ஒரு பொருளின் ஏற்றமும் வீழ்ச்சியும்

தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் வேளாண் பொருளாதாரமே முதன்மைப் பொருளாதாரமாக விளங்கியது. மருதநில வளம் மிகப்பெரிய வளமாகக் கருதப்பட்டது.
ஒரு பொருளின் ஏற்றமும் வீழ்ச்சியும்

தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் வேளாண் பொருளாதாரமே முதன்மைப் பொருளாதாரமாக விளங்கியது. மருதநில வளம் மிகப்பெரிய வளமாகக் கருதப்பட்டது. சமூக அமைப்பில் தங்கம் உயரிய பொருளாதாரமாகக் கருதப்படுகிறது. தங்கத்தை பின் தள்ளி நெல் முதலிடம் பெற்றிருந்தது. ""நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க'' (ஐங் 1 : 2) என்ற அடிகள் இதனை மெய்பிக்கிறது. இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருந்த நெல்லை முதன்மைப்படுத்தி மன்னர்களும் அவர்களது ஊர்களும் கூட சிறப்பிக்கப்பட்டன.
""நல்லுடை மறுகின் நன்னர் ஊர'' (அகம் 306 :8)
""பழம்பல் நெல்லின் ஊணூர்'' (அகம் 220 :13)
""நெல் அமல்புரவின் இலங்கை கிழவோன்''
(அகம் 356:13)
என்ற அடிகளின் வழி அறிய முடிகின்றது. நெல், வாழ்வில் முதலிடம் பெற்றதால் அது பண்டையத் தமிழரின் வழிபாட்டிலும் முதன்மை பெற்றது.
நெல்லும் மலரும் தூஉய் கைதொமுது
மல்லல் ஆவணம் மாலை அயர
நெடுநல்- 43,44)
""நெல் நீர் எறிந்து விரிச்சி ஒர்க்கும் செம்முது பெண்'' (புறம் 280 6,7) என்ற அடிகளின் வழி நெல் சமூகத்தில் ஏற்றம் பெற்றிருந்த நிலையை அறிய முடிகிறது. சமூக வளர் நிலையில் வேளாண் பொருளாதாரத்தோடு வணிகப் பொருளாதாரம் அதீத வளர்ச்சி கண்ட நிலையில், கடல் பொருளாதாரம் புது வளர்ச்சி கண்டது. இந்நிலையில் உப்பும், மீனும் நெல்லுக்கு இணையானப் பண்டமாற்றாக
இருந்துள்ளது.
நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
வரைய சாந்தமுற் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுடனாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
(புறம் 58 ,9-13)
இவ்வடிகள் வேளாண் பொருளாதார நிலையில் நெல்லும் நீரும் சமூகத்தில் எளிய உணவுப் பொருளாய் மாறியதைக் காட்டுகிறது. சந்தனமும், முத்தும் அரிய பொருளாக இருந்துள்ளன. இப்புதிய வணிகப் பொருளாதாரம் வளர்ந்து, வேளாண் பொருள்கள் வீழ்ச்சியைக் கண்டன. இன்று மட்டுமல்ல அன்றும் ஒரு காலக்கட்டத்தில் ஒரு பொருள் ஏற்றத்தையும் அதே பொருள் மற்றொரு கட்டத்தில் வீழ்ச்சியையும் கண்டது என்பதை இப்பாடலடிகள் தெளிவுப்படுத்துகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com