சாபத்தால் விளைந்த பலன்!

கி.பி.16ஆம் நூற்றாண்டில் திருஅண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான குகை நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் என்ற திருத்தலத்தில்
சாபத்தால் விளைந்த பலன்!
Updated on
2 min read

கி.பி.16ஆம் நூற்றாண்டில் திருஅண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான குகை நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் என்ற திருத்தலத்தில் பிறந்தவர். லிங்காயத்து எனும் பரம்பரையில் வந்த இவர், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அண்ணாமலையார், நமச்சிவாயர் கனவில் தோன்றி, தென்திசைக்கு வரும்படிக் கூறியதால், தன் முந்நூறு சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்தார்.
 ÷திருஅண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறிமாறி தங்கியதாகவும், இறுதியில் அண்ணாமலையார் தன்னுடைய மலையில் உள்ள ஒரு குகையில் தங்கிக்கொள்ளுமாறு கூற, அவ்வாறே குகை ஒன்றில் தங்கியதால் "குகை நமச்சிவாயர்' என்று அழைக்கப்பட்டார். இவருடைய ஜீவசமாதி கோயில் திருஅண்ணாமலையில் உள்ளது.
 ÷அண்ணாமலையாரின் அன்பிற்கும், அருளுக்கும் பாத்திரமான குகை நமச்சிவாயர், திரு அண்ணாமலைக்கு வந்து, திருமண வீட்டில் எரிந்த பொருளை மீட்டுத்தருதல், சிவனுக்குச் சூட்டிய மலர்மாலை தன் கழுத்தில் விழும்படிச் செய்தல், இறந்தவரை உயிர்ப்பித்தல் எனப் பல்வேறு சித்து விûளையாடல்களை நிகழ்த்திக் காட்டியும், மக்களுக்கு அருள் வழங்கியும் வாழ்ந்தவர்.
 ÷குகை நமச்சிவாயரைக் கண்டு பொறாமை கொண்ட ஒருவர், அவரது பெயரைக் கெடுப்பதற்குத் திட்டம் தீட்டினார். ஓர் இளைஞனை அழைத்து, ""உன்னை குகை நமச்சிவாயரிடம் அழைத்துச் சென்று, நீ இறந்துவிட்டதாகக் கூறப் போகிறேன். அவர் என்ன சொன்னாலும் எழுந்திருக்கக்கூடாது. உன்னை எப்படி உயிர்ப்பிக்கிறார் எனப் பார்க்கிறேன். உனக்கு நிறைய பணம் தருகிறேன்' என்று கூறி, அவனை ஒரு பாடையில் படுக்க வைத்தார்.
 ÷பிறகு, குகை நமச்சிவாயரிடம் சென்று, இளைஞன் இறந்து விட்டதாகவும், அவனை உயிர்ப்பித்துத் தரும்படியும் வேண்டினார். இறந்தவன் இறந்தவனே என்றும், அவனை உயிர்ப்பித்துத் தரும் சக்தி தனக்கில்லை என்றும் கூறினார் குகை நமச்சிவாயர்.
 ÷குற்றம் சாட்ட நினைத்த அந்தப் பொறாமைக்காரர், குகை நமச்சிவாயரை ஏளனம் செய்துவிட்டு, இளைஞனை எழுப்பினார். ஆனால், அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. குகை நமச்சிவாயர்தான் அந்த இளைஞனைக் கொன்றுவிட்டதாகக் கூறி திட்டித் தீர்த்தார்.
 ÷இதனால் வெறுப்படைந்த குகை நமச்சிவாயர், "குறும்பர்கள் வாழும் ஊர்; அடுத்தவரைக் கொன்றால் கூட ஏன் என்று கேட்காத ஊர்; கொடும் காளை மாடுகள் கதறும் ஊர்; ஏராளமான பழிகளைச் சுமக்கும் ஊர்; பாதகர்கள் வாழும் ஊர் என்றெல்லாம் திருஅண்ணாமலை நகரைப் பற்றி நொந்து பாடினார். இறுதியில், தனது சாபத்தால் அழியும் ஊர் என்று சபிக்க வாய் திறந்தபோது, அவர்முன் காட்சியளித்த அண்ணாமலையார், "இந்த ஊரில்தான் நானும் இருக்கிறேன்' என்று அவரை மேற்கொண்டு பாடவிடாமல் தடுத்தாட்கொண்டார். அண்ணாமலையாரின் குறுக்கீடு காரணமாக, "அழியும்' என்று நிறைவடைய வேண்டிய செய்யுளை, "அழியும் அழியா அண்ணாமலை' என்று பாடி முடித்தார். இப்பாடல் வாய்மொழிப் பாடலாக வலம் வருகிறது.
 ÷ஆதியும் அந்தமும் காணமுடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க - புகழ்மிக்க இவ்வூரில், குகை நமச்சிவாயரின் சாபத்தின் பலன் இன்றும் இருப்பதாகவும், அதனால்தான் வந்தாரை வாழ வைக்கும் திருஅண்ணாமலையில், உள்ளூர் மக்கள் வாழும் தெருக்களில், தெருவுக்கு ஒருவராவது குகை நமச்சிவாயரின் சாபத்தின் பலனை அனுபவிக்கிறார்கள் (ஏதோ ஒருவிதத் துன்பம்) என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை. அப்பாடல் இதுதான்:
 
 "கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளாவூர்,
 காளையரே நின்று கதறுமூர் - நாளும்
 பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
 அழியும் அழியாவூ ரண்ணாமலை!'
 
 -சந்திர. பிரவீண்குமார்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com