தேசப்பிதாவைப் போற்றும் இலக்கியங்கள்

மகாத்மா காந்தியடிகள் தமிழ்மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றின் மீது பேரன்பு கொண்டவர். தமிழ்ப் புலவர்கள் அவர் மீது பல வகைப்பட்ட பாமாலைகளை இயற்றியுள்ளனர்.
தேசப்பிதாவைப் போற்றும் இலக்கியங்கள்

மகாத்மா காந்தியடிகள் தமிழ்மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றின் மீது பேரன்பு கொண்டவர். தமிழ்ப் புலவர்கள் அவர் மீது பல வகைப்பட்ட பாமாலைகளை இயற்றியுள்ளனர். இப்புலவர்கள் காந்தியடிகளைப் போற்றி புராணம், சிந்தாமணி, காவியம், பிள்ளைத்தமிழ், ஆனந்தக்களிப்பு, கலம்பகம் எனப் படைத்து தேசபக்தர்களையும் தமிழ் அன்பர்களையும் மகிழ்வித்துள்ளனர். 
பண்டிதை அசலாம்பிகையம்மையார் இயற்றிய காந்தி புராணம் 1925இல் முதலில் ஏழு காண்டங்கள் வெளிவந்தன. பின்னர் எட்டாம் காண்டத்தைப் பாடிச் சேர்த்து 1952இல் வெளியிட்டுள்ளார். இப்புராணத்தில் காந்தியடிகள் அவதாரம், நாளும்கோளும், இளமையும் கல்வியும், மேனாடு செல்லவிடைபெறுதல் எனத் தொடங்கி ஆங்கிலேயர் கொடுமை, சுயராஜ்யக் கட்சித் தோற்றம், சுதந்திரப் போராட்டம், நாடு விடுதலை அடைதல், தேசபக்தர் மரணம் முதலியவற்றை 1787 பாக்களால் படைத்துள்ளார். காந்தியடிகள் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்ததை, 
ஆயி ரத்தினோ டெட்டுற ஆறுபா னொன்பான்
மேய வையிரு மதியென விளம்பும் அக்டோபர்
தூய தேதியும் இரண்டெனச் சொல்லுவார் துகள்தீர்
நாய கன்பிறந் திட்டநாள் ஆங்கில நடையோர்!
என்று முதற்காண்டம் 46ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். 
இ.மு.சுப்பிரமணியபிள்ளை இயற்றிய உலகப் பெரியார் காந்தி சிந்தாமணி (1948) எனும் நூல் தோற்றுவாய், பிறப்பு, இளமையும் கல்வியும், திருமணம், இந்தியாவில் வாய்மைப்போர், மாமுனிவர் மறைவு எனப் 
பதிமூன்று தலைப்புகளில் இயற்றப்பட்ட வசன கவிதையாகும். 
டி.கே.ராமானுஜ கவிராயர், மகாத்மா காந்தி காவியம் (அ) மாகாவியம் (1975) என்ற நூலில் காந்தியடிகளின் வரலாற்றை இரு காண்டங்களாகப் பகுத்து, 16 படலங்களில் பாடியுள்ளார். இளம்பருவ காண்டத்தில் முற்காலப் புலவர்கள் மரபுப்படி ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், பொதுவியல் படலம், நகரப்படலம், உற்பவப்படலம், முன்னிகழ் படலம், திருமணப்படலம், மலினந்தீர் படலம் முதலிய 13 படலங்களும் நேதள காண்டத்தில் முரண்படு படலம், மந்திரப்படலம், சத்தியவெற்றிப்படலம் ஆகிய மூன்று படலங்களும் உள்ளன. 
மு.கோ.இராமன் இயற்றிய காந்தி அடிகள் பிள்ளைத்தமிழ் (1949) ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பாடல் வீதம் பத்துப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. வருகைப் பருவத்தில் காந்தியை அழைப்பதை,
தீண்டா மைக்கும் கட்குடிக்கும்
செலவு கொடுத்த நலப்பெரியோய்
தேசீ யப்போர் நடத்த வந்து
திரளு மிளைஞர் அனைவோர்க்கும்
வேண்டாம் மறப்போர் அறப்போரே
விழைந்து கொள்ளற் பாலதென..
தூண்டார் வந்தெந் நாட்டவரும்
தொடர்ந்துன் னடியைப் பின்பற்றும்
தூய்மை யுடையோய் துரிசறுப்போய்
துரியங் கடந்தே ஒளிர்கிற்போய்
காண்டற் கரிய கடவுளருட்
கருணை உருவே வருகவே
காந்தம் போல்வாய் காந்தியுளாய்
காந்தி வருக வருகவே.

என எளிய நடையில் அமைத்துப் பாடியுள்ளார். மேலும், காந்தி பிள்ளைத்தமிழ் நூல் இரண்டை முறையே ந.சுப்ரமண்யனும் (1990), காரைக்குடி ராய.சொக்கலிங்கமும் இயற்றியுள்ளனர். இப்பிள்ளைத்
தமிழ் நூல்களில் பத்துப் பருவங்களும் முழுமையாக அமைந்துள்ளன. 
வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய மகாத்மா காந்தி ஆனந்தக்களிப்பு (1961) நூலில் காந்தியடிகளின் சிறப்புகளை, 

காந்தியைப் போற்றிசெய் வோமே - அந்தக்
கனவான்செய் நன்றியை மறவாமல் நாமே!
சாந்தி சாந்தியென் றோதி - வெம்புந்
தட்டுத் தடைகளெல்லாம் சட்டத்தால் கோதி
பாந்தமாய் வெள்ளையர் சாதி - மெச்சிப்
பரிவுடன் சுதந்திரம் தரச்செய்த சோதி.

என்ற அடிகளில் சுதந்திரம் பெற்றுத் தந்ததைக் குறிப்பிடுகிறார். 
கி.வேங்கடசாமி ரெட்டியார் இயற்றிய மகாத்மா காந்தி அடிகளின் மீது நெஞ்சுவிடுதூது (1934) 253 கண்ணிகளைக் கொண்டது. நெஞ்சைத் தூதுவிடும் முறையில், காப்பு, அவையடக்கம், நூல், சரித்திரச்சருக்கம், தசாங்கம், தீ நட்பு விலக்கல் என அமைத்துள்ளார்.
இந்நூலை வெளியிடுவதற்கு ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், இராதாபுரம் பி.ஆர்.அப்பாஜிரெட்டியார் எனப் பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். மகாத்மா காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு காந்திக் கலம்பகம் (1983) எனும் நூலை முனைவர் பெ.சுயம்பு இயற்றியுள்ளதுமம் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com