இந்த வார கலாரசிகன்

இலக்கியப் பத்திரிகையையும் ஜனரஞ்சகமாக நடத்த முடியும் அல்லது ஜனரஞ்சகப் பத்திரிகையை இலக்கியத்தரத்துடன் வெளிக்கொணர முடியும் என்பதை நனவாக்கிக் காட்டியவர் கோமல் சுவாமிநாதன்.
இந்த வார கலாரசிகன்

இலக்கியப் பத்திரிகையையும் ஜனரஞ்சகமாக நடத்த முடியும் அல்லது ஜனரஞ்சகப் பத்திரிகையை இலக்கியத்தரத்துடன் வெளிக்கொணர முடியும் என்பதை நனவாக்கிக் காட்டியவர் கோமல் சுவாமிநாதன். இவர் 1991 முதல் 1995 வரையில் வெளிக்கொணர்ந்த "சுபமங்களா' இதழ், தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முயற்சி.
"சுபமங்களா' எப்போது கடைக்கு வரும் என்று காத்திருந்து வாங்கிப் படித்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். "சுபமங்களா'வின் 59 இதழ்களும், அந்த இதழில் வெளிவந்த சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்ட "சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்' என்கிற மலரும் இப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
அன்றைய "சுபமங்களா' இதழில் வெளிவந்த நேர்காணல்கள் குறிப்பிடத்தக்கவை. இணையத்தில் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி!

தமிழ், தமிழினம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால், உண்மையாகத் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் குறித்து நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் இல்லை. நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்த பாவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவரைப் பற்றி சாமானியத் தமிழனுக்குத் தெரியாது. ஆனால், வடநாட்டு திரைப்பட நடிக - நடிகையர் பற்றித் தெரியும். இந்தத் தலைகுனிவை என்னவென்பது?
அரித்துவாரமங்கலம் பெரும்புலவர் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் என்ற மாமனிதரை, விவரம் தெரிந்த ஒரு சிலரைத் தவிர, தமிழ்கூறு நல்லுலகம் அறவே மறந்து விட்டது. அவரது தமிழ்த் தொண்டும் தியாகமும் இன்றைய தலைமுறைக்குத் தெரிவிக்கப்படாமல் காலத்தின் ஓட்டத்தில் கரைந்துவிட்டது. ஆனாலும்தான் என்ன? "தொல்காப்பியம்' வாழும் காலம் அவரைப் பற்றி எங்காவது ஒரு மூலையில் யாராவது சிந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
யார் இவர்? இவரது தமிழ்த் தொண்டுதான் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறையினருக்கு இவரைக் குறித்த பதிவைச் சொல்லாமல் போனால் நான் தமிழ் கற்றதற்கும் தமிழில் எழுதுவதற்கும் பொருளே இல்லாமல் போய்விடும். இவரைப் போன்ற தமிழ்ச் சான்றோர் குறித்த தகவல்கள் இல்லாமல் நமது பள்ளிக்கூடத் தமிழில் பாட நூல்கள் உருவாக்கப்படுகின்றனவே, அது யார் செய்த குற்றம்; சதி?
தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, அரை நூற்றாண்டு காலம் மட்டுமே வாழ்ந்து மறைந்த பெருந்தகை வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார். அரசன் சண்முகனார், "தமிழ்த்தாத்தா' உ.வே. சாமிநாதையர், அருணாசலக் கவிராயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட பல
தமிழறிஞர்களைப் போற்றி ஆதரித்த புரவலர் இவர். தமிழுக்கு இவர் செய்திருக்கும் தொண்டும், பங்களிப்பும் கணக்கிலடங்கா.
1901 செப்டெம்பர் 14-ஆம் தேதி சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேது சமஸ்தான மன்னரின் முன்னிலையில் பாண்டித்துரைத் தேவருடன் இணைந்து நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்ததில், இராசாளியாருக்குப் பெரும்பங்கு உண்டு. அதேபோல, வடவாற்றுக் கரையில் உள்ள பஞ்சநதிப் பாவாசத்திரத்தில் கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தைத் தோற்றுவித்தவரும் இராசாளியார்தான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசில் தமக்கு இருந்த செல்வாக்கால் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாகத் தமிழ்த்துறை தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.
தொல்காப்பிய பாயிர விருத்தி, நற்றிணை, வீரசோழியம், தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை உள்ளிட்ட பல ஓலைச்சுவடி நூல்கள் இவரால்தான் அச்சு வாகனம் ஏறின.
தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரையில் பிழையில்லாத சரியான சுவடி இராசாளியார் வீட்டில்தான் இருந்தது. கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளைக்கு அந்தச் சுவடிகளைக் கொடுத்து உதவி, அச்சில் கொணர்வதற்கு உதவியவர் இராசாளியார். அதனால்தான் "தொல்காப்பியம் இராசாளியார் வீட்டுச் சொத்து' என்கிற சொலவடை தஞ்சைத் தரணியில் புழங்கியது.
இராசாளியார் தனது சொந்த நூலகத்தில் எங்கும் கிடைக்கப் பெறாத அரிய நூல்களையும், பழங்காலச் சுவடிகளையும் சேகரித்து வைத்திருந்தார். அவரிடமிருந்து புறநானூற்று ஓலைச்சுவடிகள் முழுமையும் பெற்ற பின்புதான்,
முழுமைபெற்ற புறநானூற்றுச் சுவடிகளை அச்சேற்றியதாகத் "தமிழ்த்தாத்தா' உ.வே.சா. தனது புறநானூற்று முதற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இராசாளியார் அந்தக் காலத்தில் கோடையில் இளைப்பாற, வெள்ளைக்கார ஆளுநர்களுடன் உதகைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கே அழைக்கப்பட்டவர் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி உதகை சென்று கொண்டிருந்த இராசாளியார், 1903-இல் ரூ.10,000 சொந்தச் செலவில் குன்னூரில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார். 1911-இல் குன்னூரில் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவி அதை ஆங்கிலேய ஆளுநரால் திறக்கவும் செய்தார்.
இப்போது அந்த நூலகம் பாழடைந்து கிடக்கிறது.
அந்த நூலகத்தை சீர்படுத்தி இரகுநாத இராசாளியார் நினைவு நூலகம் எனப் பெயரிட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் என்ன தடை இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழக அரசும் நூலகத் துறையும் மனது வைத்தால், அந்தத் தமிழறிஞரின் ஆன்மா சாந்தி அடையும்.
பூண்டி துளசி ஐயா வாண்டையாரின்
வழிகாட்டுதலுடன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அம்மாபேட்டை த. கோபால்சாமி, வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் சாதனைச் சரித்திரம் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். பலருடைய வாழ்த்துரைகளுடன் சிறப்பு மலர் போலத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சியை அடிப்படையாக வைத்து, ஒரு புத்தகமாக அவரது சரித்திரம் வெளிக்கொணரப்பட வேண்டும்.

கர்நாடகம் உச்சநீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்த அன்று கட்செவி அஞ்சலில் பகிரப்பட்ட யாரோ எழுதிய "இதுதான் தேசியம்' என்கிற கவிதை சிந்திக்க வைத்தது.

நாட்டுடைமையாம்
நகராத நெய்வேலி நிலக்கரி
தனியுடைமையாம்
பாய்ந்தோடும் வற்றாத காவிரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com