அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது.
அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது.

சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது.

நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதான் நூலின் தலைப்பு உள்ளது. அதனால் உடல் ஊனமுற்றோர், மாற்றுத் திறனாளிகள் மன்னித்தருள்க). சீதக்காதி நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம் ஆகியவை நூல் வடிவிலே அச்சிடப்பட்டுள்ளன. இவையன்றிச் சாத்தூர் நொண்டி நாடகம், அவினாசி நொண்டி நாடகம், குளத்தூர் ஐயன் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் ஆகியவை இன்னமும் அச்சேறாமல் உள்ளன என்கிறது ஸ்ரீமகாலிங்கசுவாமி தேவஸ்தானம் (திருஇடைமருதூர்), முதல் பதிப்பு (1967) முன்னுரை. இவற்றுள் அனந்தபாரதி ஐயங்கார் எழுதிய "திருவிடைமருதூர் நொண்டி நாடகம்' இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும் பல நொண்டி நாடகங்கள் இருந்ததை இவரது ஒரு பாடலால் அறிய முடிகிறது.

கி.பி. 1786-1864-இல் வாழ்ந்த அனந்தபாரதி ஐயங்கார் ஒரு வைணவர். இவர் தஞ்சாவூரில் வாழ்ந்த தஞ்சை அரண்மனை வித்துவான் ஆவார். உத்தரராமாயணக் கீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், தேசிகர் பிரபந்தம், மருதூர் வெண்பா, யானைமேலழகர் நொண்டிச்சிந்து, முப்பாற்றிரட்டு ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமானிடம் மிகவும் பக்தியும் ஈடுபாடும் உடையவர் என்பதை இவரது நூலின் போக்கால் அறியமுடிகிறது. இவரே இந்நாடகத்தைத் திருக்கோயில் நாடக மண்டபத்தில் அரங்கேற்றி நடித்ததாகவும் வரலாறு கூறுகிறது.

நாடக ஆசிரியர் சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு அவனருள் பெற்று முடிவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புடைய திருவிடைமருதூரை வந்தடைந்ததாகக் கூறியுள்ளார்.

"அந்த இடைமருதினில் ஆனந்தத் தேன் இருந்தப் பொந்து' என்றும், "இடைமருததனில் ஈண்ட இருந்து படிமப்பாதம் வைத்த அப்பரிசும்' என்றும் இடைமருதீசனின் பெருங்கருணையைப் பாடிப் பரவுவார் மணிவாசகர். இடைமருது என நினைக்கவும் பேசவும் வல்லார்க்குப் புகழ் மிக உளதாம் என்பதை, ""இரைமரு மரவின ரிடைமரு தௌவுளம் / உரைகள துடையவர் புகழ்மிக வுளதே'' என்பார் திருஞானசம்பந்தர். மணிவாசகர் வாக்கிலும், ஞானசம்பந்தர் வாக்கிலும் வந்துதித்த மாணிக்கத் தலமும் ஞானத்தலமுமாகும் இது. இடைமருதூர் ஈசனுக்கு மருதவாணர், ஜோதி மகாலிங்கம் எனப் பெயர்.

அந்த மருதவாணனின் புகழ்பாடும் இந்நாடகத்தில், கடவுள் வாழ்த்தை அடுத்து "தோடையம்' என்று ஒரு பாடல் உள்ளது. இடையில் தரு, விருத்தங்களும், முடிவில் ஆனந்தக் களிப்பும் உள்ளது. இந்நூலில் வாழ்த்துப் பாடல் முடிய முப்பது பாடல்கள் உள்ளன.

திருவிடைமருதூர் நொண்டி நாடகத்தில் வரும் நொண்டி வீசங்க நாட்டினன் என்றும், தன்னை இந்திர குலத்தைச் சேர்ந்த கள்ளர் மரபினன் என்றும், சூரரெத்தினத்தின் மகன் வீரசிங்கன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். நூலின் நாடகத் தலைவனான நொண்டி மேடையில் தோன்றித் தன்னுடைய வரலாற்றைப் பாட்டாகப் பாடத் தொடங்குகிறான். இந்த நாடகத்தில் நொண்டி ஒருவனே நாடகத்துக்குரிய உறுப்பாவான். ஒரு காலை இழந்த நொண்டி, விஞ்சை மூலியொன்று வைத்துக் காலைக் கட்டிக்கொண்டு வந்து மண்டபத்தில் நின்று, தன்னுடைய வீரப்பிரதாபங்களை முதலிலேயே கூறிவிடுகிறான். இதுதான் நொண்டி நாடகத்தின் நூல் மரபாம். இவ்வாறு நொண்டி தன்னைத் தானே அவைக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு, பின்னர் தன் வரலாற்றை நொண்டிச் சிந்தில் பாடத் தொடங்குகிறான்.

பல தெய்வங்களையும் அடியார்களையும் போற்றி, மங்கள வாழ்த்துப் பாடல் பாடிய நொண்டியை அவையில் உள்ள சிவனடியார்கள் "நீர் யாரென்று' கேட்க, வீரசிங்கன் தன் பிறப்பின் வரலாறு, தான் கற்ற கல்வி போன்றவற்றைப் பற்றிக் கூறி; திருவையாற்றிலிருந்து திருக்குடந்தை சென்று ஸ்ரீஆதிகும்பேசுவரரைக் கண்டு வணங்கி ஒரு தாசியைப் புணர்ந்தமையையும்; அதோடு தொடர்புடைய செய்திகளையும்; அதனால் தனக்குக் கால் போன விதத்தையும்; சிதம்பரம் சென்று நடராசரைத் தரிசித்து, கனகசபாபதி என்னும் தீட்சிதரைக் கண்டு, தன் கால் வளரும் மகிமையுள்ள தலம் எது என்று வினவ, அவர், இடைமருதின் மகிமையைக் கூறியதையும்; தைப்பூசத்தன்று ஏகநாயகரை தரிசித்து, கல்யாண தீர்த்தத்தில் நீராடிய பின் தன் கால் கூடியமையும்; தன் கால் கூடிய ஆனந்தத்தால் மகாலிங்கப் பெருமானைத் துதித்ததையும் கூறி, இறுதியாக உள்ள ஆனந்தக் களிப்பின் இறுதியில்,

தொண்டர் பிணி தீர்த்தருளும் மருந்தே - ஞானந்

தோயும் வேதாந்தமாம் மலையினுள் மருந்தே

அண்டர் முனிவோர் தொழும் ஆருயிர் மருந்தே -

எங்கள் அன்புருவாம் மகாலிங்க மருந்தே!

வாழி சிவக்கொழுந்தாம் பரம்பரையும் வாழி!

வீழி சுப்பிரமணிய முனிவரனும் வாழி!

வாழி துறைசைவனார் ஆதீனமும் வாழி!

வளர்புலவர் சிவனடியார் வாழி வாழி!

என்று நாடகத்தை முடிக்கிறான். தவறு செய்து தண்டனை பெற்ற ஒருவன் சிவபெருமானின் திருவருளால் மீண்டும் காலைப் பெற்றான்; அதனால் வாழ்வு பெற்றான் என்று எடுத்துரைப்பதே எல்லா நொண்டி நாடகங்களின் கருவாக அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட நொண்டி நாடகங்கள் இன்று வெற்றி பெறாமல் போனதற்கான காரணம் என்ன? "நாடகத்தில் நடிக்கக்கூடியவன் ஒருவனே என்பதாலும், ஏனைய துணைப் பாத்திரங்கள் இல்லாமையும், ஆண் மகன் ஒருவன் மட்டுமே தோன்றுவதாலும்தான்' என்பது அறிஞர்கள் பலரின் ஒருமித்தக் கருத்தாகும்.

மக்களின் பார்வைக்குப் படாமல் நொடித்துப்போன இத்தகைய நொண்டி நாடகங்கள் மீண்டும் கால் பெற்று எழுந்து நடமாட வேண்டும்; இதை நாடகத் துறையினர்தான் வளர்த்தெடுக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com