சொல்லும் மலரும்

கவிதையின் நோக்கம் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் அழகான வடிவம் தருவதே. அதற்குத் துணை செய்வதை அணி என்கிறது இலக்கணம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ள

கவிதையின் நோக்கம் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் அழகான வடிவம் தருவதே. அதற்குத் துணை செய்வதை அணி என்கிறது இலக்கணம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ள இலக்கணத்தில் அணி இலக்கணத்தை அழகுறச் சொல்லும் நூல், தண்டி கவி தந்த தண்டியலங்காரம். தண்டியலங்காரத்தை உரைதரு நூல் என்பர். அதாவது , இலக்கணத்தை இயற்றிய ஆசிரியரே அதற்கென உதாரணச் செய்யுளையும் இயற்றி உரையுடன் தருவது. தண்டி கவி இயற்றிய உதாரண செய்யுள்கள் பலவும் நேரிசை வெண்பாக்களாக அமைந்திருப்பதே அதன் தனிச்சிறப்பு.

"அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை'

"தோன்றி' மலர்கள் மலர்ந்தன. "காயா' செடிகள் மலர்ந்தன. அழகிய அரும்புகளை உடைய முல்லைப் பூக்கள் மலர்ந்தன. கொன்றை மலர்கள் குளிர்ச்சியுற்று அதன் இதழ்கள் மலர்ந்தன. கருவிளைகள் மலர்ந்தன. காந்தள் குலைகள் மலர்ந்தன.
பருவ காலம் வந்தவுடன் மலர்கள் மலர்கின்றன. மலர்தல் எனும் அழகைச் சொல்ல, அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விரிந்தன என்று அடுக்கடுக்காகப் பல சொற்களால் சொல்லி பல்வகையான மலர்களும் மொட்ட 
விழும் வண்ணமயமான அற்புதக் காட்சியைக் கண்முன் கொண்டுவந்து, மலர்வனத்திடையே நம்மை நிறுத்தி வசந்தத்தை உணரச் செய்கிறது இந்த நேரிசை வெண்பா. அடுத்தொரு நாலடியாரின் நேரிசை வெண்பா,

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்'

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் புலர்வதன் மூலம், நம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை எண்ணாமல், நாள்தோறும் வாழ்நாள் வளர்ந்துகொண்டே வருகிறது என்றெண்ணி மகிழும் இயல்புடையவர்கள் அறியாமையினால் வாழ்வை இழப்பவர்கள் ஆவர். 
வைகல் என்பது நாள். ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளை நகர்த்திக்கொண்டே இருக்கிறது எனும் நிலையாமை உண்மையையும் நாள்களின் ஓட்டத்தையும் இந்த ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் உணரச்செய்து நம் மனத்தில் தெளிவை ஏற்படுத்துகிறது இந்த வெண்பா. 
இப்படி, ஒரு சொல்லோ அல்லது பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகுறப் பொருளை விரியச் செய்வதை பின்வருநிலையணி என்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com