"கீதாரி'களின் வாழ்க்கை முறை!

"கீதாரி'களின் வாழ்க்கை முறை!

முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும். நிலத்தன்மைக்கு ஏற்ப கால்நடை மேய்த்தல் என்பது இந்நிலத்திற்குரிய தொழிலாக இருந்துள்ளது.

முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும். நிலத்தன்மைக்கு ஏற்ப கால்நடை மேய்த்தல் என்பது இந்நிலத்திற்குரிய தொழிலாக இருந்துள்ளது. குறுந்தொகை (45), நற்றிணை (29), அகநானூறு(40), ஐங்குறுநூறு (100), முல்லைக்கலி (17) என, சங்க இலக்கியத்தில் 231 முல்லைத் திணைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் முல்லைக்கலி தவிர்த்த பிற நூற்பாடல்கள் கால்நடை மேய்ப்பதைத் தலைவர்களாகக் கொண்டிருக்கவில்லை ஆயினும் கால்நடை மேய்ப்போரது வாழ்க்கை முறை அப்பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கால்நடை மேய்ப்போர் ஆயர், கோவலர், இடையர், கோனார், கீதாரி எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளனர். இவர்களுக்கிடையே சிற்சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. என்றாலும், இன்று இவர்கள் தங்களை "யாதவர்கள்' என அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர். இந்திய வட மாநிலங்களில் வாழும் கால்நடை மேய்க்கும் தொழில் மேற்கொண்டோர் தங்களை யாதவக்குலத்தார் எனக் கூறிகொள்வது மரபு. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ளோரும் இவ்வாறு தங்களை அழைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.
ஆயர், கோவலர், இடையர், கோனார் ஆகியோர் ஓரிடத்தில் நிலைபெற்று கால்நடை மேய்க்கும் தொழில் செய்வோர் ஆவர். (இவர்கள் இன்று வெவ்வேறு தொழிக்குப் பெரும்பாலும் மாறிவிட்டனர்) ஆனால், "கீதாரி' என்போர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். தமிழகத்திலுள்ள இராமநாதபுரம், தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்த கால்நடை மேய்ப்போர் "கீதாரி' எனப்படுகின்றனர்.
இவர்கள் தங்களது கால்நடைகளைத் தமிழகத்தின் வடக்கு எல்லை வரை சென்று மேய்த்து வருகின்றனர். செல்லும் இடங்களில் வயல்வெளிகளில் "கிடைபோடுதல்' வழி கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும், கால்நடைகளை விற்பதன் வழி கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் குடும்பம் நடத்துகின்றனர். இவர்களில் ஒரு சிலர் "கிடைபோடும்' காலம் வரை இருந்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி விடுவோரும் உண்டு. அவ்வாறன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி, ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வருவோரும் உண்டு. பட்டுக்கோட்டை பகுதியில் கிடைபோட்டுள்ள கீதாரிகள் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டவர்களாவர்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் விரவி இருக்கும் கால்நடை மேய்ப்போரை பிறநாட்டு இலக்கியங்களைவிட நமது சங்க இலக்கியங்கள் முதன்மைப்படுத்திப் பேசியுள்ளன. கால்நடை மேய்ப்போரை முல்லைப் பாடல்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளன. என்றாலும், மேற்சுட்டிய கீதாரிகளின் புலம்பெயர் வாழ்க்கையைப் பெரும்பாலும் அவை பேசவில்லை. காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் வீடு திரும்பும் ஆயர்களையே பெரும்பாலான பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. ஒருசில பாடல்களில், வீட்டிற்கு வந்து செல்லும் தூரத்தில் கால்நடைகள் அரண் அமைத்துப் பாதுகாக்கப்பட்ட குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அரிதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் கீதாரிகளின் புலம் பெயர் நிலையைச் சுட்டுவது போன்று உள்ளது. அப்பாடலை எழுதியவர் கருவூர்க்கதப்பிள்ளை என்பவராவார். அப்பாடல் வருமாறு:

""பல் ஆ நெடுநெறிக்கு அகன்று வந்தெனப்
புன்தலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அணம்வந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட் டோரே'' (குறு.64)

இது தலைவி கூற்றுப் பாடலாகும். இப்பாடலுக்கு உ.வே.சா. "தோழி, பல பசுக்களும் நெடுந்தொலைவான வழியில் நீங்கிச் சென்றனவாக, அவை தங்கியிருந்த புல்லிய இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து மாலைக் காலத்திலே இளமை வாய்ந்த கண்களை உடைய கன்றுகள் மனம் கழன்றாற்போல, தலைவரின் வரவு நோக்கித் துன்பத்தை உடையோமாய் யாம் இருத்தலைத் தெரிந்திருந்தும் நெடுந்தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று தலைவர் இன்னும் அந்த நெடுந்தொலைவிலேயே உள்ளார்' என உரை எழுதியுள்ளார்.
இப்பாடலில் நெடுந்தொலைவு சென்று தங்கியிருக்கும் தாய்ப்பசுவிற்குத் தலைவனும் தாய்ப்பசுவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கன்றுக்குத் தலைவியும் ஒப்புமை கூறப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
சங்க இலக்கிய முல்லைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் கால்நடை மேய்ப்போர் அல்லர். விதிவிலக்காக முல்லைக்கலியில் மட்டும் அவர்கள் தலைவர்களாக வந்துள்ளனர். பிற முல்லைப் பாடல்கள் அனைத்திலும் போர்மேற் சென்று தங்கியிருக்கும், திரும்பும் ஆடவர்களே தலைவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். போர்மேற் சென்ற தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, கால்நடை மேய்க்கச் சென்ற பிற ஆடவர்கள் எல்லாம் மாலையில் கால்நடைகளோடு இல்லம் திரும்ப, நம் தலைவர் மட்டும் இன்னும் வரவில்லையே என்று ஏங்குவது முல்லைப் பாடல்களுக்குரிய பொதுத் தன்மையாகும். இந்தப் பொதுத்தன்மையை மேற்சுட்டிய குறுந்தொகைப் பாடலில் காணமுடியவில்லை. மாறாக, நெடுந்தொலைவு சென்ற பசுக்கள் அங்கேயே தங்கிவிட்டதுபோல, தலைவனும் அங்கேயே தங்கிவிட்டான் என்று ஒப்பிட்டுக் காட்டும் நிலையைத்தான் காண முடிகிறது. இங்கு, நெடுந்தொலைவில் பசுக்கள் தங்க வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வேற்று நிலத்திற்குக் கால்நடைகளை ஓட்டிச் செல்லும்பொழுது நீண்ட தொலைவு நடக்க முடியாத கன்றுகளை வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்க வேண்டும். அக்கன்றுகளை வீட்டில் இருந்த பெண்கள் கவனித்திருக்க வேண்டும். அவ்வாறான சூழலில் ஏங்கும் கன்றின் வருத்தத்தைத்தான் தலைவி தன்னுடைய வருத்தத்தோடு ஒப்பிட்டு இப்பாடலில் கூறுகிறாள் எனலாம்.
சங்க இலக்கியத்தில் கீதாரி என்ற சொல் இடம்பெறவில்லை. அதேபோல இன்றிருக்கும் கீதாரிகளின் வாழ்க்கையும் சங்க இலக்கியத்துள் முழுமையாகச் சொல்லப்படவில்லை. ஆயினும், கால்நடைகளை வேற்று நிலத்திற்கு ஓட்டிச் சென்று தங்கியிருந்த
நிலையைப் பாடல் சுட்டியிருப்பது கீதாரிகளின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்க ஓர் அரிய குறிப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com