பிறந்த ஆண்டைக் கணக்கிட உதவும் திருக்குறளும் ஏழும்!

திருக்குறள் ஓர் அற்புதமான படைப்பு. குறிப்பாக 7 என்ற எண்ணுக்கும் குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது.
பிறந்த ஆண்டைக் கணக்கிட உதவும் திருக்குறளும் ஏழும்!
Updated on
2 min read

திருக்குறள் ஓர் அற்புதமான படைப்பு. குறிப்பாக 7 என்ற எண்ணுக்கும் குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. உலகிலுள்ள அனைவரின் பிறந்த ஆண்டு எது என்று திருக்குறளில் கணக்கிட்டு அறியக்கூடிய கணக்கீடு மிகச் சிறப்பாக உள்ளடங்கி இருக்கிறது. உலகிலுள்ள எந்த இலக்கியப் படைப்பிலும் இதுபோன்று கணக்குக்கும் மொழிக்கும் இம்மாதிரியான வியத்தகு தொடர்பு இருந்ததில்லை. இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு, திருக்குறளுக்கும் கணிதத்திற்கும் உள்ள வியத்தகு தொடர்பைக் கண்டறிந்திருக்கிறேன்.

கணிதமும் மொழியும் மனிதர்களின் இருகண்கள் என்று 392 ஆவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 7 என்ற எண்ணுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. திருவள்ளுவர் என்ற பெயரில் 7 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள் உள்ளன. 1330 குறள்கள் உள்ளன. அந்த இலக்கங்களின் கூட்டுத் தொகை 7 ஆக இருப்பது ஒரு சிறப்பு. 133 அதிகாரங்கள் உள்ளன. அந்த இலக்கங்களின் கூட்டுத் தொகையும் 7.

திருவள்ளுவர் என்ற சொல்லில் வரக்கூடிய எழுத்துகள் 7. அது 7ஆல் வகுபடும் எண்ணாக இருக்கிறது. ஒவ்வொரு குறளிலும் வரக்கூடிய சீர்களின் எண்ணிக்கை 7. அதுவும் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக இருக்கிறது. திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. இந்த எண் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக உள்ளது. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. இந்த எண்ணும் 7 ஆல் வகுபடக்கூடிய எண்ணாக உள்ளது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு' என்ற குறள் (392) கணிதத்துக்கும் மொழிக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. இது 392 ஆவது குறளாக அமைகிறது. இதுவும் 7 ஆல் வகுபடும் எண்ணாக அமைந்துள்ளது.

7ஆல் வகுபடக் கூடிய எண்களில் உள்ள 190 குறள்கள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நியதிகளை உயர்த்திப் பிடிப்பவைகளாக உள்ளன. இவ்வாறு 7ஆல் வகுப்படக்கூடிய 190 குறள்களின் எண்கள் 7,14,21...1330 ஆகிய அனைத்தையும் கூட்டினால் வரக்கூடிய 127015 என்ற எண்ணும் 7ஆல் வகுபடக்கூடியது என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்று.

உலகத்தாரின் பிறந்த ஆண்டு

எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும் மிகச் சரியாகக் கூறக்கூடிய கணக்கீடும் திருக்குறளில் உள்ளது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். அதுமட்டுமல்ல, இது பல ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாகவும் அமைகிறது.

கணக்கீடு

ஒருவர் பிறந்த ஆண்டை, பள்ளிச் சான்றிதழில் அல்லது ஜாதகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமே என்று சிலர் எண்ணுவர். ஆனால், அதைவிட சுலபமான வழி திருக்குறளில் இருக்கிறது என்பதையும், அந்த வியத்தகு எண்ணையும் ஆராய்ந்து கண்டறிந்துள்ளேன்.

ஒருவர் ஜனவரி முதல் நாளில் எத்தனை வயதைப் பூர்த்தி செய்திருக்கிறாரோ, அந்த எண்ணை குறள்களின் எண்ணிக்கையான 1330லிருந்து கழித்துவிட வேண்டும். அவ்வாறு கிடைக்கும் எண்ணோடு 686 என்ற வியத்தகு எண்ணைக் கூட்ட வேண்டும். கூட்டினால் கிடைக்கும் எண்தான் அவருடைய பிறந்த ஆண்டு என்று அறிந்து கொள்ளலாம்.

குறள்கள் 1330

ஜனவரி 1இல் நிறைவடைந்த வயது - 76
1254
வியத்தகு எண் + 686
பிறந்த ஆண்டு 1940

எடுத்துக்காட்டாக ஒருவருடைய வயது ஜனவரி முதல் தேதியில் 76 பூர்த்தியாகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ணை 1330 லிருந்து கழித்தால் கிடைப்பது 1254 ஆகும். இத்துடன் 686 என்ற எண்ணைக் கூட்டினால் 1940 என்ற எண் கிடைக்கிறது. இதுதான் அவருடைய பிறந்த ஆண்டு ஆகும். இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும் திருக்குறளிலிருந்து கணக்கிட்டு அறிய உலகப் பொதுமறையான திருக்குறள் உதவுகிறது. எனது கணித ஆய்வின் மூலம், இந்த 686 என்ற எண்ணை வியத்தகு எண்ணாகத் தெரிவு செய்தேன்.

ஓர் எண் 2,3, 4, 5, 6, 8, 9,11 என்ற எண்களால் வகுபடுமா என்று கண்டறியும் முறைகள் கணிதப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பது போல் 7 ஆல் வகுபடுமா என்று கண்டறியும் இந்த எளிமையான முறையும் கணிதப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

அண்மையில் ஓர் எண் 7 ஆல் வகுபடுவதைக் கண்டிபிடிப்பதற்கான சோதனையை மாணவர் நலன் கருதி எளிமைப்படுத்தி வெளியிட்டுள்ளேன். அதுபோன்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துதான் இந்த 686 என்ற வியத்தகு எண். இந்த 686 ஆம் எண்ணும் 7ஆல் வகுபடக்
கூடிய எண்ணாக இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

"கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது'

என்பதுதான் 686ஆவது குறள்.

திருக்குறளில் இப்படிப்பட்ட கணக்கீடு உள்ளடங்கி இருப்பதும், கணிதத்திற்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பும் பிணைப்பும் உலகிலுள்ள வேறு எந்த இலக்கியத்திலும் இவ்வளவு சிறப்பாக இதுநாள் வரை இடம் பெறவில்லை என்பதே நான் கண்ட ஆய்வு முடிவு.

- என். உமாதாணு
கணித வல்லுநர், இயக்குநர், கணிதம் இனிக்கும் ஆய்வு மையம், கோவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com