
’கழகம்' என்ற தமிழ்ச்சொல் பல பொருள்களை உணர்த்துகிறது. இச்சொல்லுக்கு வீரமாமுனிவரின் சதுரகராதி, ’கல்வி, சூது, படை, மல்லிவை பயிலிடம்' எனவும்; பாலூர் கண்ணப்பரின் தமிழ் இலக்கிய அகராதி, ’கல்வி பயில் இடம், சூது, சூதாடும் இடம், படை, மல் பயில் இடம், ஓலக்கம்(சபா மண்டபம்)' என்னும் சொற்களையும்; கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ’1. அரசு பிறப்பிக்கும் தனிச்சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட பொது நிறுவனம், (எ.கா. இந்திய உணவுக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம்), 2. ஒத்த கொள்கை, ஆர்வம் முதலியவை கொண்ட பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் ஓர் அமைப்பு (எ.கா. கம்பன் கழகம்)' என்னும் பொருள்களைத் தந்துள்ளன. திவாகர நிகண்டோ, ’’மல்லும் சூதும் படையும் மற்றும் / வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் / கல்விபயில் களமும் கழகமும் ஆகும்'' என்கிறது.
கம்பரும், பாலகாண்டம், நாட்டுப் படலத்தின் 48ஆவது பாடலில், ’’பந்தினை இளையவர் பயில் இடம் - மயில் ஊர்/ கந்தனை அனையவர் கலை தெரி கழகம்'' (முதல் பதிப்பு-1958-மர்ரே என்கிறார். ஆனால், கம்பர் வேறோர் இடத்தில் சூதாடுமிடத்தை ’வட்டாடுமிடம்' என்கிறார்.
’கழகம்' என்பதற்கு மேற்குறித்த பல பொருள்கள் கூறப்பட்டிருப்பினும், குறிப்பாக அது சூது மற்றும் சூதாடும் இடத்தையே குறிக்கிறது எனலாம். இதை மறுத்துரைப்பவருக்கு நம் சங்கத் தமிழ் இலக்கியங்களே விளக்கவுரையும், தெளிவுரையும் கூறுகின்றன.
இன்றைக்குத் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம் எனப் பல இலக்கியக் கழகங்களும், அரசியல் கட்சிகளின் பல கழகங்களும் இந்தச் சொல்லைத் தாங்கி வலம் வருகின்றன. ஒத்த நோக்குடைய அறிஞர் பெருமக்கள் கூடுகின்ற இடத்தையாவது இனி (கம்பன் கழகம், திருவள்ளுவர் கழகம் போன்றவை) அவை, பேரவை, மன்றம், பெருமன்றம் முதலிய சொற்களைப் பயன்படுத்தி வழங்குவது சாலச்சிறந்தது. ஏனெனில், ’கழகம்' என்பது சூதாடும் இடத்தையே (ஏகாரம்) குறிக்கும் என்பது சங்கப் புலவரின், தெய்வப் புலவரின் கருத்து.
’கழகம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளலாம். ஆனால், அது குறிப்பாகச் சூதாடும் இடத்தை மட்டுமே குறிக்காது' என்று மறுத்துரைப்பவர்களுக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் என்ற நூலில், சங்கப்புலவர் நல்லாதனார் தெளிவாக விடை
கூறியுள்ளார்.
’’தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானு - மிம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார்'' (பா.81)
இப்பாடலுக்கான ஆராய்ச்சிப் பேரறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் பதவுரை வருமாறு: ’’தன்கட் செல்வார்க்கெல்லாம் பொதுவாய் நீர்த்துறைபோல பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள்களை விற்று வாழும் வேசையும்; வாழும் நாடோறும் சூதாடுமிடத்தையே (ஏகாரம்) நோக்கிச் செல்லும் (கழகம் பார்க்கும்) நன்மை பயத்தல் இல்லாத சூதினையாடுவோனும்; மிகு வட்டி(வாசி) கொண்டு ஒள்ளிய பொருளீட்டுவானும் இந்த மூவரும் ஆசையாகிய கடலினுள்ளே முழுகி யழுந்துவார்''
மேற்குறித்த சங்கப்புலவர் நல்லாதனாரின் வாக்கை மறுத்துரைக்கப் பலரும் முன்வரக்கூடும். ஆனால், நம் பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவப் பேராசானின் அருள் வாக்கான - பொய்யா மொழியாகிய தெய்வத் திருக்குறளை மறுத்துரைப்பார் யாரேனும் உள்ளனரா? வள்ளுவத்துக்கு மேல் ஒரு குரலா? அதுவும் எதிர்க்குரலா?
’’பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்'' (94:7)
என்கிறது உலகப் பொதுமறை! அதாவது, சூதாடு களத்தில் காலங்கள் கழியுமானால், பழைமையில் வந்த செல்வ வளத்தையும், நல்லியல்பையும் ஒருசேரக் கெடுத்துவிடும் என்கிறார்.
’கழகம்' என்பது சூதாடும் இடத்தை மட்டுமே குறிக்காது என்று பிற்காலத்தில் அறிஞர்கள் பலரும் மறுத்துரைத்து, வாதிட்டுக் கொள்வர் என்பதை முன்கூட்டிய அறிந்த தீர்க்கதரிசியான திருவள்ளுவர், அதை ’சூது' என்ற ஒரு தனி அதிகாரமாகவே அமைத்து, அதில் இச்சொல்லை (கழகம்) கூறியுள்ளது கூர்ந்து கவனிக்கத்தக்கது. சூது அதிகாரத்தின் முதல் திருக்குறளில்,
’’வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று''
என்று கூறி, வெற்றியே பெற்றாலும் சூதாட்டத்தை விரும்ப வேண்டாம்; வெற்றியால் கிடைத்த பொருளும் தூண்டிலின் நுனியில் பொருந்தும் இருப்பு முள்ளை, மீனானது இரையெனக் கருதி விழுங்கியது ஒக்கும் என்று சூதின் தீங்கைக் கூறியவர், நான்காவது குறளில் ’கழகமும் கையும் தருக்கி' என்கிறார். தொடர்ந்து, இவ்வதிகாரத்தில் உள்ள ஏனைய குறள்களின் மூலம் சூதாட்டத்தினால் வரக்கூடிய துன்பங்கள், சூதாட்டத்தின் கேடு முதலியவைகளைக் கூறியுள்ளார்.
ஆனால் ’திருவிளையாடற் புராணத்தில், ’’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தஇப் பசுந்தமிழ்'' என்று கூறப்பட்டுள்ளதே' என ஆய்வறிஞர் சிலர் கேட்கக்கூடும். திருவிளையாடற் புராணம் பாடிய காலத்தில் ’கழகம்' எனும் சொல், கல்வி பயிலிடம், ஓலக்கம்-சபாமண்டபம்,(முக்கண் முதல்வன் சிவபெருமான் இருந்ததால்) ஒத்த கொள்கை உடையோர் (புலவர்கள்) கூடுமிடமாகத்தான் பொருள் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இதற்கு உண்மையான - நுட்பமான பொருளைத் தனி அதிகாரமாக்கித் தந்தவர் திருவள்ளுவர் ஒருவரே!
இத்தகைய விளக்கங்களாலும் அமைதி கொள்ளாமல், ’என்னதான் கூறினாலும் ’கழகம்' என்ற சொல் சூதாடும் இடத்தை மட்டுமே குறிக்காது' என்று தொடர்ந்து வாதிடுபவர்களுக்கு விளக்கமளிக்க திருவள்ளுவரே துணைக்கு வருகிறார் - அவரையே அழைக்க வேண்டியுள்ளது.
’கழகம்' என்ற சொல் சூதாடும் இடத்தை மட்டும் குறிக்காது என்றால், ஏன் திருவள்ளுவர், ’கழகம்' என்ற இச்சொல்லை, ’அவை அறிதல்' (ஓலக்கம் - சபா மண்டபம்) அதிகாரத்திலோ, ’கல்வி' (கல்வி, கல்வி பயிலிடம்) அதிகாரத்திலோ, ’படைமாட்சி' (படை) அதிகாரத்திலோ அல்லது ’படைச்செருக்கு' (படை, மல் பயிலிடம்) அதிகாரத்திலோ குறிப்பிடாமல் ’சூது' என்கிற தனி அதிகாரமாக்கித் தந்திருக்கிறார் என்னும் நுட்பத்தையும் ஆழ்ந்து சிந்தித்துத் தெளிதல் சான்றோர் கடன். உண்மையாகவே திருவள்ளுவர் ஒரு தீர்க்கதரிசிதான்!
இனியாவது தமிழறிஞர்கள், ஆன்றோர், சான்றோர், அரசியல்வாதிகள் போன்றோர் கூடும் இடங்களை, அவை, பேரவை, மன்றம், பெருமன்றம் முதலிய சொற்களால் (பெயர் சூட்டி) குறிப்பிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இல்லையெனில், திருவள்ளுவர் குறிப்பிட்டுக் கூறியதுபோல அது இனி ’சூதாடும் சூதர்களின் இடமாக - களமாக மட்டும்தான்' உண்மைப் பொருள் உணர்ந்த பலராலும் பார்க்கப்படும். உலகப் பொதுமறை கூறும் உண்மைப் பொருளுணர்ந்து அதைச் செயல் படுத்தலாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.