பாரதியார் மணிமண்டபம் தோன்றிய வரலாறு

தேச விடுதலை, தேசிய ஒருமைப்பாடு, பெண் விடுதலை, பொருளாதார விடுதலை, தேசிய நெறி ஆகிய அடிப்படை அம்சங்களை கூர்மையாகக் கவனித்து அறிந்தவர் பாரதியார். தேச விடுதலை இயக்கம் என்பது
பாரதியார் மணிமண்டபம் தோன்றிய வரலாறு

தேச விடுதலை, தேசிய ஒருமைப்பாடு, பெண் விடுதலை, பொருளாதார விடுதலை, தேசிய நெறி ஆகிய அடிப்படை அம்சங்களை கூர்மையாகக் கவனித்து அறிந்தவர் பாரதியார். தேச விடுதலை இயக்கம் என்பது பாரதிக்கு ஒரு புண்ணிய திருப்போர். வேள்வியில் இது போல் வேள்வி ஒன்றில்லை என்று கருதி செயலாற்றிய கவிஞர் பாரதியார். தமிழகத்தின், பாரதத்தின் மறுமலர்ச்சிக்காக தவங்கிடந்த கவிஞர் அவர்.
 ஒரு ஜாதி ஒரு உயிர்: பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. விருப்புகள் இருக்கலாம், பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்திலேயே உயர்வு, தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம், மத விரோதங்கள் இருத்தலாகாது. இவ்வுணர்வே நமக்கு சுதந்திரமும், அமரத்தன்மையும் கொடுக்கும் என்று பாரத நாட்டின் ஒருமைப்பாடு பற்றி பாரதியார் வற்புறுத்தி கூறியுள்ளார்.
 தனது காலத்தின் கதியை நன்கு உணர்ந்து அவ்வப்போது அதன் சாரத்தை, நல்ல அம்சங்களை இனம் காட்டிய கவிஞர் பாரதியாருக்கு அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென ஆசிரியர் கே.பி.எஸ். நாராயணன் விரும்பினார். கே.பி.எஸ். நாராயணன் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு எட்டயபுரத்தில் வாழ்ந்து வந்தவர். அவ்வப்போது நான் அவரிடம் உரையாடியதில், பாரதி மணி மண்டபம் எட்டயபுரத்தில் அமைந்த பணி குறித்து சில செய்திகளைக் கூறினார்.

 1942-ஆம் ஆண்டு கே.பி.எஸ். நாராயணன் திருநெல்வேலியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். அப்போது "நெல்லை வாலிபர் சங்கம்' வாரந்தோறும் நடத்தும் கூட்டத்துக்கு செல்லும் பழக்கம் அவருக்கு உண்டு. எழுத்தாளர்கள் தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன் ஆகியோர் அந்தக் கூட்டங்களில் பாரதியார் பற்றி சிறப்பாக பல புதிய செய்திகளைப் பேசியதை கே.பி.எஸ். கேட்டுள்ளார். நெல்லையில் ஆசிரியர் பள்ளியில் பயிற்சி முடிந்த பின்னர் கே.பி.எஸ். நாராயணன் எட்டயபுரம் திரும்பினார்.
 கே.பி.எஸ். நாராயணன் எட்டயபுரத்தில் ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்கியதும், அங்கு பாரதி பெயரால் சங்கம் அமைக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு மேலோங்கியது. இதன் விளைவாக எட்டயபுரத்தில் கவிஞர் பா.நா. கணபதி வீட்டில் "பாரதி இலக்கிய மன்றம்' என்ற அமைப்பை கே.பி.எஸ். நாராயணன் அமைத்தார். பா.நா.கணபதி, தி. சுவாமிநாதன், கலிங்கன் மு. கைலாசசுந்தரம், டி.பி. பசுபதி முதலிய நண்பர்கள் பாரதி இலக்கிய மன்றத்தில் இணைந்து செயல்பட்டார்கள். மன்றத்தின் சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரி பேராசிரியர் முத்துசிவன், பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், பேராசிரியை ஞானாம்பாள், நாவலர் சோமசுந்தர பாரதி, "தமிழ்த் தென்றல் 'திரு.வி.க., தொ.மு.சி. ரகுநாதன், ச.பா. பிச்சைக் குட்டி ஆகியோர் பாரதியாரின் கவித்துவம் பற்றி அந்த இலக்கியக் கூட்டங்களில் புகழ்ந்து பேசினார்கள்.
 பாரதி இலக்கிய மன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், அதே சமயத்தில் பாரதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க மன்ற உறுப்பினர்களுக்கு வசதி வாய்ப்பில்லை. திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பேராசிரியர் முத்துசிவன் கூறிய ஆலோசனைப்படி, எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடத்தலாம், விழாவுக்கு டி.கே.சி.யை அழைத்து வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம் என்ற கருத்துக்கு நண்பர்கள் இசைவு தெரிவித்தார்கள். இதன்படி 1945-ஆம் ஆண்டு தமிழிசை விழா, எட்டயபுரம் ராஜா பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்கி, டி.கே.சி., எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர் அந்தத் தமிழிசை விழாவில் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர் எட்டயபுரம் ஜமீன்தாரின் மைத்துனர் ரசிகமணி அமிர்தசுவாமி பங்களாவில் அனைவரும் தங்கினார்கள். அப்பொழுது கே.பி.எஸ். நாராயணன் மற்றும் பாரதி இலக்கிய மன்ற உறுப்பினர்கள், எட்டயபுரத்தில் பாரதி பெயரில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை ஆசிரியர் கல்கியிடம் தெரிவித்தார்கள். இதற்கு கல்கி, "உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும், கவலைப்படாதீர்கள்'' என்று உற்சாகமாகப் பதில் கூறினார்.
 இதன் பின்னர் சென்னை சென்றவுடன் எட்டயபுரத்தில் பாரதியாருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்று கல்கி அவருக்கே உரிய பாணியில் தலையங்கம் எழுதினார். ஆச்சரியம் என்னவென்றால், அடுத்த வாரமே கல்கி பத்திரிகைக்கு பாரதியார் மண்டபத்துக்கு நிதி வரத் தொடங்கியது. மண்டப நிதிக்கு மக்கள் அன்பளிப்பை வாரி வழங்கினார்கள். நாலா திசைகளிலும் இருந்து கல்கிக்கு நிதி சேர்ந்தது. கடல் கடந்த நாடுகளில் இருந்தும் தமிழர்கள் பாரதி மண்டப நிதிக்கு பணம் அனுப்பினார்கள்.
 பாரதி மண்டப நிதிக்கு கலைஞர்களும் காணிக்கை அளித்தார்கள். நவாப் ராஜமாணிக்கம் கல்லிடைக்குறிச்சியில் நாடகம் நடத்தி, அதன்மூலம் வசூலான பணம் முழுவதையும் பாரதி மண்டப நிதிக்கு ஆசிரியர் கல்கியிடம் கொடுத்தார். அதே போன்று திருச்சியில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய ஒüவையார் நாடகம் மூலம் கிடைத்த வசூல் பணத்தை கல்கியிடம் கொடுத்தார்கள். "எட்டயபுரம் பாரதியார் ஞாபக சின்னம் முயற்சி விஷயத்தில், தமிழ்நாட்டு தினசரிகள் முதல், மாதப் பத்திரிகைகள் வரையில் ஒருமுகமாக ஆதரித்து எழுதியதுடன் மேலும் மேலும் நிதி உதவி செய்தன. மொத்தத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள், எழுத்தாளர்களின் பேராதரவினால்தான் பாரதி ஞாபக சின்னத்தின் முயற்சியானது கொஞ்சம் பெரிய முயற்சியாகவே வளர்ந்து விட்டது' என்று செல்லம்மா பாரதி பாராட்டி எழுதியுள்ளார்.
 எட்டயபுரத்தில் பாரதி நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து கல்கி பல கட்டுரைகள் எழுதினார். "பாரதி பிறந்தார்' என்ற நூலின் முன்னுரையில் சின்ன அண்ணாமலை பின்வருமாறு விவரிக்கிறார்:
 ஆசிரியர் கல்கி ஆரம்பித்த விஷயத்திற்கும், ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ்நாட்டில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. 5 ஆயிரம் ரூபாயாவது சேருமா என்று மிகவும் சந்தேகத்தோடு ஆரம்பித்த நிதி வசூலானது 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போய்விட்டது. நாளடைவில் மிகப்பெரிய நிதியாக மாறி, போதும் போதும் என்று கல்கி ஆசிரியரே அறிவிக்கும் அளவுக்கு பெருகி விட்டது.
 இவ்வாறு சேர்ந்த பாரதி ஞாபகார்த்த மண்டப நிதியைக் கொண்டு ஆசிரியர் கல்கி, தமிழ் மக்களின் பூரண சம்மதத்துடன் மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்து முடித்தார். ஞாபகார்த்த நிதியிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தைத் தனியாக ஒதுக்கி வங்கியில் டெபாசிட் செய்து, அதிலிருந்து வரும் வட்டித்தொகையை மூன்று மாதத்துக்கு ஒரு முறை 112 ரூபாய் 8 அணா வீதம் பாரதியாரின் வாழ்க்கைத் துணைவிக்கு அவருடைய வாழ்நாள் காலம் வரை உதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.
 இவ்வாறு எட்டயபுரத்தில் அமைக்க திட்டமிட்ட பாரதியார் நினைவுச் சின்ன நிதிக்கு எட்டயபுரம் ஜமீன்தார் ரூபாய் 501 நன்கொடை அனுப்பினார். அத்துடன் நினைவுச் சின்னம் கட்டுவதற்கு நிலத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார். ஞாபகச் சின்ன கட்டடம் கட்டுவதற்கு எட்டயபுரம் நடுவப்பட்டியில் செயல்பட்ட பாரதி வாசகசாலை அன்பர்கள் டி.வி. சேதுராமலிங்கம் பிள்ளை, கம்பவுண்டர் சீனிவாசன், முத்துராமகிருஷ்ணன் ஆகியோர் கே.பி. சுந்தராம்பாள் சங்கீதக் கச்சேரி நடத்தி வசூலான நிதி ரூபாய் 1,591யை ஆசிரியர் கல்கியிடம் கொடுத்தார்கள்.
 பாரதி நினைவுச் சின்னம் கட்டுவதற்கு கட்டட சிற்பம் வரைந்தது பற்றி 9-9-1945-இல் கல்கி இதழில் வெளியான கட்டுரையில் கீழ்க்கண்டவாறு ஆசிரியர் கல்கி குறிப்பிட்டுள்ளார்: "ஞாபக சின்னம் கட்டுவதற்கு ஒரு பிளான் போட்டுக் கொடுக்கும்படியாக கட்டட சிற்ப நிபுணர் ஸ்ரீ சித்தாலே என்பவரை கேட்டுக் கொண்டிருந்தோம். ஸ்ரீ எஸ்.எம். சித்தாலே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். கட்டட சிற்ப வேலையில் இந்திய தேசத்திலேயே பிரசித்தி பெற்ற நிபுணர். கீழ்நாட்டு சிற்பக் கலையின் தத்துவங்களை நன்கு உணர்ந்தவர். சாதாரணமாய் இம்மாதிரி ஒரு கட்டட பிளான் போட்டுக் கொடுப்பதற்கு பெருந்தொகையை சன்மானமாக வாங்கக் கூடியவர். மகா கவியின் ஞாபகார்த்த கட்டடத்துக்கு ஸ்ரீ சித்தாலே எவ்வித பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் பல தினங்கள் சிரமம் எடுத்துக் கொண்டு வேலை செய்து கட்டட சித்திரமும் பிளானும் போட்டுக் கொடுத்துள்ளார்'.
 சித்தாலேதான் தமிழிசைச் சங்கத்துக்கு செட்டி நாட்டு அரசர் ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றக் கட்டடத்தை வடிவமைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
 கட்டடக் கலை சிற்ப நிபுணர் சித்தாலே வரைந்த வரைபடத்துக்கு உகந்த முறையில் பாரதியார் நினைவுச் சின்ன கட்டட வேலை தொடங்கியது. 1945 ஜூன் 3ஆம் நாள் பாரதி ஞாபக சின்ன கட்டடத்துக்கு ராஜாஜி அடிக்கல் நாட்டினார். ""வெற்றிகரமாக நிறைவேறியது என்று சொல்லுகிறோமே அது என்னவென்று கேட்டால் இன்றைக்கு நடந்த வைபவம்தான்'' என்று ராஜாஜி எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த சின்னக் கட்டட அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் கூறினார். அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் கட்டட வேலை வேகமாகத் தொடங்கியது. கட்டட வேலை நடைபெறுவதை அவ்வப்போது எட்டயபுரம் ஜமீன்தார் மேற்பார்வையிடுவார். எட்டயபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த விவசாயிகள் தங்கள் மாட்டுவண்டிகளில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வந்தார்கள்.
 பாரதி நினைவுச் சின்னக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் நம்மிடையே வாழும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவும் கலந்து கொண்டார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படும் வரையில் இது வரையில் அளித்து வந்த உதவியையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து அளித்து வரும்படி எல்லா பத்திரிகை ஆசிரியர்களையும் எழுத்தாளர்களையும் வேண்டிக் கொள்கிறேன் என ஆசிரியர் கல்கி எழுதினார்.
 இவ்வாறு தமிழ் மக்களின் முழு ஆதரவுடன், ஒத்துழைப்புடன் பாரதி ஞாபகார்த்த மண்டபம் (பின்னாளில் பாரதி மணிமண்டபம் என அழைக்கப்பட்டது) காணி நிலத்திலே ஒரு கவின் பெறு மாளிகையாய்க் கட்டி முடிக்கப்பட்டது. இறுதியாக இந்தியா விடுதலை அடைந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 13-10-1947ஆம் நாள் பாரதி மணிமண்டபத்தை ராஜாஜி திறந்து வைத்தார். பாரதி மணிமண்டப திறப்பு விழாவில் மத்திய அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன், சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ஓமந்தூர் ரெட்டியார், பல அமைச்சர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். தமிழர்கள் அலைகடலென திரண்டார்கள். நாமக்கல் கவிஞர், தோழர் ப. ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவசங்கரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். திறப்பு விழாவில் பலரின் வற்புறுத்தலுக்கு இணங்க, பெருத்த கரவொலிக்கிடையே பேசினார் தோழர் ஜீவா. எம்.எஸ். சுப்புலட்சுமியின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
 பாரதி மணிமண்டப திறப்பு விழாவின் நிகழ்ச்சிகள் பற்றி கல்கி சிறப்பிதழில் ஓர் உணர்ச்சி மிக்க தலையங்க கட்டுரை எழுதினார் ஆசிரியர் கல்கி. அதிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு: நம் கண் முன்னே இதோ ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செந்தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது. தேசத்தின் மகா கவிக்கு ஒரு ஞாபக சின்ன மண்டபம் இதோ எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு புத்துயிர் அளித்த கவியரசருக்கு தமிழ் மக்கள் சமர்ப்பித்த காணிக்கை இதோ காணப்படுகிறது. இந்தியாவிலே முதன் முதலாக ஒரு மகா கவிக்கு ஞாபகார்த்த மண்டபம் கட்டிய பெருமையை தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இம்முயற்சிக்கு, இது போன்ற பிரயத்தனங்களுக்கு மகாத்மா காந்திஜி ஆசி வழங்கியுள்ளார்.
 இவ்வாறு அரும்பாடுபட்டு எழுப்பிய பாரதி மணிமண்டபத்தை பாரதி நூற்றாண்டு விழா நேரத்தில் தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி நிர்வாகப் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது. ஆனால்...? அரசு நிர்வாகப் பொறுப்பை மேற்கொண்ட பின்பு மண்டப வளாகத்தில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அப்போது முதலில் மக்களின் நன்கொடையால் எழுப்பப்பட்ட பாரதி மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியது, திறப்பு விழா நடத்தியது ஆகியவற்றை இனம் காட்டும் கல்வெட்டுகள் எங்கோ அகற்றப்பட்டுவிட்டன. அந்தக் கல்வெட்டுகளைத் தேடிப்பிடித்து உடனடியாக அங்கு மீண்டும் அமைக்க வேண்டும். அத்துடன் பாரதி மணிமண்டபத்தில் மக்கள், குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் விதத்தில் பாரதி மணி மண்டப அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா படங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
 உலகிலேயே, ஒரு கவிஞனுக்காக மக்கள் உவந்து நன்கொடை வழங்கி, அன்பளிப்பாகப் பெறப்பட்ட நினைவு மணிமண்டபம், மகாகவி பாரதியாருக்கு மட்டும்தான். அந்த மணிமண்டபத்தின் பெருமை இன்றைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும். பாரதியாரின் நினைவு நிலைத்திருக்கும் வகையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான டிசம்பர் 11 அன்று, தமிழ்க் கவிஞர்கள், இலக்கியவாதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் எட்டயபுரத்தில் கூடி அஞ்சலி செலுத்தும் தமிழ் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும். வாழ்க பாரதி! வெல்க தமிழ்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com