
மனிதர்களால் சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் நிலையில், உலகைப் காப்பதில் முக்கியமான பங்கு வகித்துவரும் ஐம்பூதங்களைப் (பஞ்சபூதங்கள்) பாதுகாக்க வேண்டியதும், அதே மனிதர்களின் கடமையாகும். இதனால்தான் இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமை யுடைத்து; காற்றும் இனிது; நீர் இனிது; நிலம் இனிது என அனைத்தையும் இனிதாகக் கண்டார் மகாகவி பாரதி. இவற்றை வசனக் கவிதையில் காணலாம்.
உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ முதலிடம் பெற்று துணை நிற்பது காற்று. அதனால்தான் காற்றே உயிர் என்றார் பாரதி. சிறுத்துப் போன சிற்றெறும்புக்குக்கூட உயிர்வாழ உற்ற துணையாவது காற்று. உடல் சிறுத்தாலும் காற்றாகிய உயிர்த்துணையோடு செம்மையான வாழ்வை அது அமைத்துக் கொள்கிறது என்கிறார்.
""சிற்றெறும்பைப் பார்; எத்தனை சிறியது. அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு, எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது; யார் வைத்தனர்? மஹாசக்தி; அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது; உறங்குகின்றது; மணம் செய்து கொள்கின்றது; குழந்தை பெறுகிறது; ஓடுகிறது; தேடுகிறது; போர் செய்கிறது; நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்'
என சுவாசக் காற்றைப் பயனுள்ள வழியில் சிற்றெறும்பு செலவழிக்க, மனிதனோ காற்றை மாசடையச் செய்வது எந்த வகையில் நியாயம் என்கிறார். காற்று நம்மை நோயின்றிக் காக்கும். மலைக்காற்று நல்லது; கடற்காற்று மருந்து; வான் காற்று நன்று'' என்கிறார்.
ஆனால், ஊர்க்காற்றை மனிதர்கள் பகைவனாக்கி விடுகின்றனரே என்று காற்று மாசடைவது கண்டு வருத்தம் கொள்கிறார். அதனால்தான் காற்று வரும் திசைகளில் மனிதனைத் தூய்மைப் பேணக் கூறுகிறார்.
"அவன் (காற்று) வரும் வழியில் சேறு தங்கலாகாது; நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது; புழுதி படிந்திருக்கலாகாது; எவ்விதமான அசுத்தமும் கூடாது; காற்று வருகின்றான்; அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்; அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்; அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும்பொருள்களைக் கொளுத்தி வைப்போம்; அவன் நல்ல மருந்தாக வருக! அவன் நமக்கு உயிராகி வருக! அமுதமாகி வருக! காற்றை வழிபடுகின்றோம்; அவன் சக்தி குமாரன்; மஹாராணியின் மைந்தன்; அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க!'
என இன்றைய தூய்மைக்கு அன்றே காற்றின் மூலம் பரிசுத்தம் பேசியவர் மகாகவி பாரதி. அவர் என்றென்றும் ஒரு தீர்க்கதரிசிதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.