பார்த்துக் கடன் கொடுங்கள்!

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் இசையிலும் உயர் வல்லமை படைத்தவர். 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபாலகிருஷ்ண பாகவதர், அவர்தம் தந்தையாரின் உற்ற நண்பர்.
பார்த்துக் கடன் கொடுங்கள்!
Updated on
2 min read

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் இசையிலும் உயர் வல்லமை படைத்தவர். 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபாலகிருஷ்ண பாகவதர், அவர்தம் தந்தையாரின் உற்ற நண்பர். உ.வே.சாமிநாதையரை மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின்பால் தமிழ் கற்குமாறு அவரை மயிலாடுதுறையில் விட்டுச்சென்ற அவருடைய தந்தை, தம் நண்பர் பாகவதரிடம் அவர் சங்கீதமும் பயிலுமாறு ஏற்பாடு செய்திருந்தார். சில காலம் சென்ற பின் இதை அறிந்த பிள்ளையவர்கள் இசைக்கல்வியை அனுமதிக்காததால், உ.வே.சா., அதை விடுத்துத் தமிழ் ஒன்றையே பயின்றார். இசையுலகின் இழப்பு தமிழ் இலக்கியத்தின் செழிப்பு என்றாகியது!
ஆயினும், தன் அடிப்படை இசையறிவையும் ஆர்வத்தையும் மறவாத உ.வே.சா., 'சங்கீத மும்மணிகள்' என்னும் ஒரு நூலை இயற்றியுள்ளார். அதில் கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் ஆகிய மூன்று இசை மேதைகளின் வரலாறுகளையும் அவர்தம் சிறப்புகளையும் விரித்துள்ளார். இதில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய ஒரு கீர்த்தனையே இக்கட்டுரையின் கருப்பொருளாகும்.
இலக்கியத்தில் நகைச்சுவை என்பது தமிழில் பண்டு தொட்டே நின்று வருவது. நையாண்டி, வஞ்சப்புகழ்ச்சி, வசை எனப் பல வடிவங்களைத் தாங்கி வருவது இது. சங்க இலக்கியங்களிலும், நீதிநூல்களிலும், பெருங்காப்பியங்களிலும், காவியங்களிலும், திருமுறைகளிலும் இது பல இடங்களிலும் காணப்படுவது. இதன் ஓங்குகாலம் பிற்காலப் புலவர் காலம் எனலாம். காளமேகம் போன்ற புலவர்கள் பலர் இத்துறையில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றி அங்கதத் துறைக்கு வளம் சேர்த்தனர்.
இவையெல்லாம் இவ்வாறு இருப்பினும் 'வாக்கேயக்காரர்கள்' என்னும் இசைப்பாடல் ஆசிரியர்கள் இதில் பெரிதும் நுழைவதில்லை. இதற்கு விதிவிலக்காக கோபாலகிருஷ்ண பாரதியார் நகைச்சுவை ததும்ப, முழுமையான கீர்த்தனை ஒன்றையே படைத்துள்ளார் என்பது உவகையும் வியப்பும் ஒருங்கே ஊட்டும் செய்தியாகும். அது பற்றிய விவரத்தை உ.வே.சா., தம் நூலில் தந்த இன்தமிழ் நடையிலேயே ஈங்கு வைத்துள்ளேன்.
''மாயூரத்தில், ஒரு சமயம் ஒருவருடைய வேண்டுகோளின்படி அவருடைய வீட்டிற்குப் பாரதியார் சென்றிருந்தார். காலையில் ஸ்நானம் முதலியன முடித்துக்கொண்டு ரேழியில் (இடைகழியில்) ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவ் வீட்டிற்குரியவரும் வேறொருவரும் இரைந்து பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ விவாதம் நடப்பதுபோலத் தோன்றிற்று. அந்தச் சத்தத்தால் பாரதியாருடைய ஜபத்திற்கு அதிக இடையூறு ஏற்பட்டது.
சிறிது நேரங்கழித்து வீட்டுக்குரியவர் இவரிடம் வந்தார். அவரை நோக்கி இவர், ''யாருடனோ இரைந்து பேசிக்கொண்டிருந்தீர்களே; என்ன காரணம்?'' என்று கேட்டார். அவர், ''அவன் ஒரு கடன்காரன்; என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு பல வருஷங்களாகியும் திருப்பிக் கொடுக்கவில்லை. கேட்டபோதெல்லாம் ஆகட்டும், இதோ இரண்டு நாளிற் கொடுத்துவிடுகிறேன் என்கிறான். அவன் வீதிவழியே போனான். அவனைத்தான் அழைத்துப் பணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மடையன்; காரணம் இல்லாமல் இரைச்சல் போட்டான்'' என்கிறார்.
பாரதியார், ''ஒருவருக்குப் பணம் கொடுக்கும்போது பரோபகாரமாக அதைத் தருமம் செய்துவிடலாம்; கடன் கொடுப்பதாக இருந்தால் சரியானவர்களைப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டுச் சிறிதுநேரம் மெளனமாக இருந்தார். பிறகு அவருக்குக் கூறிய அறிவுரையையே விரித்து ஒரு கீர்த்தனமாக இயற்றிப் பாடினார். அது வருமாறு:

இராகம்: காபி தாளம்: ஆதி.

(பல்லவி)
பார்த்துக் கடன் கொடுங்கள் - மனிதரைப்
பார்த்துக் கடன் கொடுங்கள்

(அநுபல்லவி)
பார்த்துக் கடன்கொடுக் காவிடின் பணம் போகும்
பழுதை போலிருந்து பாம்புபோ லாகும் (பார்த்துக்)

(சரணங்கள்)
கொடுத்த கடன் வெறும் அடகுவி சாரம்
கோர்ட்டுக்கச் சேரிக்குப் போவது கோரம்
கடுத்துக்கேட் டாலவர் மனதுவி காரம்
களவு போனால் துன்பம் அதுஒரு வாரம் (பார்த்துக்)

வாத்து வழக்குகள் பேசக் கொண் டாட்டம்
வாரண்டு வந்தால் காரைக்கா லோட்டம்
பாதக மில்லாமல் குடியிருந் தீட்டம்
பகல்சேர் திருடர் களிலிவர்சி ரேஷ்டம் (பார்த்துக்)

பல்லைக் காட்டிப் பணங்களை வாங்குவர்
பணத்தைத் திருப்பிக் கொடாமலே தூங்குவர்
அல்லும் பகலு மலைந்தாலும் தந்திடார்
அளித்தவர் வாழுந் தெருவிலும் வந்திடார் (பார்த்துக்)

இதைக்கேட்ட அவ்வீட்டுக்காரர், ''உலக அநுபவத்துக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கிறது'' என்று கூறி வியந்தார். இவ்வாறு இவ்வரலாற்றை முடிக்கின்றார் உ.வே.சா.
காலம் மாறிவிட்டது. ஆனால் காட்சி மாறவில்லை. அன்றைய கடனாளிகள் அன்று பிரெஞ்சு ஆட்சியிலிருந்த காரைக்காலுக்குத் தப்பி ஓடினார்கள். இந்தியா முழுதும் ஒற்றைக் குடியரசாகியுள்ள இன்றைய உலகிலோ கடனாளிகள் அயல்நாடுகளுக்குத் தப்பி ஓடுவதையே நாம் காண்கின்றோம்! ஓட்டம் என்னவோ ஓயவில்லை.
- டாக்டர் த.ரா.சுரேஷ்
மனநல மருத்துவர்


நன்றி : ஓவியம் - ராஜராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com