ஊன் துவை அடிசில்

இன்று அசைவ விரும்பிகளாலும் சைவ விரும்பிகளாலும் விரும்பி உண்ணும் உணவாகப் பிரியாணி விளங்குகிறது
ஊன் துவை அடிசில்

இன்று அசைவ விரும்பிகளாலும் சைவ விரும்பிகளாலும் விரும்பி உண்ணும் உணவாகப் பிரியாணி விளங்குகிறது. அசைவ பிரியாணியில் கறிவகைகள், மீன் வகைகள், முட்டை வகைகள் இடம்பெறுகின்றன. சைவ பிரியாணியில் காய்கறி வகைகள் இடம் பெறுகின்றன.
 சைவம், அசைவம் என்னும் இரண்டு நிலைகளில் தற்காலத்தில் இருக்கும் பிரியாணியானது சங்க காலத்தில் அசைவ உணவாக மட்டும் இருந்துள்ளது. அதனை "ஊன் துவை அடிசில்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். "ஊன்' என்பது இறைச்சியையும் "துவை' என்பது கலந்த தன்மையையும் "அடிசில்' என்பது சமைக்கப்பட்ட உணவினையும் குறிக்கிறது. ஊன் துவை அடிசில் என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொருள்.
 பிரியாணி என்னும் சொல் பிற்காலத்தில் வந்துள்ளது. ஆனால் பிரியாணி என்னும் உணவு சங்க காலத்திலேயே தமிழ் மக்களாலும் பிறராலும் உண்ணப்பட்டுள்ளது.
 "பிரியாணி' என்னும் சொல் பாரசீகச் சொல். "பிரியன்' என்னும் சொல்லிலிருந்து "பிரியாணி' என்னும் சொல் உருவாகியுள்ளது. பிரியன் என்றால் சமைப்பதற்கு முன்பாகப் பொரிக்கப்பட்டது என்று பொருள். அவர்கள் பிரியாணியை இறைச்சி, அரிசி, நெய், மஞ்சள், மிளகு ஆகிவற்றைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
 1398இல் தைமூர் இந்தியாவுக்கு வரும்போது பிரியாணி என்னும் உணவு வகையும் இந்தியாவிற்கு வந்தது என்று குறிப்பிடுகிறார்கள். பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்த ஜகாங்கீரின் மனைவியான நூர்ஜகான் இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தார் என்றும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஷாஜகானின் மனைவியான மும்தாஜ் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ பிரியாணி இந்தியாவிற்குப் பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனது என்று வரலாறு தெரிவிக்கிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது. பதிற்றுப்பத்தில்,
 சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்
 ஓடாப் பீடர் உள்வழி இறுத்து (45: 13-14)
 ஊன் துவை அடிசில் தற்காலப் பிரியாணியைக் குறிக்கிறது. சேரன் செங்குட்டுவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றபின், தனது வீரர்களுக்கு விருந்தளித்தான். அந்த விருந்தில் அவன் வழங்கிய ஊன் துவை அடிசிலானது சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றி இருந்தது என உணர்த்தியுள்ளார் புலவர் பரணர்.
 செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது. செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும் வண்மையாகவும் உள்ளன. ஆனால் எனது கைகள் பிரியாணி என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார்.
 புலவு நாற்றத்த பைந்தடி
 பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
 கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
 பிறிது தொழில் அறியா ஆகலின் (14: 12-15)
 என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காரணம் தெரிவித்துள்ளார் கபிலர். புதிய இறைச்சித் துண்டங்களில் மாமிச வாடை இருக்கும். அந்த வாடை போவதற்காக அதனை நன்கு வேக வைத்து அரிசிச் சோற்றுடன் கலந்து தாளித்துள்ளார்கள். அதனால் அந்தப் புலவு நாற்றம் அடிக்கும் பிரியாணி இனிய மணத்தைப் பெற்றுள்ளது என்று பிரியாணி என்னும் ஊன் துவை அடிசில் எவ்வாறு விரும்பத்தக்க உணவாக சமைக்கப்படுகிறது என்பதையும் கபிலர் விளக்கியுள்ளார்.
 சோழன் நலங்கிள்ளியைப் போற்றி கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் ஊன் சோறு என்னும் சொல் அமைந்துள்ளது. நலங்கிள்ளி எப்போதும் போர் முனையிலேயே இருப்பவன். அவனது பாசறையில் பாணர்களுக்கு எப்போதும் ஊன் சோறு வழங்குவதால் அந்தப் பாசறை ஆரவாரம் மிக்கதாக இருக்கும் என்கிறார்.
 ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
 செம்மற்று அம்ம நின் வெம்முனை இருக்கை (33:14-15)
 இந்த ஊன் சோறு என்பது துவை என்னும் சொல் இல்லாமல் வந்துள்ளது. ஆனால் ஊன் சோறு என்னும் சொல்லே பிரியாணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
 தேன் நிறைந்த குவளைகளைத் திறந்து அளவற்ற தேனை வழங்குவான். கரிய நிறம் கொண்ட ஆட்டுக்கடாவைக் கொன்று அதன் பெரிய துண்டங்கள் கலந்து சமைக்கப்பட்ட ஊன் துவை சோற்றினை மிகவும் அன்புடன் உண்ணத் தருவான். அந்தப் பாரி இப்போது இல்லை. அவ்வளவு வளம் நிறைந்த பறம்பு மலையை விட்டும் போகின்றேன் என்று வருந்துகிறார் கபிலர்.
 மட்டு வாய் திறப்பவும் மையிடை வீழ்ப்பவும்
 அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
 பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
 நட்டனை மன்னோ முன்னே (113:1-4)
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஊன் துவை அடிசிலுடன் தேனையும் கலந்து உண்டிருக்கிறார்கள். தற்காலத்திலும் பிரியாணி பரிமாறும்போது தேன் போன்று இனிப்பாகவும் சற்றுத் திடமாகவும் இருக்கக் கூடிய இனிப்பு உணவினைப் பரிமாறுகிறார்கள். ஊன் துவை அடிசில் என்னும் அழகு தமிழ்ப் பெயரை நீக்கி விட்டு, பிரியாணி என்னும் பெயரை வழங்கிவிட்டு அது பாரசீகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
 - முனைவர் முகிலை இராசபாண்டியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com