தமிழ்ச் செல்வங்கள்: நத்தை

நில ஊரிகளில் ஒன்று நத்தை. மேலே கூடு கொண்டு அசைகிறதா, அசையவில்லையா என்று எண்ணும் அளவில் அசைந்து செல்வது அது. ஆமையைப் போல் உடலைக் கூட்டுள் ஒடுக்கிக் கொள்ளவும் கூடியது. நீர்வளப் பகுதியில் அதனைக் காணலாம்.
தமிழ்ச் செல்வங்கள்: நத்தை

நில ஊரிகளில் ஒன்று நத்தை. மேலே கூடு கொண்டு அசைகிறதா, அசையவில்லையா என்று எண்ணும் அளவில் அசைந்து செல்வது அது. ஆமையைப் போல் உடலைக் கூட்டுள் ஒடுக்கிக் கொள்ளவும் கூடியது. நீர்வளப் பகுதியில் அதனைக் காணலாம்.
தேனீக்களின் உணர்வு நத்தைக்கும் உண்டு போலும். உணர்வுக் கூம்பு கூரியதாய் மேலெழுந்து கோரைப் புல் வெண் முளை போல நீண்டு நிமிர்ந்து நிற்கும். அதன் அசை நடையைப் பொறுமையுடன் அமைந்து கண்டால் ஏதோ ஒரு குறிக்கோளுடன் செல்வதைக் கூர்ந்து அறியலாம். ஓரடி அளவு இடைவெளி! இப்பால் ஒரு நத்தை; அப்பால் ஒரு நத்தை! இரண்டும் ஒன்றை ஒன்று உணர் கருவியால் அறிந்து இணைவதற்காக வருகின்றன என்பதை என்னால் உணர முடிந்தது.
அரைமணிப் பொழுது நின்றேன்; நோக்கு நத்தையின் போக்கை அன்றி வேறொன்று இல்லாத ஒரு நோக்கிலே நின்றேன்! வியப்பினும் வியப்பு! இரண்டும் நெருங்கின! மேலே கூண்டுடைய அவை கீழேயுள்ள உடலொடு உடலாகி ஒரு கோலி உருண்டை போலாகிவிட்டன! இரண்டன் உடலுறுப்புகளும் அக் கோலி உருண்டையுள் ஒடுங்கி இரண்டற்ற ஒருமையாய் விட்டன. தன் தன் உணர்வொன்றல் போல் உடல் ஒன்றலும் ஆகிக் கொள்ளை கொண்டது, அவ் வொருமை உருண்டை!சங்கச் சான்றோன் ஒருவன் என் உள்ளுள் புகுந்தான்.
""உயிர் பகுத்தன்னர்'' என்னும் முச் சொற்புணர்ப்புக்கு "உருவொளி' காட்டி அவன் திறத்தை நாட்டினான். நத்துதல் என்பதன் பொருள் என்ன? நத்துதல் விரும்புதல்; அதுவே ஆகுமாறு ஆர்வம் கொள்ளுதல். நத்துதல் மெல்லினம் பெற்றால் நந்துதல்! நந்துதலாவது விளங்குதல், ஒளி செய்தல்! ஒளி குன்றாமல் எரியும் விளக்கு, "நந்தா விளக்கு'. ""நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்'' என்பது சொல்லின் கிழத்திக்குச் சூட்டப்பட்ட பெயர்களுள் ஒன்று. நத்தைச் சுண்ணாம்பு, எச் சுண்ணாம்பினும் வெண்மை மிக்கது என்பது கண் கூடு! ""நத்தைக் காதல் போலாக நாட்டில் காதல் உண்டேயோ'' என்பது அதனைப் பார்த்ததால் கிளர்ந்த பாட்டு.

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com