வாக்குத் தவறாத மாதரி!

தமிழ் இலக்கியம் பல உத்தம மனிதர்களைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளது. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் வரும் மாதரி என்னும் இடைக்குலப் பெண்ணைப் பற்றியும், அவளின் வாக்குத் தவறாத நிலையையும் கூறியுள்ளது.
வாக்குத் தவறாத மாதரி!
Published on
Updated on
1 min read

தமிழ் இலக்கியம் பல உத்தம மனிதர்களைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளது. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் வரும் மாதரி என்னும் இடைக்குலப் பெண்ணைப் பற்றியும், அவளின் வாக்குத் தவறாத நிலையையும் கூறியுள்ளது. சமண முனிவரான கவுந்தியடிகள் கோவலன் - கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாகத் தந்தார். இடைக்குலப் பெண்ணாக இருந்தாலும் அவளிடம் பக்தியும் பண்பும் நற்குணமும் இருந்தது என்பதை,
"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டு அடிதொழலும்' (அடைக்கலக்காதை)
என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம். மாதரி நல்லவள். ஆநிரைகளைக் காத்துப் பேணி, அந்த ஆக்கள் தரும் பால் பயன்களை யாவருக்கும் வழங்கி வாழும் இடைக்குல வாழ்க்கை நல்லது. இவளோ தீது இல்லாதவள். முதுமகளாகவும், செவ்வியோளாகவும் இரக்கமுள்ளவளாகவும் இருக்கின்றாள் என்று மாதரியின் குலத்தையும், அத்துடன் அவள் பண்புகளையும் கூறி அடைக்கலம் காக்கச் சிறந்தவள் என கவுந்தியடிகள் தேர்வு செய்தாள்.
"ஆகாத்து ஓம்பி ஆம்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர்கொடும்பாடு இல்லை
தீதிலள்; முதுகள்; செவ்வியள்; அளியள்'
தாயாகித் தாங்கு:
கண்ணகியை நன்னீரில் குளிப்பித்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி, கூந்தலில் மலர்களைச் சூட்டி தூய ஆடையை உடுப்பித்து காவலும் தாயும் ஆகி இவளைப் பாதுகாப்பாயாக என்பார்.
ஆயமும் காவலும் ஆய்இழை தனக்குத்
தாயும் நீயே ஆகித்தாங்கு
தவத்தோர் அடைக்கலம் சிறிதேயாயினும்
தவமுடையவர்கள் தரும் அடைக்கலம் சிறிது என்றாலும் அதனை ஏற்பது பேரின்பம் தரும் என்பார் கவுந்தியடிகள்.
தவத்தோர் அடைக்கலம் தான்சிறிது ஆயினும்
மிகப்பேர் இன்பம் தரும்.
மாதரி தீயிற் புகுந்ததைக் கூறல்:
மாடலன் சேரனின் வேள்வியைப் புகழ்ந்தான். அவன் அரசனிடம் தான் வந்த காரணத்தைக் கூறினான். அப்பொழுது மாதரி, கோவலன் தீதிலன், அரசனே தவறு செய்தான். இடைக்குல மக்களே அடைக்கலமாக வந்த கண்ணகி, கோவலனைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். அரசனும், செங்கோலும் பிழைத்ததே என்று அழுது மதுரையிலே நடுச்சாம வேளையிலே நெருப்பினுள் புகுந்து உயிர்விட்டாள் என்று மாதரி இறந்த செய்தியை மாடலன் கூறுகிறான்.
தாதெரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடைக்குலமாக்காள்
குடையும் கோலும் பிழைத்தவோ என
இடையிருள் யாமத்து எரியகம் புக்கதும்!
மாதரி அடைக்கலமாக வந்தவர்களைப் பாதுகாக்காமல் விட்டேனே என்று மனம் வருந்தி உயிர்விட்டதும், வாக்குத் தவறாத மாதரியின் பண்பு தமிழர் வாழ்வின் அடையாளம் என்பதை இன்றைய தலைமுறை உணருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com