செம்மொழித் தகுதியும் தமிழும்!

செந்தமிழ்' என்று தொல்காப்பியர் காலத்திலேயே அழைக்கப்பட்ட மொழி "தமிழ்' மொழி. மிகத் தொன்மையான தமிழ்மொழி, எழுத்துருவங்களையும் தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு.700) வரையறை செய்து கொண்ட மொழி ஆகும்.
செம்மொழித் தகுதியும் தமிழும்!
Published on
Updated on
1 min read

செந்தமிழ்' என்று தொல்காப்பியர் காலத்திலேயே அழைக்கப்பட்ட மொழி "தமிழ்' மொழி. மிகத் தொன்மையான தமிழ்மொழி, எழுத்துருவங்களையும் தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு.700) வரையறை செய்து கொண்ட மொழி ஆகும்.
 திராவிட மொழிகளின் தாய்மொழி "தமிழ்' என்றும், தமிழ்மொழி "உயர்தனிச் செம்மொழி' என்றும் 1856-இல் கால்டுவெல் உறுதி செய்தார். சமற்கிருதமே செம்மொழி, தமிழ் செம்மொழி இல்லை என்று கூறிச் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழை ஒதுக்கியபோது, "தமிழ் செம்மொழியே' என்று வாதிட்டு வெற்றி பெற்றவர் மு.சு. பூரணலிங்கம் பிள்ளை. "தமிழ் செம்மொழியே' என்று கட்டுரை எழுதியவர் பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியார்.
தமிழைச் செம்மொழி எனச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்க வேண்டும் என்று 1918-இல் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த சித்தாந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1919-20 இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இக்கோரிக்கையை முன்வைத்தது. 1988இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் 1998-இல் சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. 1995-இல் உலகத்தமிழ் மாநாடும் 1998, 2002 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசும் இதே தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதனை இந்திய அரசு ஏற்காததால் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மொழி அறிஞர்கள் செம்மொழி என்பதற்குக் கூறும் பதினோரு தகுதிகள் வருமாறு: 1. தொன்மை, 2. கிளைமொழிகளின் தாய்மொழி 3. பிறமொழிகளின்றித் தனித்தியங்கும் ஆற்றல் 4. பிறமொழிகளிலிருந்து சிறப்பால் வேறுபடுதல் 5. மொழி இலக்கணக் கோட்பாடுகள் உடைமை 6. பிற மொழியாளர்க்கும் இனத்தார்க்கும் பொருந்தும் இலக்கியப் பொதுமை 7. பட்டறிவு இலக்கியங்கள் 8. சமயச் சார்பின்மை 9. நடுநிலைமையான இலக்கியங்கள் 10. உயரிய சிந்தனைகளைத் தரும் இலக்கியங்கள் 11. கலை இலக்கிய மேன்மை. இத்தகைய தகுதிகள் அனைத்தையும் கொண்ட மொழி தமிழ்மொழி.
உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய கிரேக்கம், எபிரேயம், உரோம், தமிழ், இலத்தீன், சீனம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் சீனமொழியும் தமிழும் மட்டுமே பெருவாழ்வு பெற்று விளங்குகின்றன.
மொழியியல் என்பது நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட வளர்ச்சியாய் இருக்கத் தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இலக்கண மரபைக் காட்டுவது உயர்வானதாகும். அகத்திணை, புறத்திணை என்று பாகுபாடும், இவற்றில் அமைந்த அறம் சார்ந்த ஒழுக்க நெறிகளும் தமிழ்மொழி வாழ்விலும் இலக்கியத்திலும் பெற்றுள்ள ஒருமையையும் நாகரிகப் பண்பாட்டுப் பெருமையையும் காட்டும்.
இத்தகைய பல தகுதிகள் இருப்பதனால்தான் தமிழ், "செம்மொழி' எனும் தகுதியைப் பெற்றது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com