பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகள்

எட்டுப் புலவர்கள் பாடிய பல அடிகளைக் கொண்ட நீண்ட பாடல்கள் பத்தினை உடைய தொகுப்பே பத்துப்பாட்டு.
பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகள்

எட்டுப் புலவர்கள் பாடிய பல அடிகளைக் கொண்ட நீண்ட பாடல்கள் பத்தினை உடைய தொகுப்பே பத்துப்பாட்டு. இதனை,
"ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து
சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்
ஒருபது பாட்டும்'
என்று நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரம் கூறும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை மட்டும் தனி நூலாக அர. இலக்குமணன் என்பவரால் 1839இல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து யாழ்பாணம் ஆறுமுகநாவலர் 1853இல் வெளியிட்டார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், சீவகசிந்தாமணி (1887) பதிப்பிற்குப் பிறகு சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன் சிறுவயல் ஜமீந்தார் மகாராஜராஜ ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் செய்த பேருதவியால் 1889ஆம் ஆண்டு முதன்முதலில் பதிப்பித்தார்.
உ.வே.சா., பத்துப்பாட்டு ஏடுகளைத் தேடிச்சென்றபோது பட்ட துன்பங்களையும், ஏடுகள் கிடைத்தபோது அவர் பெற்ற மகிழ்ச்சியினையும் "நிலவில் மலர்ந்த முல்லை", "உதிர்ந்த மலர்கள்" ஆகிய கட்டுரைகள் விவரிக்கின்றன. உ.வே.சா., கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்த்த காலத்தில் விடுமுறை நாள்களில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை முதலிய இடங்களுக்குச் சென்று முப்பத்துக்கும் மேற்பட்ட கவிராயர் வீடுகளில் பத்துப்பாட்டு ஓலைச் சுவடிகளைத் தேடியுள்ளார். இதில் ஆழ்வார்திருநகரி தே. லக்ஷ்மண கவிராயர் தன் மாமனார் தேவபிரான் பிள்ளையிடமிருந்து பத்துப்பாட்டு ஏடு வாங்கிக் கொடுத்தபோது, ஆர்வமுடன் பிடுங்கி ஆராய்ந்த செய்தியை நிலவில் மலர்ந்த முல்லையில் பதிவுசெய்துள்ளார் உ.வே.சா.
குறிஞ்சிப் பாட்டின் விடுபட்ட மூன்று மலர்களை எங்கேனும் தேடிப் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவலால் உ.வே.சா., திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய ஸ்ரீஅம்பலவாண தேசிகரிடம் அனுமதி பெற்று, தருமபுர ஆதீனத் தலைவர் ஸ்ரீமாணிக்கவாசக தேசிகரைச் சந்தித்து, பத்துப்பாட்டு ஏடுகளைப் பார்க்க உத்தரவு பெற்று ஏடு தேடியபோது, கிடைக்காமல் இருந்த "தேமா - தேமாம்பூ, மணிச்சிகை - செம்மணிப்பூ, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற் பூ (குறிஞ்சிப்பாட்டு, 64-5 உரை) என்ற சிறு பகுதியை ஏட்டில் கண்டபோது, இழந்த குழந்தையைக் கண்டெடுத்த தாய்க்கு உண்டாகும் மகிழ்ச்சியைப் போல் இருந்தது என்று உ.வே.சா. பதிவு செய்துள்ளார்.
உ.வே.சா.வின் அயராத உழைப்பால் பத்துப்பாட்டு 1889ஆம் ஆண்டில் வெளிவந்தது. இப்பதிப்பிற்குத் தருமபுர ஆதீனம், சென்னை சருவகலாச் சாலை ஆகிய நிறுவனங்களிடமும் திருவாவடுதுறை ஆதீனம் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வேலூர் குமாரசுவாமி ஐயர், ஆறுமுகமங்கலம் குமாரசாமி பிள்ளை, திருநெல்வேலி கவிராஜ நெல்லையப்பபிள்ளை, திருநெல்வேலி திருப்பாற்கடனாத கவிராயர், ஆழ்வார்திருநகரி தேவர்பிரான் கவிராயர், பொள்ளாச்சி சிவன்பிள்ளை, திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை ஆகியோரிடம் பெற்றச் சுவடிகளைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டதை முகவுரையில் பதிவு செய்துள்ளார். முதற்பதிப்பிற்கு 11 சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டாம் பதிப்பிற்கு (1918) களக்காடு சாமிநாததேசிகர் கையெழுத்து மூலப்பிரதியும், சில உரைப்பிரதிகளும் பயன்படுத்தியுள்ளார். மூன்றாம் பதிப்பில் (1931) புதியதாக எந்தச் சுவடிகளையும் பயன்படுத்தியதாகக் குறிக்கப்படவில்லை.
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை சேகரித்து வைத்திருந்த 340 ஓலைச்சுவடிகளையும் 4500 நூல்களையும் அவருடைய கால் வழியினர் 1960ஆம் ஆண்டு கல்கத்தா தேசிய நூலகத்திற்கு வழங்கியுள்ளனர். இவ்வோலைச் சுவடிகளைப் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை, பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் இணைந்து கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச்சுவடிகள் எனும் நூலை 1979இல் வெளியிட்டுள்ளனர். இந்நூலில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு ஆகிய ஓலைச்சுவடிகள் உள்ளன.
தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணி செம்மையாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பணியில் நிறுவனம், பல்கலைக்கழகம், ஆதீனம், நூலகம், தமிழ்ச்சங்கம் முதலியவை ஈடுபட்டுள்ளன. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகளில் எண்ணிக்கையாவது திருமுருகாற்றுப்படை- 51 பொருநராற்றுப்படை - 2 சிறுபாணாற்றுப்படை - 5 பெரும்பாணாற்றுப்படை -4, முல்லைப்பாட்டு - 3 மதுரைக்காஞ்சி -4, நெடுநல்வாடை -3, குறிஞ்சிப்பாட்டு -3 பட்டினப்பாலை -2 மலைபடுகடாம்-2 என மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன. பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகள் முழுவதும் உள்ள நிறுவனம் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையமாகும். இச்சுவடிகளின் இறுதி ஏட்டில் ""இஃது மயிலை அண்ணாசாமி உபாத்தி எழுதியது; முரப்பநாடு வயிரவநாதபிள்ளை... நல்லகுற்றாலம் கவிராயர் ஏடு இருந்த ஏடு வாங்கினது கீலக வருஷம் (கி.பி.1788) ஐப்பசி மீ 9 தேதி வியாழக்கிழமை உத்திராட நட்சத்திரமுங் கூடிய சுபதினத்தில் எழுதி நிறைந்தது'' போன்ற குறிப்புகள்
காணப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com