
1897இல் சிகாகோவில் வீரமுரசாக ஒலித்து வெற்றிகண்ட சுவாமி விவேகானந்தரிடம், சென்னையில் திருமடம் ஒன்றைத் தோற்றுவிக்க அன்பர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். அவ்வேண்டுகோளை ஏற்று சுவாமி விவேகானந்தரால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்.
இவர், சென்னையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவி, பல வரலாற்றுச் சாதனையாளராய் புகழ் பூத்தார். அவருடைய வினைத்திட்பமும், மனத்திட்பமும், கூடாரையும் வென்றடுத்து தம் வயமாக்கும் சால்புடைமையும் எண்ணற்றவர்களை ஆட்கொண்டன. அவ்வாறு ஆட்கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்க ஆறு சான்றோர்களுடன் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பேணிய தொடர்பு இங்கு விதந்தோதப்படுகிறது. அவர்கள் மகேச குமார் சர்மா, வ.உ.சி., வேங்கடசாமி நாயுடு, டாக்டர் நஞ்சுண்டராவ்,
கோ. வடிவேலு செட்டியார், வி.கிருஷ்ணசுவாமி ஐயர் ஆகியோராவர்.
மகேச குமார் சர்மா:
தமிழறிஞரும், வங்கமொழி மறுமலர்ச்சிக்குப் புதினங்களைத் தமிழாக்கம் செய்த முன்னோடியுமானவர் மகேச குமார் சர்மா. இவருடயை இயற்பெயர் குப்புசாமி ஐயர். பன்மொழிப் புலவர். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச விஜயம் (1904) , ஸ்ரீ விவேகானந்த விஜயம்(1907) எனும் நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர். பக்கிம் சந்திரரின் "ஆனந்த மடம்' புதினத்தை 1908இல் முதலில் தமிழாக்கம் செய்தவர். வங்கமொழியில் வெளிவந்த சுவாமி விவேகானந்தரின் "வர்த்தமான பாலனம்' எனும் நூலை வங்க மொழியில் இருந்து தமிழாக்கம் செய்தவர். 1921-இல் வெளிவந்த இந்நூலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு என்னவென்றால், சுவாமிஜியின் நூலுக்கு வங்க மொழியில் சுவாமி சாரதானந்தர் எழுதிய முன்னுரையை அவருடைய அனுமதி பெற்றுத் தமிழாக்கம் செய்து வெளியிட்டதுதான்.
இந்த அரிய முன்னுரை பிற்காலத்தில் தமிழ்ப் பதிப்புகளில் இல்லை. இவர் சென்னை ராமகிருஷ்ண
மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச விஜயம் எனும் நூலில், ""சென்னையிலுள்ள ஸ்ரீஇராமகிருஷ்ணானந்த ஸ்வாமிகளின் மாணாக்கராகிய மஹேசகுமார் சர்மா'' என்று பெருமிதத்துடன் தம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்த மகராஜ் அருளிய ஆங்கில முன்னுரையையும், அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.
வ.உ. சிதம்பரனார்:
வேதாந்த, சித்தாந்தப் பயிற்சி பெற்ற வ.உ.சி., சுவாமி ராமகிருஷ்ணானந்தரை 1906இல் திருவல்லிக்கேணியில், அன்று கேகில் கெர்னல் (இன்று விவேகானந்தர் இல்லம்) மாளிகையில் சந்தித்து உரையாடியதை கவிதை நடையில் அமைந்த சுயசரிதையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
""என் பெரிய அத்தையோ டேகினேன் சென்னை
இராம கிருட்டிணானந்தரைக் கண்டேன்
தராதலம் பரவிச் சாரும் சுதேசியக்
கைத்தொழில் வளர்க்கவும், கைத்தொழில் கொள்ளவும்
எத்தகைய முயற்சி இயற்றினை என்றான்''
வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் "சுதேசிய அரசியலைப் பற்றிக் கேட்டதும் அதற்கு வ.உ.சி விடை கூறுயதும் சற்று வித்தியாசமானது; விரிவானது. "சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் சுதேசிய உபதேசம் வ.உ.சி.யின் உள்ளத்திற்குள் வித்தென விழுந்த'தாக வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். அந்த வித்தே செடியாக வளர்ந்து, கப்பலோட்டிய தமிழனாக, அரசியல் தேசியத்தையும், பொருளாதார தேசியத்தையும் வளர்த்த மாபெரும் தலைவனாக சிதம்பரச் செம்மலை உயர்ந்தியது.
கே. வேங்கடசாமி நாயுடு:
வாணியம்பாடி வேதாந்தி வேங்கடசாமி எனப் புகழ் கொண்ட கே.வேங்கடசாமி நாயுடு, சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தலைமைச் சீடர்களுள் ஒருவராவார். சுவாமி ராமாகிருஷ்ணானந்தர், விவேகானந்தர் சங்கங்களை ஆங்காக்கே அமைப்பதில் பெருமுயற்சி எடுத்தார். புதூர் வாணியம்பாடியில் விவேகானந்தர் சங்கம் அமைய வேங்கடசாமி பாடுபட்டார். இவருடைய இராமகிருஷ்ணான இயக்க நற்பணி மையம் பற்றி சுவாமி விவேகானந்தர் 23.1.1900இல் ஒரு பதில் கடிதம் எழுதி விளக்கியுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் கடிதத் தொடர்பு கொண்டதோடல்லாமல் வேங்கடசாமியின் அழைப்புகளை ஏற்று வாணியம்பாடிக்குச் சிலமுறை வருகை புரிந்திருக்கிறார்.
"பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவர் சரித்திரச் சுருக்கமும் அவர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளும்' எனும் நூல் 1904இல் 113 பக்கங்களுடன் வெளிவர அயராது உழைத்தவர் வேங்கடசாமி நாயுடு.
டாக்டர் எம்.சி. நஞ்சுண்ட ராவ்:
எம்.சி. நஞ்சுண்ட ராவ் புகழ்பூத்த மருத்துவராக, உத்தம தேசபக்தராக, ஆன்மிகச் செல்வராக, கொடைவள்ளலாக அனைத்திற்கும் மேலாக சுவாமி விவேகாந்தரின் உளங்கவர்ந்த முதன்மைச் சீடர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். சுவாமி இவருக்கு எழுதிய கடிதங்கள் பல. 1897இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தருக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் டாக்டர் நஞ்சுண்டராவுக்கு தம் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறும், அவருக்கு இயன்றளவு உதவுமாறும் குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணானந்தரிடம் தாம் கொண்டிருந்த பெருமதிப்பின் குறியீடாக தமது இல்லத்திற்கு "சசி விலாஸ்' என்று பெயர் வைத்தார் நஞ்சுண்டராவ். சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் சசி பூஷண் என்பதாகும்.
கோ. வடிவேலு செட்டியார்:
சுவாமி விவேகானந்தர் 1897இல் விஜயம் செய்த சென்னை இந்து தியலாஜிகள் உயர்நிலைப்பள்ளியில், முப்பத்து மூன்று ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
சேஷாத்ரி சிவன் எனும் அத்வைத ஆசிரியர் எழுதிய "நாநாஜீவவாதக் கட்டளை' எனும் நூலை விசேஷ விரிவுரை எழுதிப் பதிப்பித்தார். இது மிகச்சிறிய வெளியீடு. இதற்கு, சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். மேலும், ஆசிரியர் வடிவேலு செட்டியாரைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்.
""இந்து தியலாஜிகள் பள்ளி பண்டிதர் வடிவேலு செட்டியார் இந்நூலிற்கு திறமையாகக் குறிப்புரை எழுதியுள்ளார். வேதாந்தத் தத்துவத்தை அதன் மூலமொழியில் படித்திட முடியாதவர்களுக்கு இந்நூல் பயன்தரும். நூல் சிறியதாயினும் முழுமை நிறைந்துள்ளது. திரு. செட்டியாரின் உரை மிகவும் தெளிவாக உள்ளது. அவரின் உழைப்பிற்கு வாசகர்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். இது என்னுடைய நேர்மையான கருத்தாகும்''
வி. கிருஷ்ணசுவாமி ஐயர்:
சென்னை, இராமகிருஷ்ண மடம் தோன்ற உதவியவர்களுள் ஒருவர் அக்காலப் பிரபல வழக்குரைஞரும், மிதவாத தேசிய காங்கிரஸ் தலைவருமான வி. கிருஷ்ணசுவாமி ஐயர். 1905 பிப்ரவரி 11இல் கல்கத்தாவில் பல்கலைக்கழக மாணவர்களிடைய பேசியபொழுது அக்கால வைஸ்ராய் கர்ஸன் பிரபு, புராணங்களில் சூதும் தந்திரமும் நிறைந்துள்ளன என்று இழித்துரைத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வி.கிருஷ்ணசுவாமி ஐயர், இராமாயணம், மகாபாரதம், பாகவதம், தேவிபாகவதம், விஷ்ணுபுராணம், மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றிலிருந்து அரிய செய்திகளைத் திரட்டி "ஆர்ய சரித்திரம்' என வடமொழி நூலை வெளியிட்டார். இந்நூலைப் படித்த சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பின்வருமாறு பாராட்டி, 27.1.1908இல் கிருஷ்ணசுவாமி
ஐயருக்கு, ஒரு கடிதம் எழுதினார்:
""நம் தேசத்து உயர்குணங்கள் கொண்ட ஆண் பெண்களின் வாழ்க்கைச் சிறப்பை வெளியிடுவதனால் ஒவ்வோர் இந்தியனுடைய நன்றியும் உங்களைச் சாரும் என்று நான் நினைக்கிறேன். உண்மைத் தேசபக்தி பெற்ற ஒவ்வொருவரும் இந்நாட்டில் தாமாகவே உங்களைப் புகழ்வார் என்பதிலும் ஐயமில்லை. பொறுக்கி இருக்கும் விஷயங்கள் பொருத்தமாயும், வாசித்த அளவில் நன்மையும் நற்கதியும் பெறச் செய்வனவாயும் இருக்கின்றன. முக்கியமாக வால்மீகி ராமாயணத்தைக் கவியின் வார்த்தையிலேயே எடுத்துக் கொடுத்து, சொல்லும் விதத்திலும் ஆரம்பிக்கும் முறையிலும் வேறு பாஷையைக் கலக்காமல் இவ்வளவு சுருக்கமாகத் தந்தது மிகவும் போற்றப்பட வேண்டிய விஷயம். ஆதி காவியம் கெடாமல் இருப்பதும் அதன் விசேஷ அம்சங்கள்''
இவ்வளவாக சுவாமி ராமகிருஷ்ணானந்தருடைய முன்னுரைகள், கடிதங்கள் அனைத்தையும் தொகுத்துக் கற்றால், அவருடைய ஆன்மிக ஆளுமைக்கு அப்பாற்பட்ட ஆளுமையையும் தேர்ந்து தெளியலாம்.
21.7. 2017 சுவாமி ராமகிருஷ்ணானந்தரின்
155ஆவது ஜயந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.