புகழேந்தியின் "துரோபதை குறம்!'

சிற்றிலக்கியங்களில் பள்ளு, குறம் என்பன பள்ளர்கள், குறவர்கள் என்னும் இனத்தவர்களின் பெயரால் அமைந்தவை; இனம், சாதி, குலம், கோத்திரம் எனப் பள்ளர்களையோ குறவர்களையோ குறிப்பன ஆயினும்
புகழேந்தியின் "துரோபதை குறம்!'
Published on
Updated on
2 min read

சிற்றிலக்கியங்களில் பள்ளு, குறம் என்பன பள்ளர்கள், குறவர்கள் என்னும் இனத்தவர்களின் பெயரால் அமைந்தவை; இனம், சாதி, குலம், கோத்திரம் எனப் பள்ளர்களையோ குறவர்களையோ குறிப்பன ஆயினும், குழுவினரைக் குறிக்கிறது என்பதே பொருந்தும். பள்ளு இலக்கியங்கள் பள்ளன், பள்ளி, ஆண்டை என ஆண், பெண் கதைத் தலைவர்களைச் சுற்றி அமைந்தாலும் உழவின் பெருமையை அடிப்படையில் விளக்குவனவாய் உள்ளன. அதே போல் குறம் அல்லது குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகை, குறத்தி ஒருத்தியின் சிறப்பு, அழகு, பேச்சாற்றல், வாழ்க்கை ஆகியவற்றைக் காட்சி போல் படம் பிடிப்பது என்றில்லாமல், குறவர் இனமக்களின் நாடும் வளமும் பண்பும் விளக்குவனவாகத் தடம்பதிக்கின்றன.
குறத்தி ஒருத்தி குறி சொல்கிறாள் என்ற அமைப்பில் உள்ள சிற்றிலக்கியம், யாரோ ஒரு பாட்டுடைத் தலைவனையும் பிறிதும் ஒரு நூலுடைத் தலைவனையும் பாடினாலும் குறத்தியை முன்னிறுத்துகின்றன என்பது கருதத்தக்கது. அதிலும், குறத்தியின் இனத்தை அதாவது குறவர்களின் தனி வாழ்வை மட்டும் குறிக்காமல் பொது வாழ்வைப் பாடுகின்றன; சிறப்பாக, குறவர்களின் நாட்டு வளம் கூறுகின்றன.
புகழேந்திப் புலவர் இயற்றிய "துரோபதை குறம்' என 1937இல் (பெரிய எழுத்து) அச்சில் (அமரம்பேடு, இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை வெளியீடாக) வெளிவந்த நூல், 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்நூலினை முன்மாதிரியாகக் கொண்டு குறம் என்னும் குறவஞ்சி இலக்கிய வகையை நாம் எடை போடலாம்.
நூலின் நாயகியாகிய திரெüபதி பற்றியோ, பாரதக்கதை பற்றியோ காண்பதற்கல்லாமல், கதை கூறும் வாயிலாக அமைந்த குறத்தி வழி குறவர் இனமும் நாட்டு வளமும் இதில் காணப்பெறுகின்றன.
குறவர் இனம் அல்லது மலைவாழ்நர் வாழ்வியலை குறிஞ்சித் திணைப் பாடல்களிலும், குறிஞ்சிப் பாட்டிலும், சிலப்பதிகாரத்திலும், பின்வந்த காப்பியங்களிலும் கண்டுள்ளோம். ஆனால், நாடோடி வாழ்க்கை கொண்ட "குறவர்' எனும் சாதி மக்கள் அல்லது குறிசொல்லும் மக்கள் வாழ்வியலைச் சேர்ந்த ஒருத்தியின் கூற்றாக வருகிறது. ஆயினும், இம்மக்கள் இனத்தவரின் வாழ்வியலை முன் மாதிரியாகவே அல்லது அம்மக்களின் செயற்பாடுகள், தொழில் முறைகள், பழக்க வழக்
கங்களைக் காட்டுவதாகவே பாடப்பட்டுள்ளது.
குறவஞ்சி என்னும் சிற்றிலயக்கிய வகைக்குரிய அடிப்படை இலக்கணத்தில் மாறுபட்டு, கதைத் தலைவியாகிய துரோபதை குறத்தியாக உருக்கொள்வதாகக் கற்பனையாக்கம் செய்யப் பெற்றுள்ளது. இஃது இந்நூலின் புதுமை எனலாம். இவற்றின் மேலாய், குறவர் இனமக்களின் வாழ்க்கை முறைகளும், நாகரிகமும், அவர்கள் நாட்டு வளமும், ஊர்வளமும் பொதுவாகக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம்.
மாயவரை (திருமாலை) வணங்கி குறத்தி, குறக்கூடை எடுத்துக் கொண்டாள். காப்பியத்திற்கு அல்லது புராணத்திற்கு உரிய அதீத கற்பனை அடிப்படையில், மாயவரை வேண்டியதும் குறக்கூடை விண்ணிலிருந்து அவள் கைக்கு வந்தது; குழந்தை வேண்டியதும் வந்தது என்று கூறப்பட்டுள்ளது. குறத்தி கக்கத்தில் கூடையும், முதுகுப் புறத்தில் குழந்தையும், வலக்கையில் கோலும் உள்ளன. அக்கூடையில் அவள் கூவி விற்கும் பொருள்கள் என்னென்ன இருக்கின்றன பாருங்கள்:

"மருந்து வகைகளிலே மலைவேப்பங் கொட்டை வைத்தாள்;
புலியினது நகமும் புகழான வேர்வகையும்
நரிப்பல் நரிமுகமும் நல்ல மருந்துகளும்
ஆண்வசியம் பெண்வசியம் ஆன மருந்துகளும்
முதுமையுள்ள ஆண்பெண்ணும் இளமைவர மருந்துகளும்'

சன்னி, பித்தம், வயிற்றுவலி, கால் கைவலி ஆகியவற்றைப் போக்கும் மருந்துகளும், கிலுகிலுப்பை, கொடிக்கயிறு, தாம்புக்கயிறு, உரி, பிரிமணை, சும்மாடு, பிரப்பங்கோல், எண்ணெய்க் குடுவைகள் முதலிய விற்பனைப் பொருள்களைக் கூடையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்தாள்.
மன்னர்கள் உள்ளிட்ட ஆடவர்கள் அனைவரும் இவள் பின்னே தொடர்ந்து மயங்கிவர, ""ஏச்சான சாதியல்லோ எங்கள் குறச்சாதி'' என்று பேசுகிறாள் குறத்தி. மேலும் தன் நாட்டைச் சொல்லுகையில், தென்னாடு, மலைநாடு, கைலயங்கிரி மலைநாடு, மூவர்தமிழ்பாடு மலைநாடு, பச்சைமலை, பவளமலை எங்களது நாடு'' என்கிறாள்.
குறி சொல்லல்: பிள்ளையார் பிடித்து வைத்து, பச்சரிசி தேங்காய், பயறுவகை படைத்து, தூபதீபங் காட்டி, குறக்கூடை நிறையச் செந்நெல் வாங்கி, முறக்கூடையில் கொட்டியதை மூன்றாகப் பகுத்துக் குறிசொல்லத் தொடங்குகிறாள். பாரதப் போர் நடந்து துரியோதனாதியர்கள் அழியப் போவதைச் சொல்கிறாள். அரண்மனைப் பெண்டிர் அதுகேட்டு அழுது அரற்றுகின்றனர். அப்போது குறவன் வடிவெடுத்து வந்த அர்ச்சுனன், குறத்தியைக் காணவில்லை எனப் புலம்புகிறான்.
துரியோதனன் வருகிறான். குறத்தி சொன்னதைக் கேட்டு, குறவனையும் குறத்தியையும் சிறையில் அடைக்கச் சொல்கிறான். குறவர்கள் திரண்டெழுந்தால் நாம் வீழ்வோம் என்று சொல்லி அமைச்சர்கள் தடுக்கின்றனர். ஆகவே, விடுதலை பெற்றுக் குறவனும் குறத்தியும் மீள்கின்றனர்.
குறவர் வாழ்வியல்: குறவன் கூற்றாக,

" ஏச்சான சாதியல்லோ எங்கள் குலச்சாதி
ஏழான சாதியற்குள் கீழ்சாதி நாங்கள்'

என்கிறான். எனவே, சாதிக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதி என குறச்சாதி விளங்கியமை அறியலாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய இலக்கிய நாடக வகையாகப் பள்ளு, குறவஞ்சி விளங்கின. குறத்தி ஒருத்தியின் வாழ்வியல் அல்ல; குற இனமக்களின் வாழ்வியல் தடங்கள் இக்குறவஞ்சியில் பதிந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com