
தொல்காப்பியர் தாமியற்றிய தொல்காப்பியத்துள் பொருளதிகாரச் செய்யுளியலிலும் மரபியலிலும் முறையே தமிழ்மொழியை வாய்மொழி (நூற்பா.71), தொல்மொழி (நூ.230), உயர்மொழி (நூ.163), தோன்றுமொழி (நூ.165), புலன்மொழி (நூ.233), நுணங்குமொழி (நூ.100) என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் தமிழ்மொழி என்று குறிக்க வேண்டிய இடத்தில் அதன் மாற்றுப் பெயராக மேற்குறித்த சிறப்பு அடைமொழிகளைக் குறித்துள்ளார். இவ்வாறு குறிக்கப்பெற்ற வாய்மொழி முதலாகிய பெயர்களெல்லாம் தமிழ்மொழியின் இயல்பையும், சிறப்பையும் குறிக்கும் பெயர்களாகும்.
தமிழ்மொழிக்கு மேற்குறித்த அடைமொழிகளன்றி முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ், தேன்தமிழ் முதலான அடைமொழிகள் பல உண்டு. இம்மொழிகளுள் முத்தமிழ் என்பதன் விளக்கத்தை அறிவோம்.
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றையும் சேர்த்து முத்தமிழ் என்று குறிப்பிடுவர். இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் தமிழுக்கு உரியதாகையால் முத்தமிழ் எனப் பெயர் பெற்றது. இருப்பினும் அதன் உள்ளார்ந்த விளக்கம் அறிந்து இன்புறத்தக்கதாகும்.
ஆசிரியம் முதலான செய்யுளை இயற்றமிழ் என்றும், பண்ணோடு கூடிய பாடலை இசைத்தமிழ் என்றும், பாடி ஆடுதலை நாடகத்தமிழ் என்றும் குறிப்பர். அஃதோடு, இயற்றமிழ் அறிவுக்கு விருந்தாகும். இசைத்தமிழ் அறிவுக்கும், செவிக்கும் விருந்தாகும். நாடகத்தமிழ் அறிவுக்கும், செவிக்கும், விழிக்கும் விருந்தாகும்.
இவ்வாறு முத்தமிழ் என்பதற்கு மேற்கூறிய அரிய விளக்கத்தைத் தொல்காப்பியச் செம்மல், பேராசிரியர் அடிகளாசிரியர் பின்வரும் பாடலாகவே இயற்றியுள்ளார்.
இயலிசை நாடகம் எனும் பெயர் பெற்ற
மூன்று பகுப்பாய் முத்தமிழ் விளங்கும் -அவற்றுள்,
ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமையப் பாவி
மோனை முதலாம் தொடையழகு தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும் - இஃது,
அறிவிற்கு விருந்தாய் அமையும் என்க
பாவினம் என்றும் பண்ணத்தி என்றும்
செந்துறை என்றும் செப்பும் பாட்டில்
அறமுதற் பொருளை அமையப் பொருத்திப்
பண்களை அமைத்துப் பாடுதல் தானே
இசைத்தமிழ் என்னும் இன்தமிழ் ஆகும்- இத்தமிழ்
அறிவிற்கும் செவிக்கும் விருந்தா கும்மே
நடித்தலுக் கேற்ற வெண்துறைப் பாட்டில்
அறமுத லாகிய பொருள்வகை அமைவரப்
பாடி ஆடுதல் நாடகத் தமிழாம் - இத்தமிழ்
அறிவிற்கும் செவிக்கும் விழிக்கும் விருந்தாம்
மூன்று தமிழ்க்கும் மெய்ப்பாடு வேண்டும்.
மேற்கூறிய பாடலுடன் "முகமும் விழியும் கருமணியும் போன்றது முத்தமிழ்க் கூறுகள்' என்றும் அடிகளாசிரியர் குறிப்பு எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.