ஆனந்தரங்கம் பற்றிய தனிப் பாடல்கள்

18-ஆம் நூற்றாண்டு அரசியல் களத்தில் முதன்மை மிக்கவராகத் திகழ்ந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. அன்றைய பிரெஞ்சு இந்திய ஆளுநர் டூப்ளேயிடம்
ஆனந்தரங்கம் பற்றிய தனிப் பாடல்கள்
Published on
Updated on
1 min read

18-ஆம் நூற்றாண்டு அரசியல் களத்தில் முதன்மை மிக்கவராகத் திகழ்ந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. அன்றைய பிரெஞ்சு இந்திய ஆளுநர் டூப்ளேயிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, அரசியல் களத்தில் வரலாற்று முதன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்கத் துணை செய்துள்ளது.
 ÷அரசியல் சாணக்கியராகவும், வணிகத்தில் மேன்மைமிக்கவராகவும், புரத்தலில் வள்ளலாகவும், குறுநில மன்னர் போன்றும், பன்மொழி அறிஞராகவும் ஆனந்தரங்கர் விளங்கியிருந்ததை அவர்தம் வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது. அவரைப் பற்றிய தனிப்பாடல்கள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் இரு பாடல்களைக் காண்போம்.
 தொண்டை மண்டலம் நமச்சிவாயப் புலவர், ஆனந்தரங்கர் பற்றிய தனிப்பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். இப்புலவர் வள்ளல் சீதக்காதி முதலிய வள்ளல்களையும் பாடியவர் ஆவார்.
 
 பாரார் ஆர் சொல்லார் பறவைக் குலங்கடம்மிற்
 சீராரும் கிள்ளை முதற் செப்பலால் - ஓரா
 யிரம்பை யானந்த ரங்கன் இன்ப ரங்கன் அன்பன்
 பிரம்பை ஆனந்தரங்கன் பேர்!
 
 ஆனந்தரங்கன் புகழ் புவி எங்கும் பரவியுள்ளதாக
 இப் பாடல் விவரிக்கிறது. அவர் பெயரைச் சொல்லாதவர் எவரோ? எனும் பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.
 ÷தொண்டை மண்டலச் சதகம் பாடியவர் படிக்காசுப் புலவர். இவர் ஆனந்தரங்கரை நேரில் கண்டு புகழ்ந்து பாடிப் பரிசில் பெற வேண்டி வந்தார். அப்பொழுது அங்கிருந்த நமச்சிவாயப் புலவர் ஆனந்தரங்கரிடம் படிக்காசுப் புலவரை அறிமுகப்படுத்தினார். அப்போது, படிக்காசுப் புலவர் பாடிய பாடல் இது.
 
 மந்திரியூகி அறிவினில் சேடன் வடிவின் மதன்
 இந்திர போகன் நிதியிற் குபேரன் இரவலர்க் கோர்
 ஐந்தரு வாகுஞ் சொல் வாக்கில் அரிச்சந்திரன் ஆகுமென
 வந்தருள் ஆனந்த ரங்கனும் வாழ் தொண்டை மண்டலமே!
 
 ஆனந்தரங்கர் அரசியலில் மந்திரி யூகி போன்றும், அறிவினில் ஆதிசேடன் போன்றும், அழகில் மன்மதனாகவும், போகத்தில் இந்திரனாகவும், செல்வத்தில் குபேரனாகவும், கொடையில் கற்பக விருட்சமாகவும், வாக்கில் அரிச்சந்திரனாகவும் விளங்குவதாகப் புகழ்ந்துள்ளார் புலவர். இத்தகு புகழ்மிக்கது தொண்டை மண்டலம் எனவும் சிறப்பிக்கிறார்.
 ÷ஆனந்தரங்கர் பற்றிய தனிப்பாடல்களை ஜவ்வாதுப் புலவர், மதுர கவிராயர், இராம கவிராயர், தியாகராய தேசிகர் முதலிய புலவர் பெருமக்களும் இயற்றியுள்ளனர். அரிமதி தென்னகன் என்பவர் ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார்.
 -சீ. குறிஞ்சிச்செல்வன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com