பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ்க்கொடை!

'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' எனத் தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றி தமிழர் உள்ளங்களில் நிறைந்திருக்கும் தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளையின்
பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ்க்கொடை!
Published on
Updated on
2 min read

'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' எனத் தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கம் இயற்றி தமிழர் உள்ளங்களில் நிறைந்திருக்கும் தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளையின் தமிழ்ப்பணி தனிச்சிறப்புடையது.
ஆங்கிலேயரின் ஆட்சியும் ஆங்கில மொழியின் செல்வாக்கும் கோலோச்சிய காலம் 19ஆம் நூற்றாண்டு. ஆரம்பத்தில் தமிழ்
வழிக் கல்வியும் பின்னர் ஆங்கிலவழிக் கல்வியும் கற்க நேரிட்ட நிலையிலும் சுந்தரம்பிள்ளை தமது புலமை அனைத்தையும் தாய்மொழியிலேயே வெளிப்படுத்தினார். "நடித்துக் காட்டப்படுவதுதான் நாடகம்' எனும் நிலையை மாற்றி, படித்துக் காட்டி மகிழவும் நாடகம் உதவும் என நிறுவியவர் சுந்தரம்பிள்ளை. எட்வர்ட் லிட்டன் பிரபுவின் பட்ங் நங்ஸ்ரீழ்ங்ற் ஜ்ஹஹ் எனும் ஆங்கில நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட "மனோன்மணியம்' நாடகத்தை முடித்த நிலையில், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தமிழன்னையிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
""தெய்வத் தமிழாகிய உன்னை பெருமைப்படுத்தும் நோக்கில் உனது பழைய நூல்களை அச்சிட்டும், அழகு மிகுந்த நால்வகைப் பாவால் புதிய நூல்களை இயற்றியும் பலர் தொண்டு புரிந்து வருகின்றனர். நீ பெற்ற புதல்வர்களுள் நான் கடையேன். ஒன்றும் அறியாத சிறுவன். கொடுந் தமிழ்நாட்டு மலையாளப் பகுதியில் குடியிருந்து வருபவன். இருப்பினும் நீயே தாய் என்னும் நிலைத்துப் பொருந்திய பேராசை எனது உள்ளத்தில் தோன்றுகிறது. இந்நாடகம் வளமற்றது என்றாலும் நின்காலில் சிறுவிரல் மோதிரமாக எனது அன்பின் அடையாளம் எனக் கருதி ஏற்றுக் கொள்க'' என்பதை,

""அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாய் எனுந் தன்மையின்
மெய்பே ராசைஎன் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென்று இழைத்த இந்நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிரல் அணியாக்
கொள்மதி அன்பே குறியெனக் குறித்தே''

என்று ஆசிரியச் சுரிதகத்தில் பாயிரம் பாடியுள்ளார்.
தத்துவ ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் அயராது பணியாற்றியதன் விளைவாக இவருக்கு சென்னை மாகாண அரசு "ராவ்பகதூர்' எனும் உயரிய பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தியது. இவரின் தமிழ்ப் பணியைக் கண்டு மனம் மகிழ்வுற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,

""ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த
பேராசிரியர் பெருமான்''

எனப் பாராட்டுகிறார். டாக்டர் அ. சிதம்பரநாதச்
செட்டியாரும் டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப்பற்றையும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலையும் போற்றிச்
சிறப்பிக்கின்றனர்.
மனோன்மணியத்தில் தமிழ் மொழியையும், அதில் உதித்த இலக்கியங்களையும் விரிவாகக் கூறிப் பெருமைப்படுத்தியுள்ளார் சுந்தரம்பிள்ளை.
மதுரை நகரில் முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களைச் சாரும். தகுந்த இடத்தில் விரிவடைந்து விளங்கும் தமிழ்ச்சங்கத்தாரின் சங்கப் புலமை தமிழ்மொழியின் உண்மையான வரலாற்றுக்கு அடையாளமாகும் என்பதை,

""தக்கவழி விரிந்திலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலம் சிறந்த உன்தன் மெய்ச்சரித வியஞ்சனமே''

என்னும் வரிகளில் (பாயிரம்) சுட்டுகிறார்.
மனோன்மணியம் நாடகத்தில் சீவகன் தன் குருவாகிய சுந்தரமுனிவரை, திருநெல்வேலியில் தாம் கட்டிய புதிய அரண்மனைக்கு அன்புடன் அழைத்து, வணங்கி மகிழ்கின்றான். தன் அமைச்சனாகிய குடிலனிடம் கோட்டையின் அழகைக் காட்டும்படி பணிக்கிறான். குடிலன் சுந்தர முனிவரை வணங்கிப் பின்வருமாறு கூறுகிறான்: "தென்பாண்டி நாடே சிவலோகம்' என்று முன்பு மாணிக்கவாசகர் கூறினார். இவ்வுலகைப் பசுவென்றும், நம் பாரத நாட்டை அதன் மடி என்றும் சொல்வது உண்மையானால் பால் சுரக்கின்ற காம்புதான் தென்பாண்டி நாடென்பது சொல்லாமலே விளங்கும்.
ஒரு சமயம் சிவபெருமானும் ஆயிரக்கணக்கான தேவர்களும் ஒன்றுகூடியபோது வடபுறமுள்ள இமயம் தாழ்ந்தது. அதனை சமன் செய்யுமாறு அகத்திய முனிவர் வந்து அமர்ந்த பொதிகை மலை இமயத்தை உயர்த்திச் சமநிலையாக்கியது. அமிழ்தினும் சிறந்த தமிழ்மொழி பிறந்த அம்மலையிலிருந்து உருவாகி அகில், சந்தனம், குங்குமம் ஆகிய மரங்கள் அடர்ந்த காடுகளைக் கடந்து சங்கினங்கள் ஒலிக்கும் பரந்த வயல்வெளிகளில் தவழ்ந்து மயிலினங்கள் நடமாடும் சோலைகளைக் கடந்து, குளங்கள் பலவற்றை நிரப்பி, தனது இரு கரைப்பகுதிகளையும் திருமகள் உறையும் இடமாகச் செய்த புண்ணிய தாமிரவருணி ஆற்றை எண்ணும்போது கங்கையும் காவிரியும் இதற்கு ஈடாகாது எனத் தோன்றுகிறது. இந்நதி வலம் வர இருந்த நம் பழம்பதி இந்திரனின் அமராவதி எனும் அழகிய நகரைக் காட்டிலும் சிறப்புற்று இருப்பதைக் காணுங்கள். அகழியை அடுத்து மேகங்கள் தவழுமாறு வானளாவ உயர்ந்து நிற்கும் நமது கோட்டைச் சுவரை உராய்ந்ததின் காரணமாகவே சூரியனும் உடல் சிவந்தான் என்பதை,

""இருகரை வாரமுந் திருமகள் உறையுளாப்
பண்ணும் இப்புண்ணிய தாமிரவருணியும்''
(மனோன். 69-70) என்றும்,

""மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனும் உடல் சிவந்தனனே''
(மனோன். 77-78)

என்றும் வரும் அடிகளில் தமது கோட்டையின் சிறப்பைக் குடிலன் காட்சிப்படுத்துகிறான். உண்மையும் கற்பனையும் கலந்து படிப்போரின் விழிகளை விரிவடையச் செய்யும் நாடகக் காப்பியம் மனோன்மணியம்.
1885இல் திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையை உருவாக்கினார் சுந்தரம்பிள்ளை. அதிலும் திருவிதாங்கூர் அரசின் பிரசங்க அமைப்பிலும் தத்துவம், சமயம், மெய்ப்பொருளியல், அறிவியல், கல்வெட்டாராய்ச்சி முதலிய பல துறைகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுந்தரம்பிள்ளையின் "நூற்தொகை விளக்கம்' சொற்பொழிவின் தொகுப்பு நூலாகும்.
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்க்கொடை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் மகத்தானது. 42 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த இவரின் புகழ் தமிழன்னையின் புகழ்போல் எட்டுத்திக்கும் என்றும் பரந்து மணம் வீசட்டும்!


ஏப்ரல் 26, (1897) மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நினைவு நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com