மகட்கொடை

தொல்காப்பியக் களவியலில் தோழிக் கூற்றை விளக்கும் இடத்து இளம்பூரணர் 'அறத்தொடு நிற்றல்' பற்றியும் விளக்குகிறார். தோழி, களவை (களவுக் காதலை) கற்பாக மாற்றும் நிகழ்ச்சியை 'அறத்தொடு நிற்றல்' என்பர்
மகட்கொடை
Updated on
1 min read

தொல்காப்பியக் களவியலில் தோழிக் கூற்றை விளக்கும் இடத்து இளம்பூரணர் 'அறத்தொடு நிற்றல்' பற்றியும் விளக்குகிறார். தோழி, களவை (களவுக் காதலை) கற்பாக மாற்றும் நிகழ்ச்சியை 'அறத்தொடு நிற்றல்' என்பர். அதன் முதல் நிலை 'எளித்தல்' என்பது.
அதற்கு உரைகூறும் இளம்பூரணர், ''எளித்தல் என்பது - தலைவன் நம்மாட்டு எளியனென்று கூறுதல். அதனது பயம் மகளுடைத்தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவராதலான் எளியனென்பது கூறி அறத்தொடு நிற்கப் பெறுமென்றவாறு'' என்கிறார்.
தலைவி - தலைவன் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உள்ள அடிப்படை சிக்கல் இருக்கிறதா என்று சிந்தித்தல்தான் எளித்தல். தலைவனை நீ மணம் செய்து கொள்வதில் சிக்கல் இல்லை என்பது முதல் நிலை. ஏனெனில், தலைவியை மணம் செய்யும் உறவினர் யாரும் இல்லை என்பதை உணர்தல். ஒருவேளை தலைவிக்கு அப்படியான உறவு முறையினர் இருத்தால் என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்கிறார் இளம்பூரணர். எனவே, 'எளித்தலின் பயம்' என்கின்ற ஒன்றை எழுதுகிறார். ஏனெனில், 'எளியன்' என்றால் மட்டுமே தோழி அறத்தொடு நிற்பாள். இல்லையெனில் உடன்போக்கு நிகழ்த்தப்படும்.
தலைவியைப் பெற்ற தாயார் வழி உறவினர் அவளை வேண்டி நின்றவிடத்து, தன் மகளை அவர்களுக்கு மணம் முடிக்கலாம் என்று மகட்கொடை வேண்டி தலைவியின் தந்தையிடம் நிற்பாள். இளம்பூரணர் கருத்தின்படி பார்த்தால், அக்காலத்தில் தாய் வழி உறவினருக்கே அடுத்தடுத்து பெண் கோடல் உரிமை அதிகமாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இந்தப் பெண் கோடல் முறைமை வழி அரசு அதிகாரம் பெற்ற மன்னர்களும் உண்டு. பெண்ணைக் கொடுக்காததால் போர் முனையில் நின்ற மன்னர்களும் உண்டு. மகள் மறுத்தல், மகட்பாற் காஞ்சி முதலான புறத்திணைத் துறைகள் இவற்றை மேலும் விரிவாக விளக்கும்.

-முனைவர் சோ. ராஜலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com