தமிழ்ச் செல்வங்கள்: வண்டு

தவச் சாலையின் நடைமேடைக்கு முன்னால் அவரைப் பந்தல் இருந்தது.பந்தலின் அடிக்கால், மூங்கில்! ஒரு காலில் வண்டு துளையிட்டுக் குடியேறியுள்ளது.
தமிழ்ச் செல்வங்கள்: வண்டு

தவச் சாலையின் நடைமேடைக்கு முன்னால் அவரைப் பந்தல் இருந்தது.
பந்தலின் அடிக்கால், மூங்கில்! ஒரு காலில் வண்டு துளையிட்டுக் குடியேறியுள்ளது.
ஒரு நாள் தற்செயலாக வண்டுகள் இரண்டு மாறி மாறிப் பந்தலை வட்டமிடுவது கண்டு உற்று நோக்கினேன். மூங்கில் துளைக்குள் புகுதலும் வெளிப்படலும் வட்டமிடலும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன.
நெடுந்தொலை போகவும் இல்லை; நேராகவும் போகவில்லை! வட்டமிடல்! உட்புகல்! "அருந்துதல் பொருந்துதல்' என்றாரே வள்ளலார்! அவ்வாழ்வுதானே அவற்றுக்கு! உறைவிடத்தையும் உண்டாக்கிக் கொண்டது! அவற்றின் வாழ்க்கைத் தேவை நிறைவாயிற்று அல்லவா! கடுங்காற்று ஒரு நாள் அடித்திருக்கிறது. அடர் கொடிப் பந்தலை அப்படியே புரட்டிச் சாய்த்து விட்டிருக்கிறது.
பூத்துக் காய்க்க வேண்டிய நிலை! சாய்ந்த கால்களை எடுத்து மீளவும் ஊன்றியிருக்கிறார் காவலர். மூங்கில் காலை மாற்றி ஊன்றி விட்டார்! வண்டு துளையிட்ட பகுதி குழிக்குள் போய் மண்ணை மூடி இருக்கக் கண்டேன். வண்டு உள்ளே இருக்க, அதன் குடியிருப்பைக் குழிக்குள் புதைத்து மூடிவிட்டால் கொடுமை அல்லவா!
""இப்படி மாற்றி ஊன்றி விட்டீர்களே'' என்று நான் வினவும்போது வண்டு வேறொரு வழியாக வெளிவந்து வட்டமிட்டது. உற்று நோக்கினால் வேறு பக்கத்தில் துளை உள்ளது. எலிதான்
தன் வளையை ஒன்றுக்கு இரண்டு மூன்றாக
வைத்திருக்கும் என்பதை அறிவோம். ஆனால், வண்டும் அச் சூழ்ச்சிய இயற்கை தேர்ந்தது என அறிந்தேன்.
"வண்டு' என்று பெயரிட்டவனை எண்ணினேன். காட்டு வேலைக்குச் செல்வார் கலயத்தில் உணவு கொண்டு செல்வர். கலயத்தின் வாயைத் துணியால் சுற்றிக் கட்டுதலை வண்டு கட்டுதல் என்பர். பண்டம், பால், மோர், நெய் முதலியவை வைத்த கலங்களுள் ஈ, எறும்பு புகாமல் வண்டு கட்டி வைக்கும் வழக்கம் இன்றும் சிற்றூர்களில் உண்டு.
வண்டு தன் சுற்றால், வட்டம் வளையம் முதலியவற்றின் மூலமாகியது. செயற்கைப் பொருள்களாம் வண்டி, வட்டு, வட்டம், வட்டை முதலாய சொற்களுக்கு வடிவும் பெயரும் தந்தது எண்ணத்தில் வந்தது.
வண்டி என்பதன் பின் வண்டு என்னும் பெயர் வந்திராதோ என எண்ணுவார் இருக்கலாம். வண்டு இயற்கை உயிரி! வண்டி முதலியவை செயற்கைய! தமிழோ இயற்கை இயங்கியல் வழி அமைந்த வரியும் ஒலியும் உடைய மொழி என்பதை எண்ணின் தெளிவாம்.
- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com