
'பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே' எனக் குமரகுருபரராலும், திராவிட ஆச்சாரியார், பக்திகாரர், வீர வைணவர் என பக்தர்களாலும் அழைக்கப்பட்டவர் திருமழிசையாழ்வார். ""நற்றமிழை வித்தி, என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழியாகக் கலந்து'' என பெருமான் விதையாக நல்ல தமிழை எனக்குள் விதைத்தான், தான் கற்ற தமிழ் மொழியாகிக் கலந்தான் எனக்கூறி தமிழால் வைணவ முழக்கம் செய்தவர். தமிழ்ச் சொல் விளையாட்டிலும் முத்திரை பதித்தவர்.
இவர் படைத்த நூலை "நான்காம் திருவந்தாதி' என்று அழைப்பதா? நான்முகன் திருவந்தாதி என்று அழைப்பதா? என்ற சர்ச்சை இன்றும் தமிழறிஞர்களிடையே நிலவி வருகிறது. மக்கள் மனத்தில் பெருமாளின் பெருமைகளைப் பதிய வைக்க இலக்கிய உத்திகள் சிலவற்றை இவர் கையாண்டுள்ளார். அவற்றுள் ஒன்றுதான் இவர் ஆடிய சொல் விளையாட்டு.
"புள்' என்ற சொல்லை வைத்து 770ஆவது பாசுரத்திலும், "ஆனை' என்ற சொல்லை வைத்து 791ஆவது பாசுரத்திலும் சொல் விளையாட்டை நயம்படப் பயன்படுத்தி விளையாடியுள்ளார்.
""புள்ளதுவாகி வேதம் நான்கும் ஓதினாய், அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட்கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி; ஆதலால் என்கொல் மின்கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப்பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே''
"புள்' எனும் சொல் பல்வேறு பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம். புள் (அன்னப்பறவை) வடிவில் வந்து நான்கு மறைகளையும் தந்தவன்; புள்(புறவை) வடிவில் வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்தவன்; புள்ளைக்(கருடனை) கொடியாய்ப் பிடித்திருப்பவன்; புள்ளை (கருடனை) வாகனமாகக் கொண்டவன்; புள்ளின் (பறவையினத்தின்) மெய்யான பகைவனான ஆதிசேஷன் என்னும் பாம்பணை மேல் கண் துயில்பவன். அடுத்து,
""ஆனைகாத்து ஓர்ஆனை கொன்று அதன்றி ஆயர்பிள்ளையாய்
ஆனைமேய்த்தி, ஆநெய்உண்டி, அன்றுகுன்றம் ஒன்றினால்
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனையன்று சென்றடர்த்த மாயம் என்ன மாயமோ?''
எனும் பாசுரத்தில் "ஆனை' என்னும் சொல்லை வைத்து சொல் விளையாட்டு விளையாடியுள்ளார். உயிரைக் காக்க கதறி அழுது கூப்பிட்ட ஆனையைக் (கஜேந்திரன் என்ற யானை) காத்து அருளியவன்; உன்னை அழிக்க வந்த யானையை (குவலாயாபீடம் யானை) அழித்தவன்; ஆயர் குலத்தில் வளர்ந்து ஆனை (பசுக்களை) மேய்த்தவன்; ஆநெய்(வெண்ணெய்) உண்டவன்; இந்திரன் கல்மழை பொழிந்தபொழுது கோவர்த்தன கிரி மலையை உயர்த்திப் பிடித்து ஆனைக் (பசுக்களை) காத்தவன்; மை தீட்டப்பெற்ற செவ்வரி படர்ந்த கண்களையுடைய நப்பின்னைக்காக முன்பு ஒருநாள் ஆனை(யானை போன்ற ஏழு எருதுகளை) மாய்த்தவன் என மாயன் பெருமைகளைக் கூறியுள்ளார். இவ்வாறு பாடுவதைத் தமிழ் அணியிலக்கணம் சொல் பின்வருநிலையணி என்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.