ஈன்றோள் நீத்த குழவி!

"பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை போன்ற  நிலை'  குறித்து புலவர் அரிசில்கிழாரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஈன்றோள் நீத்த குழவி!


"பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை போன்ற  நிலை'  குறித்து புலவர் அரிசில்கிழாரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரிசில்கிழார் தகடூரை ஆண்டுவந்த அதியமான்களில் ஒருவரான எழினியையும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் நட்பு பூண்டு ஒழுகி வந்தார்.

எழினி, இரும்பொறையால் கொல்லப்பட்டு அவன் நாடும் கைப்பற்றப்பட்டது. அதனைக் கண்ட அரிசில்கிழார், எழினியை இழந்த தகடூரின் நிலை குறித்தும்,

எழினி இறப்பால் அவன் நாடு படும் துன்பம் குறித்தும் இரண்டு உவமைகளைக் கூறி விளக்கியிருக்கிறார். 
"கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
...     ...    ...    
பொய்யா எழினி பொருதுகளம் சேர 
ஈன்றோள் நீத்த குழவிபோல
...     ...    ...    
நீ இழைந் தனையேஅறனில் கூற்றம்(புறம் 230:1-12)

"கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே தங்கி இருக்கவும், வெப்பமிக்க வழியில் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் அச்சமின்றித் தங்கவும், களத்தில் பெரிய நெற்குவியல்கள் காவலின்றிக் கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து, உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறந்தான். பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை போல் தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த, மிக்க பசியால் கலக்கமடைந்த துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு, அவனை இழந்து நாடு வருந்தியது. அறமில்லாத கூற்றமே! நீ அதைவிட மிக அதிகமாக இழந்தாய்' என்பது பாடலின் பொருள். மேலும், 
"வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்' (புறம் 230:12-14)
என்று இன்னொரு வஞ்சப்புகழ்ச்சியாக ஓர் உவமையைக் கையாள்கிறார். உழவனை எமனாக உருவகித்து அதனை விளக்குகிறார்."தன் வருங்கால வளமான வாழ்வுக்குத் தேவையான விளைச்சலைத் தரும் விதைகளைச் சமைத்து உண்ட வறுமையுற்ற குடியில் உள்ள உழவன்போல் இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு நீ நிறைவடைந்திருப்பாய்' என்கிறார்.
அதாவது, நல்ல விவசாயி என்றால் அவன்  மண்வளம் ஒன்றையே வளப்படுத்த விழைய வேண்டும். அதற்கு விதை அவசியம். ஆனால், அரிசில் கிழார் குறிப்பிடும் உழவன், தான் வைத்திருந்த விதை நெல்லை உணவாக்கித் தன் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொண்டான். அத்தகைய உழவனை வீழ்குடி உழவன்(வளமில்லாத குடி) என்று புலவரே குறிப்பிடுகின்றார்.
ஒரு விதை பலகோடி விருட்சம். அத்தகைய விதையாக இருந்தவன் எழினி. அவன் பல்லாயிரம் மக்களின் உயிரின் உயிராக இருந்தான். காலனே, நீ அவனை உழவனைப் போல அறிந்தும் அறியாமல் உண்டுவிட்டாய் என்கிறார்.
எழினிக்குக் காலன்தான் இறப்பைக் கொடுத்தான். இரும்பொறை அல்ல எனும் பொருள்பட விளக்கிச் செல்கிறார். சங்கப் புலவரின் கவித்திறமும் உண்மையை இலைமறைக் காயாகப் புலப்படுத்தும் பாங்கும் சிறப்புடையது. அதே சமயம் தாயற்ற குழந்தை படும்பாடு கவனிக்கத்தக்கது.
மேலும், நாயன்மார்களுள் ஒருவரான இளையான் குடிமாற நாயனார் வயலில் விதைத்த நெல்லை மீண் டும் கொணர்ந்து சிவனடியார்க்கு உணவு சமைத்த அந்த விவசாயி (உழவன்) வீழ்குடி உழவனா? என்பதும் அறியத்தக்கதாகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com