
அளவு-3 முகத்தல் அளவு
எண்ணல் அளவு, எடுத்தல் அளவு போலவே முகத்தல் அளவுக் கருவியும் உடலேயாகும். உடற் கருவியின் பின்னே பிறந்தனவே பிற கருவிகள். உடல் முகத்தல் கருவியா? ஆம்! முகம் என்னும் பெயரே, முகத்தல் கருவி மூலம் என்பதை விளக்கி விடுமே!
வெப்பத்தால் ஆவியாகும் நீரை முகப்பது தானே முகில்! மிக முகந்து நிறம் மாறிக் கருமை யுற்றது தானே கருமுகில், காளமேகம்! அதுபோல் முகக்கும் கருவியே முகமாம். காட்சியை உள்வாங்கி முகப்பது கண்கள். ஓசை ஒலிகளை உள்வாங்கி முகப்பது செவிகள். நல் மணமும் அல் மணமும் முகப்பது மூக்கு. அறுசுவையானாலும், அறுபதாகப் பெருகினாலும், அற்றுப்போனாலும் சுவையை முகப்பது நாவு; வெப்பு தட்பு நளிர் நடுக்கு என்பவற்றை உள்வாங்கி முகப்பது மெய்யாம் தோல்! காட்சிப் பொருள் கருத்துப் பொருள் ஆகியவற்றை யெல்லாம் உள்வாங்கும் அக உறுப்பாம் மனமும் அகமுகப்புக் கருவியே! இவையெல்லாம் முகக்கும் உடல் உறுப்புகளும் அகக் கருவியும் தாமே!
அகத்தை முகந்து தருவதால்தானே "முகம்' எனப்பட்டது. முகத்தில் முதுக்கு (மூதறிவு) உறைந்தது எதுவும் உண்டோ? இளமையிலேயே மூதறிவு பெறுவது "முதுக்கு உறைவு' எனப் பண்டே பாராட்டுப் பெற்றதே! முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது என்ன? என் முகத்தை என் கண்ணால் காண இயலாது; கண்ணாடியும் இல்லை! என் முகத்தை எப்படிப் பார்ப்பது? என் முன் இருப்பவர் முகத்தைப் பார்த்தால் என் முகம் இருக்கும் இருப்புப் புலப்பட்டுவிடும் என்பதுதானே அது!
""பண் பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்'' என நல்லந்துவனார் உரைத்தாரே (நெய்தல் கலி)! அப் பாடு என்பது என்ன?
முன்னே இருப்பவர் "மெய்ப்பாடே', பாடு என்பதாம். அவலக் காட்சியரா, நகைமுகக் காட்சியரா முன்னிற்பவர், அவர் முக நிலையே, என் முக நிலை என்பதாம்! அழுவார் முன் சிரிப்பது பண்பாடா? சிரிப்பார் முன் அழுவது பண்பாடா? இழவு வீட்டிலே நகைப்பு எழுமா, எழலாமா? மண மங்கல வீட்டிலே அவல அழுகை தேங்கி நிற்கலாகுமா? தம் நிலையில் இருப்பவர் இந்நிலையில் இருந்து தடம்மாறிக் காட்சியளிப்பரா?
கிணற்றில் நீர் முகந்து இறைப்பார் பாட்டு முகவைப் பாட்டு! படகும் கப்பலும் வந்து இறக்கியும் ஏற்றியும் செல்லும் துறைமுகம் அமைந்தது "முகவை' (இராமநாதபுரம்). கலம், பறை, மரக்கால், நாழி, உளக்கு, ஆழாக்கு, படி, உரி முதலியவை பழைய முகத்தல் அளவைக் கருவிகள். அறிவாம் அகக்கருவியால் கண்டுபிடிக்கப்பட்ட, புறக்கருவிகள்!
முக வழியாக அக வெளிப்பாடு தோன்றிப் பிறரைப் பிரியா நிலையராகச் செய்யும் செழும் சிறப்பே "முகமன்' ஆகும். ஒருவன் இருக்கை (இருப்பிடம், இயல்பு, செயல் திறன், பண்பியல்) முகவரியாகத் திகழும்! பொருள் உருவாக்கத்தைப் பெற்று வழங்கும் பொறுப்பாளரும், அவர் பொறுப்பாற்றும் இடமும் முகவர், முகவகம் என்னும் கலைச் சொற்களைப் பெறும்.
""முகம் நோக்கி நிற்க அமையும் உலகம்'' என்பது வள்ளுவம்! முகம் தாமரைப்பூ என்றால், அதனுள் கண் குவளை; காது வள்ளை; இதழ் முள் முருக்கு; பல் முல்லை; மூக்கு எள் பூ! முகத்து மலரை எண்ணினால், வாடுவது ஏன்? வாடச் செய்வதும் ஏன்?
- தொடர்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.