தமிழ்ச் செல்வங்கள்: மூடல்

''கண்ணை மூடி விட்டார்'' என்றால், இறந்தார் என்பது மக்கள் வழக்கு. கண்மூடித்தனமும் ஒருவகையில் அறிவுச் சாக்காட்டு நிலையே!

''கண்ணை மூடி விட்டார்'' என்றால், இறந்தார் என்பது மக்கள் வழக்கு. கண்மூடித்தனமும் ஒருவகையில் அறிவுச் சாக்காட்டு நிலையே!
அதனால் வள்ளலார் போன்ற வாழ்வியல் சிந்தனையாளர்கள்,
""கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக'' என்றனர். அதற்காக வழிகாட்டினர்; வாழ்ந்தும் காட்டினர்.
கண்ணிமை மூடித் திறத்தல் கொண்டு காலத்தை அளந்தனர் இலக்கணர்.
""கண்ணிமை, கைந்நொடி அவ்வே மாத்திரை'' என்றனர். எழுத்துகள் ஒலியளவுக் கருவியாகக் கொண்டது அது. கண்ணைக் கட்டி விளையாடல் சிறுவர் விளையாட்டு. கண் காண வெளிப்படாவாறு செயற்கரிய செய்வார் போலக் கண்கட்டு வித்தைக்காரர். அந்தக் கரவைக் காட்டி, இப்படிச் செய்யப்படுவது அது என விளக்குவாரும் இதுகால் கிளர்ந்தமை அதற்கு மூடு விழாச் செய்து கொண்டு வருகின்றது.
அழும் குழந்தை வாய்மூட மருட்டல், வெருட்டும் வாடைக்கும் வெப்புக் காற்றுக்கும் கதவை மூடச் செய்தல், கதிரும் மதியும் விண்மீனும் நமக்குப் புலப்படாவாறு கருமுகில் மூடல் ஆயவை இயற்கை மூடல்களாம்!
பனிக்கும் பனிக் காற்றுக்கும் ஈடுதர மாட்டாமல் எத்தனை எத்தனை வெப்புடை, வெப்புப் போர்வை போர்த்தாலும் திணறும் நிலை பனிமலைப் பகுதிக்கும் கதிரொளி காணா முடி நிலைப் பகுதிக்கும் (துருவம்) செல்வார் என்ன கொண்டு மூடினும் தாங்க மாட்டாமை தெளிவு. பனிமூட்ட நிலை இவை.
தீ மூட்டாமல் சமைக்க முடியாப் பழங்காலம் இன்றில்லை!
எண்ணெய் அடுப்பு, மின் அடுப்பு, ஆவி அடுப்பு, ஏன் கதிர் வெப்ப அடுப்பு என எத்தனையோ வகைகளைக் காண்கிறோம். இவையெல்லாம் இயற்கையால் தீ மூண்டது கண்ட மாந்தன் மூட்டி அமைத்தது கொண்ட மேல் வளர்ச்சியாயவை.
விளக்குக்கும் அடுப்புக்கும் தீ மூட்டல் ஆக்கம்! அடுத்தவன் வீட்டுக்கும் ஊர்க்கும் தீ மூட்டல் அறக் கேடாம்; வஞ்ச நெஞ்சும் வல்லாண்மையும் ஒருங்கே கொண்ட நெஞ்சிலாப் பாழும் மூளையர் செயலாம்.
இதிலே தீத்திறம் செய்வாரினும் தீத்திறத்தர் பிறரை இல்லதும் பொல்லதும் சொல்லியும் செய்தும் மூட்டிவிட்டு அவர் அழிவாம் வெப்பத்தில் தீக்காயும் தீயவர்.

""தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்''

என்பதற்குச் சான்றானவர். மூடல், மூட்டலாய், மூன்தலாய், மூண்டு எரிதலாய் மாறினும் அதன் அடிப்படை, "இருவேறு இயற்கை' எனப்படும் "ஊழ் முறை' வட்டத்திலேயே சுழல்வதைக் கண்டு தெளியும் திறம்
எளிதாம்!
தீ முதலாம் ஐம்பூதங்களின் இயற்கையும் இருவேறு தன்மைய எனினும் அவை தேடி வந்து அழியா! அவற்றின் அழிப்பு உண்டாயினும் பொதுமையை அன்றித் தனியாள் மேல் மட்டும் செய்யும் அழிமானம் இல்லையாம்! இதனால் தீயனே, தீயினும் கேடன் என்பது முடிந்த முடிபாம்!

நிறைவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com