும், அறிவையும் ஊட்டி எழுச்சிபெறச் செய்தார். விடுதலை உணர்வில் தமிழ் உணர்வை இரண்டறக் கலந்து தேசிய நீரோட்டத்தில் தம் பத்திரிகையை இணைத்தார். மூன்று துறைகளிலும் திரிவேணியாக இருந்த திரு.வி.க. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சங்கமம் ஆனார்.

செப்.17 திரு.வி.க. நினைவு நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com