தமிழ்க் காப்பியங்களில் புலம் பெயர்தல்

காலங்காலமாக தாங்கள் வாழ்ந்த ஒரு வாழ்விடப் பரப்பைவிட்டு, பிறிதோர் இடத்திற்குச் செல்வதைப் "புலம் பெயர்தல்' என்பர்.
தமிழ்க் காப்பியங்களில் புலம் பெயர்தல்

காலங்காலமாக தாங்கள் வாழ்ந்த ஒரு வாழ்விடப் பரப்பைவிட்டு, பிறிதோர் இடத்திற்குச் செல்வதைப் "புலம் பெயர்தல்' என்பர். இவ்வாறு இடம்விட்டு இடம் பெயருவதைத் தனி மனிதர் செய்யலாம்; கூட்டமாக இனக் குழுவினரும் இவ்வாறு இடம் பெயரலாம். இனக்குழு இடம்பெயர்தலை, "திரள் புலப்பெயர்வு' என்பர். இவ்வாறான திரள் புலப்பெயர்வு இயற்கைப் பேரிடர் காரணமாக எழும் குடியேற்றினால் நிகழலாம்; சில போழ்து, அடிமைத்தனம் காரணமாகவும் வலிந்து இந்தப் புலம்பெயர்தல் நடை பெறலாம்.
"புலம்' என்ற தமிழ்ச்சொல் பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். அறிவு, இடம், ஒலி முதலிய ஐம்புலன், திக்கு, நுண்மை, மேட்டுநிலம், காடு முதலிய பொருள்களைப் "புலம்' என்ற சொல் தருவதாக மதுரைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, வேதம் முதலிய பொருளைத் தருவதாக ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
நடைமுறையில் "புலம்' என்ற சொல் இடம், திசை முதலிய பொருள்களைத் தருவதாகச் சுட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தென்புலம், வடபுலம் முதலிய சொற்கள் முறையே தென்திசை, வடதிசை ஆகிய சொற்களைத் தருகின்றன.
"வேறுபுல முன்னிய விரகறி பொருந' (பொரு.3) என்ற தொடர், வேற்றிடம் சென்ற பொருநரைச் சுட்டுகிறது. போர், பகை காரணமாக வேறிடங்களுக்குச் செல்வதைச் சுட்டும்போது, "வேறு புலத்து இறுக்கம் வரம்பில் தானை' எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.
கால் நகையால்(சிலம்பால்) வாய்நகை (புன்னகை) இழந்தவள் வாழ்வரசி கண்ணகி! சோறுடைய சோணாட்டின் வணிகப் பெருமக்களான கோவலனும் கண்ணகியும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற அருகில் இருந்த பாண்டிய நாட்டிற்குப் புலம்பெயர்கின்றனர்.

"சேயிழை! கேள் இச்
சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனோடு
உலத்தபொருள் ஈட்டுதல் உற்றேன்! மலர்ந்தசீர்
மாடமதுரை யகத்துச் சென்று ...' (9:73-76)

எனச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. பாண்டியனால் கொல்லப்பட்ட கோவலனின் முற்பிறப்பு பற்றி, மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் எடுத்துரைக்கிறது. கபிலபுரத்திலிருந்து கலிங்க நாட்டின் சிங்கபுரத்திற்குத் தன் மனைவியான நீலியுடன் புலம்பெயர்ந்தான் சங்கமன் என்பவன்.

"அரும்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வணிகன்' (23:146-150)

என்ற பகுதி பொருள் தேடல் காரணமாகத் தன் நாட்டிலிருந்து பிறநாட்டிற்குப் புலம்பெயர்தலைக் காட்டுகிறது. கோவலன், சங்கமன் ஆகிய இந்த வணிகர்கள் தம் மனைவியரோடு குடும்பமாகப் புலம்பெயர்ந்தனர். இதனைத் தனிமனிதப் புலம்பெயர்தல் எனலாம்.
சிலம்புடன் கதைத் தொடர்புடைய மணிமேகலை காப்பியமும் இவ்விதமான புலம்பெயர்தலைக் குறிப்பிடுகிறது. புகார் நகரத்தில் வசிப்பவன் தருமதத்தன். அவனுடைய மாமன் மகள் விசாகை. அவ்விருவரும் களவுப் புணர்ச்சி (திருமணத்திற்கு முன்னதான சந்திப்பு) கொண்டனர் என ஊரார் அலர் தூற்றுகின்றனர். அலருக்கு அஞ்சிய விசாகை, சம்பாபதி கோயிலுக்குச் சென்று சம்பாபதி தெய்வத்தின் அருளால், தனது ஒழுக்கத்தை நிலைநாட்டி, ஊரவர் அலரை ஒழிக்கின்றாள்; கன்னிமாடம் சென்று துறவு பூணுகிறாள். தருமதத்தனோ, தன் பெற்றோருடன் புகாரைவிட்டு, பாண்டி நாட்டு மதுரைக்குப் புலம் பெயர்கின்றான். இதனை,

"தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெருநதர் தன்னைப் பிறகிட் டேகித்
தாழ்தரு துன்பம் தலை யெடுத்தாயென
நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப்பெருந் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்றடைந்தி'
(மணி 22:101-106)

என மணிமேகலை காட்டுகிறது. பழிக்கு அஞ்சியும் புலம்பெயர்தல் நிகழ்வதனை இதன் வழி அறிய முடிகிறது. தருமதத்தன் தனது குடும்பத்துடன் இடம்பெயர்தல் என்பது தனிமனிதப் புலம்பெயர்வு எனலாம். மேலும், சோழநாட்டிலிருந்து மக்கள் அண்டை நாடான பாண்டிய நாட்டு மதுரைக்குப் புலம்பெயர்தல் தமிழர்தம் வழக்கமாக இருந்தமையை உணர முடிகிறது.

திருத்தொண்டர் புராணத்துள் இடம்பெறும் பெண் அடியார் புனிதவதியார். அவரது தெய்வத் தன்மையை உணர்ந்த அவளுடைய கணவர் பரமதத்தன், புனிதவதியாரைப் பிரியக் கருதுகிறான். கடல் வணிகம் மேற்கொள்கிறான். இதை, "கலஞ் சமைத்தற்கு வேண்டுங் கம்மியருடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் ...' என்பார் சேக்கிழார். இவ்வாறு பொருளீட்டிய பரமதத்தன் மீளவும் தான் வாழ்ந்த காரைக்காலை அடையாமல், பாண்டிநாட்டின் கடற்கரைப் பட்டினத்தை அடைகிறான். இவ்வாறு வாழ்வியல் சிக்கல் காரணமாக சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்குப் புலம் பெயர்தல் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம் எனப் பல தமிழ்க் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளது எண்ணற்கு உரியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com