பெண்களும் முத்தி நெறியும்!

பெண்கள் முத்தி நிலை அடைதற்குரிய வழி யாது என்ற வினாவிற்கு ஞானிகள் இவ்வாறு விடை கூறுகின்றனர்:
பெண்களும் முத்தி நெறியும்!

பெண்கள் முத்தி நிலை அடைதற்குரிய வழி யாது என்ற வினாவிற்கு ஞானிகள் இவ்வாறு விடை கூறுகின்றனர்: ""இறைவனுடைய படைப்பில் கருவை உருவாகச் செய்து, உயிருடன் வெளியே அனுப்பும் பெருங் கடமையைச் செய்வோர் பெண்களாவர். ஆகவே, பெண்கள் தம் கணவருக்கு உண்மையாக நடந்து கொள்வதே பெருந்தவமாகும். மேலும், ஆண்மகன் செய்யும் ஞானத் தவத்தின் பலன், இறைவனின் ஆணைப்படி முதலில் அவனைப் பெற்ற தாயையும், பின்னர் கற்புடை மனைவியையும் சென்றடையும். இருவரும் முத்தி நிலையை அடைவர்; மனைவி சுமங்கலியாக இறைவனடி சேர்வாள். இவ்வாறு தாய்க்கும் மனைவிக்கும் சென்ற பின்னரே ஆண் மகனின் தவப்பலன் அவனுள்ளே தங்கும்''
இக்கூற்றுக்குச் சான்றாக ஞானிகள், மூன்று நிகழ்வுகளைக் கூறுகின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனுசுயா தேவி மும்மூர்த்திகளைக் குழந்தையாக்கியது; திருவள்ளுவ முனிவரின் மனைவி வாசுகி அம்மையார் ""கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'' என்று கேட்டது; செண்பகப் பாண்டியனின் மனைவியின் மயிர்க்கால்கள் தோறும் அமிர்தம் ஊறி, இயற்கையான நறுமணம் வீசியது.
ஞானிகள் மற்றொரு சான்றையும் கூறுகின்றனர்: ஆண்மகன் பிரம்மச்சரியத்தில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றையும் உணர்ந்து தவம் பயில்வதற்காக முப்புரிநூல் அணிகின்றான். பின்னர் திருமணத்தின்போது மனைவிக்காகவும் சேர்த்து தவம் செய்வேன் என்ற உறுதியோடு கூடுதலாக ஒரு முப்புரிநூல் சேர்த்து ஆறு புரியாக அணிகின்றான். ஆனால் இன்றைய உலகில் நூலணிந்தவர், அணியாதவர் எவருமே தவம் செய்வதில்லையே! எனவே, பெண்கள் முத்தி அடையும் வழி யாது என்ற வினா எழுப்பப்படுகிறது.
ஆண்களைப் போன்று பெண்களும் தவம் செய்யலாமென்பது சித்தர்களின் கருத்தாகும். அவர்கள் கூற்றுக்குக் கீழ்வரும் பாடல் சான்றாகத் திகழ்கிறது:

""ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன் றேயாகும்
ஆனாலும் பேதைகுணம் பெண்ணுக் குண்டு
வீணுக்கே எடுத்த சென்மம் அனந்தம் கோடி
விவேகமுத்தி அடைந்தவர்கள் அவருள் உண்டு.''
(சிவானந்த போதம், 47)

வேத காலத்தில் வாசக்னு என்ற மகரிஷியின் மகளான (புத்திரி) "கார்க்கி' என்ற பெண் ஞானி இருந்தார். அவர் யாக்ஞவல்கியர் என்ற முனிவரிடம் கேள்விகள் கேட்டு பரீட்சித்தார் (யஜுர் வேதம், பிருகதாரண்யக உபநிஷதம் 2.8:1,2), அவ்வாறு பரீட்சிக்குமளவிற்கு வல்லவர்களாக அவர் விளங்கினார் (யஜுர் வேதம், பிருகதாரண்யக உபநிஷதம் 2.8:12) என்று வேதம் கூறுகிறது. இதிலிருந்து வேத காலத்திலேயே பெண்கள் தவம் செய்து, ஆண் முனிவர்களைப் போல விளங்கினர் என்பது தெரிய வருகிறது.
யாக்ஞவல்கிய முனிவர், மைத்ரேயி, கார்த்தியாயினி ஆகிய இரு மனைவியரோடு இல்லறம் நடத்தி வந்தார். அவர் துறவறம் மேற்கொண்டு கடுந்தவம் புரிய விரும்பினார். அப்பொழுது அவருக்கும் மைத்ரேயிக்கும் நடந்த உரையாடல் வருமாறு:
யாக்ஞவல்கியர் கூறியது: ""பிரியே மைத்ரேயி!,
இந்த(இல்லற) ஆஸ்ரமத்திலிருந்து நான் மேலே துறவற ஆஸ்ரமத்திற்குச் செல்ல விரும்புகின்றேன். ஆகவே, உனக்கும் கார்த்தியாயினிக்கும் பாகம் பிரித்து வைத்து விடுகிறேன்'' (யஜுர் வேதம், பிரு.உப.2.4:1).
மைத்ரேயி கூறியது: ""நாதா! செல்வத்தால் நிறைந்த இந்த பூமி எல்லாம் எனக்குக் கிடைத்தாலும் அதனால் நான் முத்தி நிலையை அடைவேனா?''
""இல்லைதான்'' என்றார் யாக்ஞவல்கியர் (2.4:2).
""எதனால் நான் முத்தி நிலையை அடைய முடியாதோ அதைக்கொண்டு நான் என்ன செய்வேன்? தாங்கள் எதை (ஞானத்தை) அறிவீர்களோ அதையே எனக்கும் கூறியருளுதல் வேண்டும்'' என்றாள் மைத்ரேயி (2.4:3).
""ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும்; கேட்கப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்; நிச்சயமாக அறியப்பட வேண்டும். ஆத்மாவின் தரிசனத்தாலும், கேள்வியினாலும், நினைவினாலும் நிச்சய அறிவினாலுமே எல்லாம் அறியப்படும்'' (2.4:5) என்றார்.
இவ்வாறு யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குச் செய்த உபதேசத்திலிருந்து ஆத்மாவை நினைத்து தவம் செய்து, அதைப் பார்த்தால்தான் முத்தி நிலை கிட்டும் என்பதை அறிகிறோம்.
தமிழ்நாட்டுப் பெண்களுள் ஒளவையார் (விநாயகர் அகவல், வரி 37-44, 69-72), ஊர்வசியாள் (ஊர்வசியாள் இரத்தினச் சுருக்கம் 19:2), திலோத்தமை (திலோத்தமையார் ஞானச்சுருக்கம் 26:24) ஆகிய பெண் ஞானியர் மூவரும் குருவிடம் உபதேசம் பெற்று தவம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன. இச்சான்றுகளிலிருந்து, பெண்கள் தனித்து தவம் செய்து முத்தி நிலையை அடைய முடியும் என்று தெளிவாக அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com