கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கவி பாடலாம் வாங்க - 35

மூவகை எதுகை: தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என்று மூன்று வகை உண்டு.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:21 pm

கி.வா. ஜகந்நாதன்

5- சிறப்பில்லாத எதுகை மோனைகள் (2)
 மூவகை எதுகை: தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என்று மூன்று வகை உண்டு. சீர் முழுவதும் ஒன்றி வருவது தலையாகெதுகை; ஓரெழுத்து மட்டும் ஒன்றி வருவது இடையாகெதுகை, மற்றவை கடையாகெதுகை.
 "கலைநவின்ற பெரும்புலமைக் கவிஞர்களைப் போற்றிசைத்து
 நிலைநவின்ற பன்னூல்கள் நேயத் துடனியற்றப்
 புலைநவின்ற மெய்யழிந்தும் புகழுடம்பு பெற்றவர்கள்
 அலைநவின்ற கடற்புவியில் அனைவரினும் மேலவரே'
 இதில் தலையாகெதுகை வந்தது.
 "அகர முதல எழுத்தெல்லா மாதி
 பகவன் முதற்றே உலகு' - இதில் இடையாகெதுகை வந்தது.
 "தக்கார் தகவிலர் என்பதவரவர்
 எச்சத்தாற் காணப் படும்' - இதில் கடையாகெதுகை வந்தது.
 மூவகை மோனை: சீர் முழுவதும் ஒன்றுவது தலையாகு மோனை. ஓரெழுத்தே ஒன்றுவது இடையாகு மோனை; பிற கடையாகு மோனை.
 "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
 பற்றுக பற்று விடற்கு' - இதில் உள்ள அடிமோனை முழுச்சீரும் ஒன்றி வந்தமையால் தலையாகு மோனை.
 "மாவும் புள்ளும் வாழும் வகையில்
 மாநில வுயிரெலாம் மகிழ்ந்தினி திருப்ப
 மாட்சிபெற் றிலகிய மன்னனிம் மன்னனே' - இதில் இடையாகு மோனை வந்தது. பிற வகையாக வருவன கடையாகு மோனை.
 வேறு சில எதுகைகள்: இரண்டாம் எழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தால் உயிரெதுகையாகும்.
 "துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள்
 அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி
 வடியமை யெஃகம் வலவயி னேந்தித்
 தனியே வருதி நீயெனின்
 மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே'
 இதில் இகரமாகிய உயிர் இரண்டாம் எழுத்துக்களில் வந்தமையால் உயிரெதுகை ஆயிற்று. ய, ர, ல, ழ என்னும் மெய்யெழுத்துக்கள் இடையே நிற்க ஒன்றினால் அது ஆசிடையிட்ட எதுகையாகும்.
 "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
 பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து'
 இதில் காமாண்ட, பூமாண்ட என்று இருந்தால் எதுகை சிறக்கும். ஆனால் முதலடியில் யகர ஒற்று இடையே வந்தது. இது ஆசிடையிட்ட எதுகை. ஆசு என்பது ஒட்டாத இரண்டு உலோகப் பொருள்களை ஒட்டும்படி இடையே அமைக்கும் பொருள்; "பற்றாசு' என்று அதனைச் சொல்வார்கள். அது போல இருப்பதனால் இதை "ஆசு' என்றார்கள்.
 "மாக்கொடி மாணையும் மவ்வற் பந்தரும்
 கார்க்கொடி முல்லையும் கலந்த பந்தரில்'
 இதில் இரண்டாமடியில் ரகர ஒற்று இடையில் வந்தது. இது ரகர ஆசிடையிட்ட எதுகை.
 "ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
 பால்வே றுருவின அல்லவாம்' - இது லகர ஆசிடையிட்ட எதுகை.
 "வாழ்கின்றே மென்று மகிழன்மின், வாணாளும்
 போகின்ற பூளையே போன்று' - இது ழகர ஆசிடையிட்ட எதுகை.
 "பாகமதிற் பெண்ணுடைய பண்பன் அடியார்கள்
 ஆர்கலிசூழ் வையக் கணி'
 இது ரகர ஆசிடையிட்ட எதுகை. அடிகளில் இடையிடையே ஒவ்வொன்றை விட்டு எதுகை அமைந்தால் இடையிட்டெதுகை யாகும்.
 "நீடா ரி வணென நீமனம் கொண்டார்
 கேளார் கொல்லோ காதலர் தோழி
 வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி
 பருவம் பொய்யாது வலனேர்பு வளைஇ
 ஓடா மலையன் வேலிற்
 கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே'
 இதில் ஒன்றுவிட்டு ஓரடியில் எதுகை வந்தமையால் இடையிட்டெதுகை யாகும். முதலிரண்டடியும் ஓரெதுகையாய்ப் பின் இரண்டடியும் மற்றோர் எதுகையாய் வந்தால் இரண்டடி எதுகை யாகும்.
 "துவைக்கும் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர்
 அவைப்பதம் பல்லுக் கழகொவ்வா முத்தம்
 மணங்கமழ்தார் அச்சுதன் மண்காக்கும் வேலின்
 அணங்கமுத மந்நலார் பாட்டு'
 இதில் இரண்டடி எதுகை வந்தது. இரண்டாம் எழுத்தன்றி மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தால் மூன்றாமெழுத்தொன் றெதுகை யாகும்.
 "பவழமும் பொன்னுங் குவைஇய முத்தின்
 திகழரும் பீன்றன புன்னை'
 இதில் மூன்றாம் எழுத்தாகிய ழகரம் ஒன்றும் எதுகை வந்தது. விட்டிசைத்தலால் வல்லொற்றைப் போல ஓசை அமைந்து எதுகை வந்தால் அது விட்டிசை வல்லொற் றெதுகை யாகும்.
 "பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை
 நொஅலையல் நின்ஆட்டை நீ'
 இதில் "நொ' என்ற குறிலுக்குப் பின் வரும் அகரம் விட்டு இசைப்பதனால் வல்லோசை உண்டாகிறது. இது விட்டிசை வல்லொற்றெதுகை. தொடர்ந்து பல சீர்களிலும் எதுகை வந்தால் அது வழி யெதுகை ஆகும்.
 "மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன்
 தொண்டியின்வாய்
 கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு
 கனமகர
 குண்டலங் கெண்டை யிரண்டொடு தொண்டையுங்
 கொண்டொர்திங்கள்
 மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ
 வருகின்றதே'
 இதில் வழியெதுகை வந்தது.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.