கந்தன் மீது கத்தரிக்காய் பாடல்!

சென்னி குளத்தைச் சார்ந்த சுந்தர அடிகளார், சென்னிக்குளம் அண்ணாமலையை சுந்தரராசத் தேவரிடம் ஒப்புவித்து, அங்குள்ள தமிழ்ப் புலவர்களிடம் இலக்கணப் பயிற்சி பெறச்செய்ய பெரிதும் விழைந்தார்.
கந்தன் மீது கத்தரிக்காய் பாடல்!
Updated on
2 min read

சென்னி குளத்தைச் சார்ந்த சுந்தர அடிகளார், சென்னிக்குளம் அண்ணாமலையை சுந்தரராசத் தேவரிடம் ஒப்புவித்து, அங்குள்ள தமிழ்ப் புலவர்களிடம் இலக்கணப் பயிற்சி பெறச்செய்ய பெரிதும் விழைந்தார். தம் எண்ணத்தை அண்ணாமலையிடம் எடுத்துக்கூறினார். அவனும் உடன்பட்டான்.
அவ்விருவரும் சேத்தூர் அரண்மனையை அடைந்து ஜமீன்தார் சுந்தரராசத் தேவரை வணங்கினர். ஜமீன்தார் அடிகளாரிடம் "வந்த காரணம் யாது?' எனக் கேட்டார். அடிகளாரும் அருகில் பயபக்தியுடன் நின்ற சிறுவனைச் சுட்டிக் காட்டி, ""மன்னர் பிரானே! இவன் சென்னிகுளத்தைச் சேர்ந்தவன். பெயர் அண்ணாமலை. இவனது குடும்பம் ஏழ்மையில் இருக்கிறது என்பதால், இவனை என் மடத்திலே தங்கவைத்து இதுகாறும் யானே உணவும் உடையும் அளித்து நூல்கள் பல கற்பித்தேன். அவற்றினை நன்கு கற்றுத் தேர்ந்தான். இவனுக்கு இலக்கணப் பயிற்சி மேலும் தேவைப்படுகிறது. அதன் காரணமாக இவனைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். இவனுக்குப் புகலிடம் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்'' என்றார்.
உடனே ஜமீன்தார் அச்சிறுவனை உற்று நோக்கினார். அவன் முகத்தில் ஒளிர்ந்த ஞான ஒளி அவரை மெய்சிலிர்க்க வைத்தது. இருப்பினும் இவ்விளம் வயதிலேயே இவன்
எங்ஙனம் கவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றிருப்பான் என எண்ணினார்.
அச்சமயம் ஜமீன்தாரின் அருமை, பெருமைகளைப் பாராட்டிப் பாடுமாறு அண்ணாமலையைச் சுந்தர அடிகளார் பணித்தார். அக்கணமே அண்ணாமலையும் அனைவரும் வியக்குமாறு மிகச்சிறந்த பாடல் ஒன்றைப் பாடினான். அப்பாடல் பொருட்சுவை, சொற்சுவை, கருத்தாழம்
மிக்கவையாக அமைந்ததைக் கண்டு ஜமீன்தார் வியப்பில் ஆழ்ந்தார்.
பின்னர் அண்ணாமலை, பாடலின் ஒவ்வொரு அடியினையும் பதம் பிரித்துப் பொருள் சொல்லிக்கொண்டு வந்தான். அப்பாடலின் இறுதி அடியான "சுந்தரராசப் பூமானே' என்று கூறுவதற்குப் பதிலாக வாய்தவறி "வெங்கடேச எட்டப்ப பூமானே' என்று பாடிவிட்டான்.
அவன் இறுதியாகக் கூறிய பாடல் அடியினைக் கேட்ட ஜமீன்தார் துணுக்குற்றார். அவரின் மலர்ந்த முகத்தில் சோகம் இழையோடியது. சுந்தர அடிகளாரும் செய்வதறியாது திகைத்தார். உடனே ஜமீன்தார் ""இக்கவியோ இவன் புனைந்தது அல்ல. எங்ஙனம் இவனால் இவ்வாறு பாட இயலும்? எட்டையபுரம் அரசவைப் புலவர்கள் கடிகை முத்துப்புலவர், நாகூர் முத்துப்புலவர் ஆகியோர் ஜமீன்தார் வெங்கடேச எட்டப்ப பூபதி மீது யமகம், திரிபு அமைத்துப் பாடியுள்ளதை நானும் படித்துள்ளேன். இப்பாடலும் கடிகை முத்துப் புலவர் பாடலினை ஒத்து நயமாகச் சிறப்புடன் அமைந்துள்ளது. எனவே, இவனும் அப்புலவரின் பாடலினை மனப்பாடஞ் செய்து பாட்டுடைத் தலைவன் பெயரினை மட்டும் மாற்றிப் பாடிக் காட்டியுள்ளான். இது பெரும் தவறல்லவா?'' எனச் சாடினார்.
அண்ணாமலையின் ஆற்றலை நன்கு அறிந்திருந்த சுந்தர அடிகளார், இதைக் கேட்டதும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளானார். எப்படியாவது அண்ணாமலையின் உண்மையான கவித்துவத்தை ஜமீன்தாருக்கு உணர்த்த நினைத்தார். உடனே, ஜமீன்தாரிடம், ""பெரும் தமிழறிஞரான தாங்களே இவனது கவிபாடும் புலமையினை மீண்டும் ஒருமுறை சோதித்து அறியலாமே'' என்றார்.
உடனே, ஜமீன்தாரும் அச்சிறுவனை நோக்கி, ""காரிகை எனும் சொல் பாடலில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்கள் வருமாறு அமைதல் வேண்டும். அது சிற்றின்பப் பொருளினை உணர்த்துவதாக இருக்க வேண்டும். அப்பாடலினைக் கட்டளைக் கலிப்பாவில் பாடுக'' எனப் பணித்தார்.
அண்ணாமலையும்,

""மாகக் காரிகை கும்மக வானுடன்
÷மருவும் காரிகை போல் எழில் வாய்த்தவள்
மோகக் காரிகைம் மிஞ்சு மயல் கொண்டாள்
÷மொழியும் காரிகை மெத்தையின் சேர்குவாய்
பாகைக் காரிகை யாற்செய்து காரிகை
÷பார்த்துப் பாடிய பாவாணர் தம்மிடி
போகக் காரிகை என்னத் தனம் தரும்
÷போசனே சுந்தரராசப் பூமானே''

எனப் பாடினான். இப்பாடலைக் கேட்ட ஜமீன்தார் பெரிதும் மகிழ்ந்தார். இளங்கவி அண்ணாமலையின் கவித்துவத்தைப் பாராட்டினார். தம் அரசவையில் அண்ணாமலையை ஒரு சிறப்பு மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். இதனைக் கண்ட
சுந்தர அடிகளாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
அப்பொழுது சேத்தூர் அரண்மனைக்கு அண்மையில் உள்ள வீதியில் பெண்ணொருத்தி "கத்தரிக்காய் கத்தரிக்காய்' எனக் கூவி வணிகம் செய்து கொண்டிருந்தாள். அப்பெண்ணின் கூற்று தற்செயலாய் ஜமீன்தாரின் காதில் விழுந்தது. சிறுவன் அண்ணாமலையின் கவித்திறமையை மேலும் சோதிக்க விரும்பினார். உடனே, ""கழுகுமலைக் கந்தப் பெருமான் மீது கத்தரிக்காய் எனத் தொடங்கும் யமகக்கவி ஒன்றைப் பாடு'' என்றார். அடுத்த நொடியே,

""கத்தரிக் காய மலைக்காற்குத் தப்பினும் கந்துகச்சு
கத்தரிக் காய வில்வாளி க்கென் செய்வள் கழுகுமலைக்
கத்தரிக் காய முயமாலை வாங்கிக் கழுத்தணியா
கத்தரிக்காயலையே வணங்காருயிர் காண்பரிதே''

எனக் கத்தரிக்காய் எனும் சீர் அமையுமாறு விரைந்து பாடிப் பணிந்து நின்றான் அண்ணாமலை. அதனைக் கேட்ட ஜமீன்தார் பேருவகை பொங்க அண்ணாமலையைக் கனிவுடன் நோக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com