இன்பம் தரும் இளவேனில்

சொல் எளிமையும், தமிழ் இனிமையும் புகழேந்திப் புலவரின் தனிச்சொத்து. புகழேந்தியின் கரங்களில், இன்ப இளவேனில் புடமிட்ட பொன்னாகிறது.
இன்பம் தரும் இளவேனில்
Updated on
1 min read

சொல் எளிமையும், தமிழ் இனிமையும் புகழேந்திப் புலவரின் தனிச்சொத்து. புகழேந்தியின் கரங்களில், இன்ப இளவேனில் புடமிட்ட பொன்னாகிறது.
முல்லைக்கொடி தினைத் தட்டையின் மீது பற்றிப் படர்ந்து மலர்கள் பூக்கும். மலை சூழ்ந்த நிடத நாட்டு மன்னன் நளன் எதிரில் இளவேனில் பருவம் வருகிறது. வெற்றிமிக்க மன்மதனோ தன் கரும்பு வில்லைத் தாங்கி வருகிறான். தென்றல் காற்றோ மலர்த் தேனைத் தெருவெல்லாம் தெளிக்கிறது. இவ்வாறு இளவேனில் இன்பகரமாக வருகிறது என்கிறார் புகழேந்தியார்.

வென்றி மதவேள் தன்வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலரும் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர் (நள.10)

ஆனால், காமனையும் கலக்குங் காலம் இளவேனில் என்கிறார் சூளாமணி ஆசிரியர். கிள்ளை மொழி பேசும் கிளிகளே! பெண்களே! குளிர்ந்த குளமும், மண்டபமும் குவளை மலரும், ஆம்பல் மலரும், தாமரையும் உங்கள் அழகிய கண்களைப் போல் மலர்ந்து, கவர்ச்சிமிக்க காமனையும் கலக்குகின்றனவே! இவ்வின்ப இளவேனிற் காலத்தில் காதலரைப் பிரிந்தோர் கண நேரமும் உயிர் தரிப்பது அரிதே! மிக அரிதே! என்கிறார். அப்பாடல் இதுதான்:

காவியும் செங்கழு நீரும் கமலமும் கண்விரிந்து நனி
வாவியும் மண்டபமும் எழில் மதனனையு மிருட்டுமே
தூவி அருங் கிளியன்ன சொல்லினீர்! துணையில்லார்
ஆவி உய்த்துள்ளாதல் அரிதே இவ் இளவேனில்!

"இயற்கை கட்டிய மேடையில், தன் திறம் காட்ட வந்த நடிகனே இளவேனில்' என்கிறார் சிந்தாமணி ஆசிரியர். இளவேனில் பருவத்தை ஒரு நடிகனாகக் காணுகின்றார்.

இளி என்று பண்ணை இசைக்கும் வண்டேயாழ்!
கருங்கண் கொண்ட தும்பியே குழல்! ;
கூவித் திரியும் குயிலே முழவு!
காதலர் பிரிந்த மங்கையர் துயரே,
பாணர்கள் இசைக்கும் பாடல்!
மலர் பூத்த சோலைகளே, மணி அரங்கம்!

ஆம் "வண்டு யாழ் இசைக்க, தும்பி குழல் அகவ, குயில் முழவு அதிர, பாணர் பணி இயம்ப இளவேனில் என்னும் நடிகன், அவ்வியற்கை மேடையில், தன் ஆடல் அழகைக் காட்டுகிறான்' என்று கற்பனை செய்து மகிழ்கிறார். சிந்தாமணி ஆசிரியர்.

இளிவாய்ப் பிரசம் யாழாக
இருங்கள் தும்பிகுழலாக
கனிவாய்க் குயில்கள் முழவாகக்
கடிபூம்பொழில் கண் அரங்காகத்
தளிர்போல் மடவார் தணந்தார்தம்
தடந்தோள் வளையும் மாமையும்
விளியாக் கொண்டிங் கிளவேனில்
விருந்தா ஆடல் தொடங்கினான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com