
பெரும் ஊழிக் காலத்தில் (கி.மு.50,000) ஏற்பட்ட பெரும் கடல்கோளால் கண்டங்கள் மோதிக் கொண்டன அல்லது நகர்ந்தன. தெற்கே இருந்த குமரிக்கண்டம் கடலில் படிப்படியே மூழ்கத் தொடங்கியது. தென் கடலில் மூழ்கிக் கிடக்கும் இக்கண்டமே மனிதன் தோன்றிய முதல்நிலம் என்று பேராசிரியர் ஹெக்கல் (மனிதத் தோற்றத்தின் வரலாறு), சர் வால்டர் ராலே (உலக வரலாறு), ஸ்காட் எலியட் (மறைந்த லெமூரியா) சர்.டி.டபிள்யு ஓல்டர்னஸ் (இந்தியக் குடிமக்களும் விளக்கங்களும்) முதலிய வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
குமரிக்கண்டம் கடலுட்பட நேர்ந்த காலம் கி.மு.50,000 முதல் 25,000 வரை ஆகும். தெற்கே கடல் விழுங்க விழுங்க வேங்கடமலைக்கு வடக்கே நிலப்பகுதி படிப்படியே தோன்றியது. வடக்கே இமயமலை தோன்றியது. குமரிக்கண்டத் தமிழர்கள் கி.மு.25,000 முதல் கி.மு.10,000 வரை இமயமலை வரை பரவினர். கி.மு.25,000 முதல் தெற்கே நடைபெற்ற கடல்கோள்களே இன்றுள்ள ஆசியா அளவுக்குக் கொண்டு வந்தன.
கி.மு.1400இல் நடைபெற்ற கடல்கோளே இலங்கை பிரியக் காரணம் என்பார் இலங்கை வரலாறு எழுதிய சர்.ஜே.இ.டென்னைட். மேலும், கி.மு. 6ஆம் நூற்றாண்டு, கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகிய காலங்களில் நடைபெற்ற இரண்டு கடல்கோள்களைக் குறிப்பார். முதல் கடல்கோளில் இலங்கை பிரிந்தது என்றும், இரண்டாவதில் தென் மதுரை அழிந்தது என்றும், மூன்றாவதில் கபாடபுரம் அழிந்தது என்றும் கொள்ளலாம்.
குமரிமலையும், குமரி ஆறும் பஃறுளி ஆறும் இருந்த குமரிக்கண்டப் பகுதி குமரிநாடாகச் சுருங்கிய போதும் 700 காதம் பரப்புடையதாய் இருந்தது. அதில் ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின் பாலைநாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என 49 நாடுகள் இருந்தன.
குமரிமுனை மிகப்பெரிய நீண்ட அகன்ற மலையாக இருந்துள்ளது. எனவே, இதன் தென்பகுதி பொதியமலை (பொதிமலை-பொதி-பெரிய) எனப்பட்டிருக்க வேண்டும். இங்கு மலையில் தோன்றிய குறிஞ்சி நாகரிகமே குமரி நாகரிகம். குமரி மலையிலிருந்து வந்த குமரியாறும் அதன் சார் நிலங்களும் ஆற்றங்கரை நாகரிகத்தையும் வளர்த்தன எனலாம்.
கி.மு.15,000 முதல் இரும்புக் காலம். கனிப்பொருள் வளம் அறிந்த நாகரிக மனிதனாக வாழ்ந்த தமிழினம், கி.மு. 8000இல் சேர, சோழ, பாண்டிய குடிப் பிரிவுகளுடன் விளங்கியது. மிகப்பழைய பண்டைய குடியினர் என்பதால் பாண்டியர்; ஆறுகண்டு சோறு கண்டவர் சோழர்; கடற்கரை சேர்ந்தவர் சேரர் ஆவர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால் நிலமும் ஐந்திணையும் பகுத்த நாகரிகம் பெற்ற தமிழர் இந்தியா முழுவதும் விளங்கினர்.
கி.மு.25,000 முதல் கி.மு.10,000 வரை இமயம் வரை பரவியிருந்த குமரிக்கண்டத் தமிழர் பெருங்கற் புதைவுக்காலம் அல்லது இடப்பெயர்ச்சிக் காலத்தில் (கி.மு.10,000 முதல் கி.மு.8000) இமய மலைக்கு அப்பால் மேற்கே பலுசிஸ்தானம், எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், பாபிலோனியா ஆகிய நாடுகளுக்கும்; கிழக்கே சீனம், சாவகம், கடாரம் ஆகிய நாடுகளுக்கும்; வடக்கே துருக்கி, மங்கோலியா, ரஷியா முதலிய நாடுகளுக்கும் பரவினர். இவ்வாறு குமரி நாகரிகம் உலகமெல்லாம் பரவியது.
உலகில் முதன்முதல் மனிதன் தோன்றிய நிலம் குமரிக்கண்டம் ஆகும். சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் மலையில் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்பவர் கண்டெடுத்த கற்கோடரிகள் பழங்காலத்தை (15,00,000 ஆண்டுகள் - 50,000 ஆண்டுகள்) சேர்ந்தவை. இதன் மூலம் ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகள் என்று கூறப்பட்டு வந்தது. எனவே, அதற்கு முன்பே தமிழ் நிலத்தில் மனிதன் வாழ்ந்த சான்று உள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, பல்லாவரம் இன்றைய இந்தியத் தரைப்படை வளாகத்தின் எல்லைக்குட்பட்ட மலைகள் உள்ள பகுதியில் சர். இராபர்ட் புருஸ் ஃபூட் (Sr Robert Bruce Foote) (1893-1912 கி.பி.) எனும் ஆங்கில அரசின் இந்தியப் புவியியல் அளவைத் துறையின் நிலவியலாளர், 30-05-1863 அன்று, பழங்கற்கால கற்கோடரிகளை பல்லாவர மலைகளில் கண்டு பிடி த்தார்.
பல்லாவரம், பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம், குடத்தலை (கொற்றலை / கொசத்தலை) ஆற்றுப்படுகைகளிலும், குடியம் மலைப் பகுதிகளிலும், கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், காலக்கணக்கீட்டை 2,00,000 ஆண்டுகள் பழைமையானவை என 28-09-1863 - அன்று சர். இராபர்ட் புருஸ் ஃபூட் வரையறை செய்தார்.
முனைவர் சாந்தி பாப்பு என்பவர், சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள அத்திரம்பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில் கிடைத்த பழங்கற்கால கற்கருவிகளின் காலத்தை உறுதி செய்திட 1999ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டு வரை ஆய்வு செய்தார்.
அவரது ஆய்வின் பயனாக, பழங்கற்கால கற்கருவிகளின் காலம் 1.51 முதல் - 1.7 மில்லியன் ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அவரின் ஆய்வறிக்கை, அமெரிக்க நாட்டின் 'அறிவியல்'(Science) என்னும் இதழில் (25 March 2011 Vol.. 331 ய்ர். 6024 pp. 1532-1533DOI 10.1126/ Science.1203806) ஏற்கப்பட்டு வெளிவந்துள்ளது. இக்கற்கருவிகளின் காலத்தை ஆய்ந்து முடிவு செய்ய பிரான்சு நாட்டு பல்கலைக்கழகம் அவருக்குத் துணைபுரிந்தது.
ஆகவே, சென்னை, விமான நிலையத்தின் எதிரில் உள்ள பல்லாவரம் மலைப்பகுதியில், தொல்லியல் அறிஞர் கண்டுபிடித்த கற்கோடரித் தொழிற்சாலை இருந்த இடத்தில் 'ஆதி மனிதன் தோன்றிய இடம்' என நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவினால், உலகத்தவர் வியந்து நோக்கும் சுற்றுலாத் தலமாகவும் அது அமைய வாய்ப்பிருக்கிறது.
-முனைவர் பா. இறையரசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.