கோடை வெப்பக் கொடுமை

கோடை வெப்பக் கொடுமை

உயிரினங்களை பஞ்சபூதங்கள் தொடர்ந்து தாக்குவதும், கொடுமை தாளாது உயிரினங்கள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வரும் இயற்கை நிகழ்வுகள்.

உயிரினங்களை பஞ்சபூதங்கள் தொடர்ந்து தாக்குவதும், கொடுமை தாளாது உயிரினங்கள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வரும் இயற்கை நிகழ்வுகள். இதில் கோடை வெப்பத் தாக்கக் கொடுமை உயிரினங்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு கோடையின் கொடுமை தாளாது பலர் மரணிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை அறிகிறோம். செடி, கொடி, மரம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்திருந்த மன்னராட்சி காலத்திலேயே கோடையின் கொடுமை வாட்டி வதைத்திருக்கிறது. அன்றைய கோடைக் கொடுமையின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை திருவிளையாடல் புராணம், தருமிக்குப் பொற்கிழி கொடுத்த படலத்தில் இடம்பெறும் பாடலொன்று விவரிக்கிறது.
வெப்பம் தாளாது இருப்போர் வசந்தம் வந்து வீசாதா? இளம் தென்றல் தீண்டும் சுகம் கிட்டாதா? என்று ஏங்குவதுதான் வழக்கம். ஆனால், அந்த இளம் தென்றலே இளவேனிற்கால வெய்யிலின் கொடுமைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு ஒரு குளிர் தென்றலைத் தேடி ஓடியதாம். தண்ணென்று நிழல் தரும் தருக்கள் நிறைந்த சோலைகள் வெப்பக் கொடுமை தாளாது குளிர்ச்சியான வேறு ஒரு சோலைவனம் வந்து சேராதோ என்று ஏங்கி வாடியதாம். புனிதம் நிறைந்த தூய நீரும் குளிர்ச்சியும் பொருந்திய தடாகங்கள் வெப்ப வீச்சுத் தாளாமல் புதுமலர் நிறைந்து பொருந்தி தண்ணென்று இருக்கும் நீரோடையோடு சேரமாட்டோமா என்று ஏங்கித் தவித்ததாம். குளிர் மதியும் கோடை வெப்பச்சலனம் தாங்கமாட்டாது வெள்ளிய நிற மதியை எண்ணி ஏங்கித் தவித்ததாம்.
மக்கட் திரள் குறைவாகவும் மரக்கூட்டம் மற்றும் நீர்நிலைகள் நிறைவாகவும் இருந்த செண்பகப் பாண்டியன் காலத்தில் கோடையின் கொடுமை எவ்வளவு உச்சத்திலிருந்தது என்பதைப் புலப்படுத்தும் அப்பாடல் வருமாறு:

""மனிதர் வெங்கோடை தீர்க்கும் வசந்தமென் காலும் வேறு
துனிதவி ரினங்கால் வேண்டுஞ் சோலையுஞ் சோலை வேண்டும்
புனிதநீர்த் தடமும் வேறு புதுமல ரோடை வேண்டும்
பணிதரு மதியும் வேறு பான்மதி வேண்டுங் காலம்''

கொடிது கொடிது இளவேனிற் (சித்திரை, வைகாசி) கோடை கொடியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com