மாம்பழக் கவிராயரின் வெண்பாத் திறன்!

பழநியில் மாம்பழக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரின் குடிப்பெயரே மாம்பழம்தான். இவர்தம் மூன்று அகவையிலேயே வைசூரி நோயால் கண் பார்வை இழந்தவர்.
மாம்பழக் கவிராயரின் வெண்பாத் திறன்!

பழநியில் மாம்பழக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரின் குடிப்பெயரே மாம்பழம்தான். இவர்தம் மூன்று அகவையிலேயே வைசூரி நோயால் கண் பார்வை இழந்தவர். கட்புலன் போய்விட்ட காரணத்தாலோ என்னவோ மற்றைய புலன்கள் மிக்க திறமை பெற்று விளங்கின. காதால் கேட்கும் எதனையும் அப்படியே நினைவில் இருத்திக் கொள்வது அவரின் வழக்கம். இவ்வாறாகப் பல நூல்களைப் பலர் படிக்கக் கேட்டு ஒரு சிறந்த புலவராக - கவிஞராகத் திகழ்ந்தார்.
யாப்பிலக்கணத்தைப் பிழையறக் கற்றுணர்ந்தார். இந்த மாம்பழக் கவிராயரை ஆதரித்தவர் பாப்பம்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த பெருநிலக் கிழார் ஒருவர். இந்த நிலக்கிழாரின் பேரில் பிரபந்தங்கள் இயற்றி அவரிடம் பொன் முடிப்பைப் பலமுறை பெற்றார், மாம்பழக் கவிராயர். நொடியில் ஆசுகவி பாடும் ஆற்றலைப் பெற்றவர். பொன்னுசாமித் தேவர் என்பாரும் அவரின் தம்பியாகிய சேதுபதி தேவரும் மாம்பழக் கவிக்கு மேலும் ஆதரவுக் கரம் நீட்டினர்.
பொன்னுசாமித் தேவர் மாம்பழக் கவிராயரின் திறமையை மேலும் சோதிக்க எண்ணி, அருணகிரிநாதர் பாடிய,

""முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை
சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்
குருபரவென ஓது''

என்ற அடிகளை அப்படியே வெண்பாவாக அமையுமாறு பாடச் சொன்னார். மாம்பழக் கவிராயர் சிறிதும் சிந்திக்கவில்லை. உடனே, அந்த அடிகளுக்கு முன்னால் "வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய' என்னும் சொற்றொடரைப் போட்டுப் படியுங்கள், வெண்பாவாக மாறிவிடும்'
என்றார்.

""வரமுதவிக் காக்கு மனமேவெண் சோதி
பரவியமுத் தைத்தரு பத்தித் - திருநகையத்
திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித்
துக்குருப ரன்னெனவோ து''

இவ்வாறு அருணகிரிநாதரின் பாடலில் முதலடி ஒன்றைச் சேர்த்து அப்படியே வெண்பாவாக மாற்றிய திறம் மாம்பழக் கவிராயருக்கே உரித்தானது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com